கோவை குண்டுவெடிப்பு வழக்கு: ‘20ஆண்டுகளாகியும் எங்கள் திறமையான விசாரணை அங்கீகரிக்கப்படவில்லை’: கோரிக்கை வைத்து காத்திருக்கும் போலீஸார் : பரிசீலிக்குமா அரசு?

By ர.கிருபாகரன்

20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்கள் கோவை நகரையே உலுக்கியது தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள். பிப்.14 முதல் 17 வரையிலான 4 நாட்களை, உயிர்பிழைத்த, உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் இன்றும் நினைவுகூர்கிறார்கள். சம்பவத்தை நேரில் கண்டு, கட்டுப்படுத்தி பின்னர் வழக்காக அதை விசாரித்த போலீஸாரும் இச்சம்பவத்தை நினைவுகூர்கின்றனர். கூடவே, தங்களது பணிக்கு கிடைக்க வேண்டிய பலனையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

‘குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற்றார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை பெறுகிறார்கள். ஆனால், மிக வேகமாக 7 மாதங்களில் இரவு,பகல் பார்க்காமல் உழைத்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து, தொடர்புடைய 177 பேரை கைது செய்து, தண்டனை பெற்றுக் கொடுத்த எங்களுக்கு அரசு எந்த அங்கீகாரத்தையும் கொடுக்கவில்லை’ என்கின்றனர் காவலர்கள்.

ஒரு காவலரின் கொலையில் இருந்துதான் இந்த சம்பவமே தொடங்கியது. காவலர்கள் வேலைநிறுத்தம் செய்யும் அளவுக்கு பிரச்சினை தீவிரமானது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். சம்பந்தப்பட்டவர்கள் வேகமாக கைதும் செய்யப்பட்டனர். இப்படி சம்பவத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை பணியாற்றிய சுமார் 500 காவலர்கள் இன்று அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சாதாரணமாக கொள்ளை கும்பலைப் பிடித்தாலே தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு நடத்தும் அரசு, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பணியாற்றிய காவலர்களை கண்டுகொள்ளவே இல்லை என்பதே அவர்களது வேதனையாக இருக்கிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, அந்த வழக்கில் பணியாற்றிய சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவலர் ஒருவரிடம் பேசினோம்.

அவர் கூறும்போது, ‘சினிமாவை மிஞ்சும் அளவுக்கு கோரமான சம்பவமாக தொடர் குண்டு வெடிப்பு இருந்தது.1997 நவ.29-ம் தேதி காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம், 1998 பிப்.14-ம் தேதி குண்டுவெடிப்பாக மாறியது. 4 நாட்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கில் பொருள்சேதம் ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு மிக வேகமாக விசாரணை நடந்தது. 181 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 177 பேரை பல மாவட்ட, மாநிலங்களில் இருந்து கைது செய்தோம். 4 பேர் தலைமறைவானார்கள். 7 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு விசாரணை வேகமாக இருந்தது. 100 சதவீதம் தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த விசாரணையில் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லையைச் சேர்ந்த 500 போலீஸார் நேரடியாக பணியாற்றினார்கள்.

இதுதவிர சுமார் 15 மாவட்ட போலீஸாரின் பங்களிப்பு இதில் இருந்தது. வழக்கு முடிந்து, தாமதமாகத்தான் தீர்ப்பே கிடைத்தது. அதன்பிறகு போலீஸாருக்கு பாராட்டு, வெகுமதி, பதவி உயர்வு வழங்கப்படும் என்றார்கள். ஆனால், 20 ஆண்டுகளாகியும் அந்த பலன்கள் கிடைக்கவில்லை.

வீரப்பன் வழக்கில் பங்கேற்ற எஸ்டிஎப் வீரர்கள் அனைவருக்கும் ரூ.3 லட்சம் வெகுமதி, 5 சென்ட் இடம், பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதைவிட சிக்கலான கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஈடுபட்ட போலீஸாருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது வேதனையானது’ என்றார். கோவையின் தவிர்க்க முடியாத பக்கங்களில் முக்கியப் பங்காற்றியவர்கள் என்ற முறையில் காவல்துறையினர் தங்கள் கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தமிழக முதல்வருக்கும் பல முறை மனுவாகவும் அனுப்பியிருக்கிறார்கள்.

என்றாவது தங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்