நோக்கியா ஆலையில் 8 ஆயிரம் பேர் வேலை இழக்க யார் காரணம்?- மார்க்சிஸ்ட் உறுப்பினருடன் அமைச்சர் மோதல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க யார் காரணம் என்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கும், அமைச்சர் பி.தங்கமணிக்கும் இடையே சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் மீது மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசினார். அப்போது அவர் நோக்கியா ஆலையில், ஆயிரக்கணக்காண ஊழியர்கள் வேலை இழந்ததைப் பற்றி குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு உதவவில்லை என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணியுடன் மோதல் ஏற்பட்டது. அந்த விவாதம் வருமாறு:

அ.சவுந்தரராஜன்: ஸ்ரீபெரும்பு தூரில் உள்ள நோக்கியா ஆலையில் எட்டாயிரம் பேர் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் 5 ஆயிரம் பேர் பெண்கள். இந்த ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது, ஆனால், நோக்கியா ஆலையில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நோக்கியா ஆலைக்கு குடிநீர் கட்டணம், மின் கட்டணம் என பல்வேறு வகைகளில் ரூ.650 கோடிக்கு தமிழக அரசால் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசே காரணம்

அமைச்சர் தங்கமணி: அந்த அளவுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. உறுப்பினர் சொல்வது உண்மையல்ல. முந்தைய மத்திய அரசு (காங்கிரஸ்) விதித்த திடீர் வரியால்தான் நோக்கியா நிறுவனம் ரூ.2,500 கோடி வருமான வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கிவிட்டது. எனினும் பெரும்புதூர் ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கத் தயாராக இல்லை. ரூ.2500 கோடி வரி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிந்தபிறகுதான் அந்த ஆலையை எடுத்துக் கொள்ள முடியும் என்று கூறிவிட்டார்கள்.

2012-ம் ஆண்டில் மத்திய அரசு திடீரென தனியார் நிறுவனங்கள் ராயல்டி தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவும் 1976-ம் ஆண்டு முதல் பின்தேதியிட்டு வழங்கவேண்டும் என்றும் சொன்னது. நோக்கியா நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் போடப்பட்டது. ஆனால், 1976-ல் இருந்து கட்ட வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அந்த ஆலை அமையும்போது இல்லாத விதி, திடீரென புதிதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு புதிய வருமான வரி விதித்ததால்தான் அந்த ஆலை, பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் எங்களால் இயன்ற உதவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கினோம்,

தற்போது, அங்கு ஆர்டர் வருவதில்லை. பெயரளவில் வெறும் 900 பேர் மட்டுமே அங்கு வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் விருப்ப ஒய்வு பெற்றுச் சென்றதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு விதித்த வரியே காரணம்.

மேலும், அந்த ஆலை அமைந்துள்ள இடம் சிப்காட்டுக்கு சொந்தமானது. அது நோக்கியாவுக்கு லீசுக்கு விடப்பட்டது. அந்த இடத்தை மத்திய அரசு சீல் வைத்துள்ளது. நீங்கள்தான் (சவுந்தரராஜன்) தொழிற்சங்கத் தலைவர், உங்களுக்கு எல்லாம் தெரியும். அங்கு வேலை செய்தவர்கள் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில், விஆர்எஸ் கொடுத்துவிட்டு போனார்கள். அவர்களுக்கு தொழில்பயிற்சியை அரசு வழங்கி வருகிறது.

காங்கிரஸுக்கு நன்றி

விஜயதாரணி (காங்கிரஸ்): அதிமுக-வுக்கு இணக்கமானதாகக் கூறப்படும் இப்போதைய பாஜக அரசும் இது தொடர்பாக பட்ஜெட்டில் ஒன்றும் அறிவிக்கவில்லையே.

அமைச்சர் தங்கமணி: பட்ஜெட்டில் அறிவிக்காவிட்டால் என்ன? அது பற்றி தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும். எனினும், உங்கள் ஆட்சியில்தான் நோக்கியா தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

சவுந்தரராஜன்: எனக்கு அமைச் சரின் பதிலில் உடன்பாடில்லை.

தங்கமணி: உடன்பாடில்லை என்றால் எதில் என்று சொல்லுங்கள். பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

7 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்