இந்திய - பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாடு நிரந்தரமாகத் தொடரட்டும்!

By செய்திப்பிரிவு

இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த உடன்பாடு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவுசெய்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்நிலை தொடர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர். போர் நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் விவசாயப் பணிகள் முழு மூச்சாக நடந்துவருகின்றன. அப்பகுதியின் முக்கிய விளைபொருளான வால்நட் என்று அழைக்கப்படும் வாதுமைப் பருப்பு வகைகளை வெளிச் சந்தைக்கும் அனுப்ப முடிகிறது.

இதனால், விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் பயனடைகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, சாலை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்துவருகின்றன, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இருபுறங்களிலிருந்தும் நடந்த ராணுவத் தாக்குதல்களின் காரணமாக, அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போயிருந்தது. ஓராண்டு அமைதியில், எல்லைப் பகுதியில் மீண்டும் மகிழ்ச்சி அரும்பத் தொடங்கியிருக்கிறது. அது தொடர வேண்டும்.

2003-லேயே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது என்றபோதும், தொடர்ந்து அது மீறப்பட்டது. 2018-ல் 1,629 தடவைகள்; 2019-ல் 3,168 தடவைகள்; 2020-ல் 4,645 தடவைகள் என்று பாகிஸ்தான் ராணுவத்தால் போர் நிறுத்த உடன்பாடு மீறப்படுவது தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. 2010 முதல் 2021 பிப்ரவரி வரையில் போர் நிறுத்த உடன்பாடு மொத்தம் 14,411 முறை மீறப்பட்டு, எல்லை தாண்டிய தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன.

இத்தாக்குதல்களில், 138 பாதுகாப்பு வீரர்களும் 129 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். காயமுற்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 664, பொதுமக்களில் காயமுற்றவர்கள் 708. தாக்குதல்களின்போது இடிந்த வீடுகள், சேதமடைந்த பயிர்கள், உயிரிழந்த கால்நடைகள் என்று தொடர் பாதிப்புகளை காஷ்மீர் எல்லைப் பகுதி மக்கள் சந்தித்துவந்தனர். கடந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே 592 முறை உடன்பாடு மீறப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர்-ஜெனரல்கள் இடையே 2021 பிப்ரவரி 23-ல் உடன்பாடு உறுதிசெய்யப்பட்டு, அதற்கடுத்த நாளிலேயே அது நடைமுறைக்கும் வந்தது. பிப்ரவரி 25-ல் இரு நாடுகளின் ராணுவமும் தங்களது போர் நிறுத்த அறிவிப்பைக் கூட்டறிக்கையாகவும் வெளியிட்டன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை உருவாக்க இதுவரை நடந்த பல்வேறு தொடர்முயற்சிகளில், இந்த உடன்பாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியை வர்த்தக உறவாக வளர்த்தெடுக்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் ஊடுருவல், ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் இந்திய எல்லைக்குள் அனுப்புதல் ஆகியவை இந்தியாவுக்கு சவாலாகவே தொடர்கின்றன. ரஷ்ய - உக்ரைன் யுத்தமும் அதன் விளைவுகளும் உலகம் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அருகமை நாடுகளுக்கிடையே அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்