இப்படிக்கு இவர்கள்: சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் ‘நீட்’ தேர்வும்!

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வு முடிவுகள் வந்தவுடன் விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. கள ஆய்வின் அடிப்படையில் இல்லாமல், எல்லா விமர்சனங்களும் சொந்த விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தமிழக மாணவர்களில் கேந்திரிய வித்யாசாலைகள் உள்ளிட்ட பல சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்தவர்களும் ‘நீட்’ தேர்வினை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரும் தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களுக்குள் வரவில்லை என்பதை யாரும் விமர்சிக்கவில்லை.

மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று சொன்னவர்களும் வகுப்பறைக் கற்பித்தலில் குறைகண்டுள்ளனர். வகுப்பறைக் கற்பித்தல் தேர்வை மையப்படுத்தியது. தேர்வுச் சீர்திருத்தம் முன்னுரிமை பெற வேண்டும். பள்ளிக் கல்வி விமர்சிக்கப்படுவதைப் போல தொழில்படிப்பு உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. பெருங்கனவுகளோடு கல்லூரி செல்பவர் படிப்பை முடிக்கின்றனரா என்று அறிய யாரும் முற்படுவதில்லை. விமர்சனம் சரியாக இருந்தால்தான், சரியான தீர்வு கிடைக்கும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



எது உண்மை?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஐந்து இடங்களைத் தெரிவித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அவற்றுள் எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக நடந்துகொண்டிருக்கும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மத்திய அரசு, தமிழக அரசின் பதில் இன்னும் வரவில்லை என்றும், அதற்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது (ஜூன்.23).

இவ்விருவரின் கூற்றுகளில் எது உண்மை என்பது புரியவில்லை. எவ்வாறாயினும், உயர்தரமான சிகிச்சை அளிக்கும் திறன் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக முதலமைச்சர் டெல்லிக்கு ஒருமுறை போய் வரலாம். அல்லது, குறைந்தபட்சம் தன் சார்பில் பிரதிநிதி ஒருவரைச் சரியான அறிக்கையுடன் உடனடியாக அங்கே அனுப்பி வைக்கலாம். முக்கியத்துவம் உணர்ந்து, தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

- ஆர்.வடமலைராஜ், சென்னை.



அறமற்ற செயல்!

கரும்பு விவசாயிகளுக்கு, அவர்கள் தந்த கரும்புக்குரிய தொகையை, 24 தனியார் ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தரவில்லை. கூட்டுறவு, பொதுத் துறை ஆலைகளும்கூட ரூ.265 கோடி பாக்கி வைத்திருக்கிறது என்பதை அறிந்தபோது (ஜூன்.23, கருத்துப் பேழை கட்டுரை) அதிர்ச்சியாக இருந்தது. இப்படி வாங்கிய கரும்புக்குரிய தொகையை வருடக்கணக்காகத் தராமல் கடன்வைத்து அந்த விவசாயிகளை வறுமையில் தவிக்கவைப்பது கொடுமையிலும் கொடுமை.

எந்த மளிகைக் கடையிலும் ரொக்கம் தராமல் உப்பைக்கூட வாங்க முடியாது. ஆனால் இந்த விவசாயிகள், கேட்க நாதி இல்லாத ஏமாளிகள் என்று எண்ணிக் கரும்பை வாங்கி சீனியாக்கி விற்றுப் பணம் பார்த்தும், அவர்களுக்கு கரும்பின் விலையைத் தராமல் இழுத்தடிக்கும் அந்த ஆலைகளின் செய்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை தமிழக அரசும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அறமற்ற செயல்.

- கல்கிதாசன், எழுத்தாளர்.



எதிர்க் கட்சியின் செயலின்மை

நூல்வெளி பகுதியில் வெளியான, ‘மோடிக்காக ஓட்டு கேட்டதற்காக ரொம்ப வருத்தப்படுறேன்’ எனும் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேட்டியை வாசித்தேன். இதேபோன்ற மனநிலையில்தான் வாக்களித்த மக்களும் இருக்கிறார்கள். ஆனால், எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள் பாஜகவைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது. மோடி மோசம்தான். பிறகு யாரை ஆதரிப்பது, சோனியா காந்தியையா, மன்மோகன் சிங்கையா, ராகுல் காந்தியையா, யெச்சூரியையா, மம்தாவையா, மாயாவதியையா, முலாயம் சிங்கையா, நிதிஷ் குமாரையா, லாலு பிரசாத்தையா?

- ரோஸ்லின், தேவகோட்டை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்