இப்படிக்கு இவர்கள்: முடிவுக்கு வரட்டும் இனப்படுகொலை

By செய்திப்பிரிவு

முடிவுக்கு வரட்டும் இனப்படுகொலை

டிசம்பர்-19ம் தேதியிட்ட 'இந்து தமிழ்' நாளிதழில் சஜ்ஜன் குமார் தீர்ப்பு தலையங்கம் படித்தேன். 34 ஆண்டுகளுக்குப் பிறகு, கலவரத்துக்குக் காரணமானவர்களை நீதிமன்றம் தண்டித்துள்ளது. வழக்கு நடைபெறும்போதும் கலவரத்தில் பங்குகொண்டவர்கள் என்று தெரிந்த பின்னும், குற்றத்துக்குக் காரணமான தங்கள் கட்சிக்காரர்களை எந்த அரசியல் கட்சியும் தண்டிப்பதில்லை. இப்போதும் சஜ்ஜன் குமார் அவராகத்தான் காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த அரசியல்வாதியையும் அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுப்பதில்லை. மக்கள் மிகுந்த சிரமப்பட்டுதான் அரசியல்வாதிகளின் மீது வழக்கு நடத்த முடிகிறது. மிகப்பெரிய அரசியல்வாதிகள் தங்கள் மீதான வழக்குகளில் அனைத்து வழிகளிலும் மக்களை மிரட்டுகின்றனர். இனப்படுகொலை எந்த நிலையிலும் கண்டிக்கத்தக்கது. தாமதம் ஆனாலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இனியாவது இனப்படுகொலை முடிவுக்கு வரட்டும்.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

எஸ்.ரா. எனும் பெரிய வாத்தியார்

எழுத்தாளன் என்பவன் பெரிய வாத்தியார் எனும் எஸ்.ராமகிருஷ்ணனின் பேட்டி அருமை. சாலைகளுக்கு முடிவே இல்லை. அது உலகை நோக்கிப் பயணிக்கிறது என்பார், அதுபோல்தான் தேடலும். தன் தேடலின் வழி கண்டடைந்த விஷயங்களை வாசகனுக்கு எளிமையான மொழியில் எழுதியதுதான் அவரின் சாதனை. ஒரு சாதாரண வாசகனைக் கைப்பிடித்து உலக இலக்கியங்களையும், உலக திரைப்படங்களையும், கவனிக்கத் தவறிய எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் கூறிய அவர் பெரிய வாத்தியார்தான். பயணம் குறித்த அவரின் அனுபவப் பகிர்வும், மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை அவர் வெளிப்படுத்திய விதமும் ஆச்சரியமளிப்பது. ஒவ்வொரு இடத்திலும் புத்தகம் குறித்தும் எழுத்தாளுமைகள் குறித்தும் பேசி, அறிவார்ந்த தலைமுறை உருவாக வலியுறுத்துவார்.

- ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.

எதிர்கால இந்தியாவின் தலைவர்கள்

டிசம்பர்-18 அன்று வெளிவந்த ‘ராகுலின் இரண்டு தளபதிகள்’ கட்டுரை பொருள் செறிந்ததாக இருந்தது. ‘களத்தில் இளைஞர்கள், ஆட்சியில் மூத்த தலைவர்கள்’ என்ற ராகுலின் திட்டம் மக்களுக்குப் பயனுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இளைஞர்களை இதுபோன்ற ஆக்கபூர்வமான வழியில் கொண்டுசெல்ல வேண்டும். மாற்றுக் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காது, அவருடைய கருத்துக்கு விளக்கமோ எதிர்க் கருத்தோ கூறலாம். அதை விடுத்து, நான்காம்தர அரசியலை மேற்கொள்வது நல்லதல்ல.

- காவிரிநாடன், சென்னை.

காந்தியைப் பிடிக்கச் செய்கிறது

ஆசை எழுதும் ‘காந்தியைப் பேசுதல் தொடர்’ இரண்டு காரணங்களால் பிடிக்கச் செய்கிறது. ஒன்று, காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளைத் தகவல் என்ற தன்மையிலிருந்து கதைத்தன்மைக்கு மாற்றுவது. அதனால் அங்கு என்ன நிகழ்கிறது என்றால், அதில் வரும் நபரை காந்தி என்ற ஒற்றை நபராக அன்றி காந்தியத்தன்மை கொண்ட ஒரு நபராக அடையாளப்படுத்தப்படுகிறார். காந்தி இன்னவாக இருந்தார் என்பதைவிட, காந்தியத்தன்மை இன்னவாக இருக்கும் என்பதே வரலாற்றையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் கண்ணியாக அமைகிறது. இரண்டாவதாக, அதிர்ந்து ஒலிக்காத அதன் தொனி.

- முகமது ரியாஸ், திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்