பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவதில் இலங்கை உள்ளாட்சியில் சிக்கல்

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி கொழும்பு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோசி சேனாநாயக்க, அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

உலகில் பல வளர்ந்த நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன்னரே இலங்கையில் 1931ம் ஆண்டே ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமான வாக்குரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 86 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்கள் என்ற நிலை இருக்கிறது. ஆனாலும் உள்ளாட்சி சபைகளில் 1.9 சதவீதமும், மாகாண சபைகளில் 4 சதவீதமும், நாடாளுமன்றத்தில் 5.3 சதவீதமும்தான் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது.

இந்த நிலையைப் போக்கக் கோரி இலங்கையில் பெண்ணுரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததன் விளைவாக கடந்த வருடம் உள்ளாட்சி தேர்தல் சட்டத்திலும், மாகாண சபை தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தலிலும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடஒதுக்கீடு அதிகரித்ததன் பயனாக கடந்த பிப்ரவரி 10 அன்று இலங்கையில் நடைபெற்ற 341 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 1991 பெண்கள் உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். மேலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சிலோமலா என்ற பெண் உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும், ஆசியாவிலேயே பழமையான கொழும்பு மாநகராட்சியின் 152 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் மேயராக ரோசி சேனாநாயக்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பிப்ரவரி 14 அன்று கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய, ''நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 25 சதவிகித பெண் இட ஒதுக்கீட்டினை ஈடு செய்வதில் சில பகுதிகளில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் அங்கு வெற்றி பெற்ற ஆண் வேட்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முழுமையாக பெண்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டை அளிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இடஒதுக்கீட்டு சட்டத்தைப் பின்பற்றினால் வெற்றிப்பெற்ற ஆண் வேட்பாளர்களுக்கு அநீதி விளைவிக்கப்படும். அத்துடன் பல உள்ளாட்சி சபைகளை இயக்க முடியாத நிலையும் உருவாகும். இதனால் பெண்களுக்கான இடஒதுக்கீடுச் சட்டத்தை பின்பற்றுவதா? அல்லது இல்லையா? என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பெண்களின் 25 சதவீத இடஒதுக்கீடு உள்ளாட்சிகளில் இல்லாவிட்டாலும் உள்ளாட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் மேயருமான ரோசி சேனாநாயக்க, உள்ளாட்சி சபைகளில் 25 சதவீத பெண் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியவிற்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ரோசி சேனாநாயக்க கூறியிருப்பதாவது:

இலங்கையில் பெண்ணுரிமை அமைப்புகள் கடந்த 20 வருடங்களாக போராடியதன் விளைவாகத்தான் உள்ளாட்சி சபைகளில் 25 சதவிகித இடஒதுக்கிடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நமக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இடஒதுக்கீடு மூலம் பெண்கள் அரசியலில் கால் பதித்து உள்ளாட்சி சபைகளின் தலைமைப் பதவிகளில் அமர வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இந்நிலையில் 25 சதவீத பெண் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய முடியாது எனக் கூறுவது நம்பிக்கை தூரோகமாகவேத் தெரிகிறது. உள்ளாட்சி சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது தேர்தல் ஆணையமோ அல்லது அரசியல் கட்சிகளோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இடஒதுக்கீடுச் சட்டத்தை ஏற்க மறுப்பது பெண்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் மட்டுமின்றி தேர்தல் முறைக்கு செய்யப்படும் பாரபட்சமாகவே கருதப்படுகிறது. எனவே உள்ளாட்சி சபைகளில் 25 சதவீத பெண் உறுப்பினர்களின் இடஒதுக்கீட்டை தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும், என அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

51 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்