மக்களும் அவர்களுடைய ராணுவமும்

By சேகர் குப்தா

இந்தியத் தரைப்படை தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ரவாத்தை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜாலியான் வாலாபாக் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த ஜெனரல் டயருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்; உலகிலேயே சிறந்த தொழில்முறை ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவம் குறித்து அவர்களுக்குப் போதிய தெளிவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் பிரிட் டிஷ்காரர். ஆனால் இந்தியத் தரைப்படையின் அதிகாரி. அமிர்தசரஸின் ஜாலியன்வாலாபாக் பகுதியில் பைசாகி கொண்டாட்டத்தையொட்டிய கூட்டத்துக்காக, உயரமான சுற்றுச் சுவர்களுடன் கூடிய திடலில் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிகளுடன் வந்த 50 ஜவான்கள் சுட்டதில் 396 பேர் இறந்தனர். சுட்டவர்களும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

சில ஆண்டுகளுக்குள் இந்திய தரைப்படையைச் சேர்ந்தவர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறு போரில் எதிரெதிர் தரப்பிலிருந்து சண்டையிட்டார்கள். ‘அச்சு’ நாடுகளால் சிறைக் கைதிகளாகக் கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, பிரிட்டிஷார் தலைமையிலான இந்திய ராணுவத்துக்கு எதிராகச் சண்டையிட்டனர். இரு தரப்பிலுமே தங்களுடைய தளபதிகளுக்கு விசுவாசமாக, யுத்த தர்மப்படி சண்டையிட்டனர். அதே ராணுவம் 1947-48-ல் காஷ்மீரைக் காப்பாற்றுவதற்காக, ஒருகாலத்தில் தன்னிடமிருந்து பிறகு பிரிந்த பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட நேர்ந்தது. அப்போது இந்தியத் தரைப்படை தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் ராபர்ட் லாக்ஹார்ட் என்ற பிரிட்டிஷ்காரர். காஷ்மீரில் சண்டை ஓய்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு 1949 ஜனவரியில் ஜெனரல் கே.எம். கரியப்பா முதல் இந்தியத் தளபதியாக பொறுப்பேற்றார்.

பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்தபோது ஒரே படையாக இருந்த ராணுவம் பிறகு பாகிஸ்தான், வங்கதேசம் என்று அடுத்தடுத்து நாடுகள் பிரிந்தபோது மூன்று வெவ்வேறு தேசிய ராணுவமாக உருவெடுத்தது. பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களைக் கலைத்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய துடன் அரசியல் கட்சித் தலைவர்களைப் படு கொலையும் செய்தன அந்நாட்டு ராணுவங்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இந்திய ராணுவம் அரசியலில் தலையிடாமல் நாட்டின் வெவ்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகிய அனைத்துக்கும் வேலைவாய்ப்பில் இடம் தந்து, பன்மைத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது.

இந்திய ராணுவம் எப்படி உருவானது, வளர்ந்தது, பக்குவமடைந்தது என்பது நல்ல வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. லெப். ஜெனரல் ஹர்பக்�ஷ் சிங்கின் ‘வார் டெஸ்பாட்சஸ்’ (War Despatches), ஏர் சீஃப் மார்ஷன் பி.சி. லால் எழுதிய ‘மை இயர்ஸ் வித் தி ஐ.ஏ.எஃப்.’ (My Years with The IAF) என்ற நூல்கள் இந்திய ராணுவம் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் சொல்லாமல் சிந்தனை, கொள்கை, உறவு ஆகியவற்றில் எப்படி வலுப்பெற்றது என்பனவற்றையும் விளக்குகின்றன. ஸ்டீஃபன் கோஹென் எழுதிய ‘தி இந்தியன் ஆர்மி’ (The Indian Army), ‘தி பாகிஸ்தான் ஆர்மி’ (The Pakistan Army) என்ற இரு புத்தகங்களுமே இரு நாடுகளின் ராணுவங்களும் எப்படி தங்களுக்கென்று தனித்தனி வழிகளில் வளர்ந்துள்ளன என்பதை விளக்குகிறது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மிகச் சிறந்த ராணுவ வரலாற்றாசிரியர். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கார்கில் போர், முதல் உலகப் போர், 1965 போர், சீக்கிய ராணுவப் படைப்பிரிவின் தீரத்தை வெளிப்படுத்தும் சாராகடி சண்டை என்பவை அந்த நான்கு நூல்களாகும்.

யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவன் வில்கின்சனின் ‘ஆர்மி அண்ட் நேஷன்’ (Army and Nation), நாத் ராகவனின் ‘இன்டியாஸ் வார்’ (India’s War), ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி. கிறிஸ்டைன் ஃபேர் எழுதிய ‘ஃபைட்டிங் டு த எண்ட்’ (Fighting to the End) என்ற மூன்று நூல்களும் சிறப்பானவை.

இந்தியா நல்ல கூட்டரசாக உருவெடுக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணிகள் பாராட்டப்படாமலும் கவனிக்கப்படாமலும் மறைக்கப்படுகின்றன. இதனால்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் செயல்பட்ட டயரோடு, விபின் ரவாத்தை ஒப்பிடுகின்றனர். இது மன்னிக்க முடியாத குற்றம்.

உலகின் பல காலனி நாடுகளால் அரசியலி லிருந்து ராணுவத்தை விலக்கிவைக்க முடியாத போது இந்தியாவில் மட்டும் அது எப்படி சாத்திய மானது என்று அறிய வில்கின்சன் எழுதிய நூலை அவசியம் படிக்க வேண்டும். கரியப்பா முதல் மானெக்�ஷா வரை, அதற்கும் பிறகும் கூட ராணுவத் தலைமைத் தளபதிகள் ஆட்சியாளர் களுடன் ஆலோசனை கலந்து இந்தியாவின் எல்லாப் பகுதிக்கும் எல்லா பிரிவுகளுக்கும் பிரதி நிதித்துவம் அளிக்கும் வகையில் ராணுவத்துக்கு ஆட்களைச் சேர்த்தனர். பஞ்சாபியர்கள் போன்ற மறவர் குலத்தவருக்கு தரப்பட்ட அதிகப்பட்ட முக்கியத்துவத்தை பன்மைப்படுத்தினர்.

அரசியலிலிருந்து ராணுவம் ஒதுங்கினாலும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் கலவரங்களை ஒடுக்கவும் ராணுவத்தை அழைக்க மாநில அரசுகள் தவறுவதில்லை.

நிராயுதபாணியான மக்கள் மீது நம்முடைய ராணுவம் எப்போதாவது சுட்டிருக்கிறதா? பஞ்சாபின் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ‘நீல நட்சத்திர’ நடவடிக்கையைக் கூற வேண்டாம், அதில் பயங்கரவாதிகள் சுட்டு 149 ராணுவ வீரர்களும் இறந்தனர். 1990 கவாகடல் சம்பவத்தையும் கூற வேண்டாம், அதில் ஈடுபட்டது துணை நிலை ராணுவப்படைதான்.

வகுப்புக் கலவரங்கள் முற்றினால், ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தினாலே பதற்றம் அடங்கிவிடும். டெல்லியில் 1984-ல் நடந்த சீக்கியர் படுகொலை, 2002-ல் குஜராத்தில் நடந்த மதக் கலவரம் போன்றவற்றின்போது கூட ராணுவம் ஒருமுறை கூட மக்களைப் பார்த்து சுட்டதில்லை. டெல்லியிலும் குஜராத்திலும் ராணுவத்தை அழைக்கக் காலதாமதம் ஆனதால்தான் உயிர்ச்சேதங்கள் அதிகரித்தன.

காஷ்மீரிலும் இதேதான் நிலை. பயங்கரவாதி களுக்கு எதிராக ராணுவம் செயல்பட்டபோது கூட மக்கள் விலகித்தான் நின்றனர். இப்போதுதான் பயங்கரவாதிகளைச் சுற்றி வளைக்கும்போது, மக்களைத் தங்களுக்கு முன்னால் மனிதக் கேடய மாக நிறுத்துகின்றனர் பயங்கரவாதிகள். இதுவரை இருந்திராத இந்த உத்தியை முறியடிக்க ராணுவம் ஒரு வழியைக் காண வேண்டும். இதைத் தடுக்க கல்வீசும் கும்பல்கள் மீது சுட வேண்டுமா? அப்படி யானால் எந்த அளவுக்கு? ராணுவ ஜீப்பில் கலவரக் காரரை மனிதக் கேடயமாக அமர்த்தி ஓட்டிச் சென்றதை நியாயப்படுத்தியபோது ரவாத் மிகவும் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ரவாத், மேஜர் லீதுல் கோகோய் ஆகியோர் நிலையில் இருந்து பாருங்கள்.

இந்தப் புதுவகை தாக்குதலை முறியடிக்க புதிய வழி காணப்பட வேண்டும். வழி காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜெனரல் டயருடன் தளபதி விபின் ரவாத்தை ஒப்பிட்ட வக்கிரமமான எண்ணம் கடும் கண்டனத்துக்கு உரியதாகிறது.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,

இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,

இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

29 mins ago

தொழில்நுட்பம்

33 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்