ஜிஎஸ்டி: விலகுகிறது குழப்ப மேகம்

By செய்திப்பிரிவு

பொது சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பாக எழுந்த குழப்பங்களுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது. நகரில் சமீபத்தில் நடந்த ‘பொது சரக்கு, சேவை வரி மன்றம்’, உத்தேச வரி விகிதங்களைப் பண்டப் பட்டியலுடன் வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த பண்டங்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது, எவற்றுக்கு முழு விலக்கு தருவது, எவற்றின் மீது உச்சபட்ச வரி விதிப்பது, எத்தனை வரி விகிதங்களை வைத்துக்கொள்வது என்பதெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தொழில், வர்த்தகக் குழுக்கள் பண்டங்கள் மீதான விகிதத்தைக் குறைவாக வைத்துக்கொள்ள அரசுக்கு அழுத்தம் தரும் என்றும் இதனால் முடிவெடுப்பது சிக்கலாக இருக்கும் என்றும் எழுந்த கணிப்புகள் பொய்யாகிவிட்டன. திட்டமிட்டபடி ஜூலை 1 முதல் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்துவிடும்.

புதிய வரி விகித கட்டமைப்பின்படி 1,211 பண்டங்கள் மீது வரி எவ்வளவு என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 43% பண்டங்கள் மீது 18% வரி, 17% பண்டங்கள் மீது 12% வரி, 14% பண்டங்கள் மீது 5% வரி விதிக்கப்படும். பால், பழங்கள், சிறு தானியங்கள், கோழி ஆகியவற்றுக்கு வரி விலக்கு தரப்பட்டிருக்கிறது. 19% சரக்குகள் மீது 28% வரி விதிக்கப்படவிருக்கிறது. பான் மசாலா, சிகரெட்டுகள் மீதும், பந்தயங்களில் ஓட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கார்கள் போன்ற ‘சொகுசுப் பொருட்கள்’ மீதும் வெவ்வேறு விகிதங்களில் கூடுதல் வரிகள் விதிக்கப்படும்.

புதிய வரி விகிதங்களுக்குப் பிறகு வருவாயில் அதிக உயர்வோ, இழப்போ இருக்காது என்று அரசு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. இது உண்மையென்றால் தனி நபர்களின் செலவுகளிலும் பெருமளவில் மாறுதல்கள் இருக்காது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள 4 அடுக்கு வரி விகிதம் முற்போக்கானது. வெளிநாடுகளில் தனிநபர் வருவாய் அதிகம் என்பதால் வரி விகிதங்களை அதிக சிக்கல் இல்லாமல் அடுக்கடுக்காக வைத்துக்கொள்ள முடிகிறது. இந்தியாவில் ஒரே மாநிலத்தில், ஒரே ஊரில், ஒரே குடும்பத்தில் வெவ்வேறு ஊதியம் வாங்குகிறவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வருவாய் குறைவாக உள்ளவர்கள் மீது வரிச்சுமை அதிகம் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எப்படியும் மத்திய தரக் குடும்பங்களுக்கு வரிச்சுமை சற்றே உயரும் என்று தெரிகிறது.

அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு இந்த வரி விகிதங்களைத் திருத்துவதோ, கூடுதல் வரி என்று எதையாவது விதிப்பதோ கூடாது. வருவாயைப் பெருக்காமல், செலவைக் கட்டுப்படுத்தாமல் தங்களுடைய பற்றாக்குறை அளவை வளர்த்துக்கொண்ட மாநிலங்களை மத்திய அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். இந்த வரி விகிதங்கள் எதிர்காலத்தில் உயர்ந்துவிடாமல் மத்திய, மாநில அரசுகள் கவனமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால் பொது சரக்கு, சேவை வரி என்ற வரிச் சீர்திருத்த நடவடிக்கையைக் கொண்டு வந்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

28 mins ago

உலகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்