பனாமாவில் அம்பலமாகும் வரி ஏய்ப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அமெரிக்க நாடான பனாமாவைச் சேர்ந்த ‘மோசாக் ஃபொன்சேகா’ என்ற சட்ட நிறுவனம் ரகசியமாக வைத்திருந்த 1.15 கோடி ஆவணங்கள், உலக செய்தி நிறுவனங்களுக்குக் கசிந்துள்ளன. அவை வெளிநாட்டில் பதிவுபெற்ற 2.15 லட்சம் போலி கம்பெனிகள் பற்றியவை. 143 அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 14,153 வாடிக்கையாளர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துகளை மறைவாக வைக்கவும் வரிகட்டுவதிலிருந்து தப்பவும் இந்த கம்பெனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களின் கசிவு உலகின் பல நாடுகளையும் அரசியல் தலைவர்களையும் தொழிலதிபர்களையும் பிரமுகர்களையும் தூக்கம் இழக்கச் செய்திருக்கிறது.

எதிர்பார்த்ததுபோலவே, சம்பந்தப்பட்டவர்களில் பலர் அதை மறுத்திருக்கிறார்கள். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்து பிரதமர் டேவிட் பதவி விலகிவிட்டார். சட்டவி ரோதமாக முதலீடு செய்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் இருந்தது. ரஷ்ய, சீனத் தலைவர்களோடு தொடர்புடையவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

சில நாடுகளின் சட்ட திட்டங்கள், வரி ஏய்ப்பாளர்கள் தங்கள் பணத்தை அவற்றில் பதுக்க ஏற்றதாக இருக்கின்றன. தங்களுடைய வங்கிகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர் பற்றிய தகவல்களை ரகசியமாக அவை வைத்துக்கொள்கின்றன. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை அளித்து சட்டபூர்வமாகவே செயல்பட அனுமதிக்கின்றன. இரட்டை வரிவிதிப்புத் தடுப்பு உடன்பாட்டை இதற்குப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, பாதுகாப்பாக வரி ஏய்க்கச் செய்யும் சட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. வெளிநாடுகளில் தொழில் நிறுவனங்களைத் தொடங்கவும் அதில் முதலீடு செய்யவும் அனுமதிக்கும் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகளைப் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்களைக் ‘கருப்புப் பணக்காரர்கள்’, ‘வரி ஏய்ப்பாளர்கள்’ என்று முத்திரை குத்துவதைத் தவிர அரசுகளால் ஏதும் செய்ய முடிவதில்லை.

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்ள இடம் தரக் கூடாது என்றும், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ய இடம் தரக் கூடாது என்றும் கடந்த பிப்ரவரியில் தீர்மானித்தது பனாமா அரசு. அதேபோல், வருமானத்துக்கு முழு வரி விலக்கு அளிக்கும் வெளிநாடுகளில் இந்தியர்கள், அரசுக்குத் தெரியாமல் முதலீடு செய்யக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இந்த நிலையில், அம்பலப்படுத்தப்பட்டுள்ள பனாமா சட்ட நிறுவன விவகாரங்களையும் அதில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் குறித்தும் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.

உலக நிதி முதலீடு என்பது மேலும் வெளிப்படையாக இருக்க வேண்டும், உலக நாடுகளிடையே இதில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘அறிவிக்கப்படாத வெளிநாட்டு சொத்துகள், முதலீடு (வரி விதிப்பு) மசோதா-2015’ என்பதை நிறைவேற்றியிருக்கிறது. அப்படி முதலீடு செய்தவர்கள் அதைப் பற்றித் தெரிவித்து வழக்கமான வரியுடன் சிறிதளவு அபராதமும் செலுத்தி சொத்துகளையோ பணத்தையோ கணக்கில் கொண்டுவர வாய்ப்பளித்திருக்கிறது. ஆனால், அதற்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. முதலில் உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாகும் வழிமுறைகளைக் கண்காணித்துத் தடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக அரசு கவனமாகச் செயல்பட்டால்தான் இப்படி முறைகேடாகப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதைத் தடுக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

விளையாட்டு

10 mins ago

ஜோதிடம்

39 mins ago

தமிழகம்

29 mins ago

விளையாட்டு

48 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்