புதிய நம்பிக்கைகளோடு வரவேற்போம் புத்தாண்டை!

By செய்திப்பிரிவு

நமது தலைமுறையினர் முன்னெப்போதும் சந்தித்திராத புதிய அனுபவமாய், பெருந்தொற்றுடன் கடந்த இரண்டாண்டுகளாகப் போராடி மீண்டிருக்கிறோம். இனிவரும் காலத்திலும் உருமாறிய தொற்றுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கலாம். நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வாய்ப்பாக அவற்றைக் கண்டறியவும் பகுத்து ஆராயவும் பரவலைத் தடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் தயாரிக்கவும் தயார் நிலையில் இருக்கிறோம். எனினும், தொற்றுகளை எதிர்கொள்ளும் நாட்களில் முகக்கவசமும் தனிமனித இடைவெளியும் மட்டுமே உடனடி பயனளிக்கக்கூடியவையாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலானவர்கள் கூடும் இடங்களில் இந்த முன்தடுப்பு முறைகளை இயன்றவரையில் கடைபிடிப்பது என்பது நம்மை மட்டுமின்றி நம்மைச் சார்ந்தோரையும் நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

வருகின்ற புத்தாண்டில், உருமாறிய ஒமைக்ரான் தொற்றுப் பரவல் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அந்நிறுவனம் வழங்கும் வழிகாட்டும் நெறிமுறைகளின்படி மத்திய, மாநில அரசுகள் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அரசுகள் முன்னெடுக்கும் நோய்த்தடுப்பு நடைமுறைகள் மக்களின் பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை முழுமை பெற வேண்டும் எனில், மக்களும் அவற்றை முழுமனதோடு ஆதரிக்க வேண்டியதும் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளும்கூட பெருந்தொற்றுக் காலத்தில், தங்களுக்குள் இணைந்து செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. இது போன்ற இடர்க் காலங்களில், அரசியல் தொண்டர்கள் வழக்கமான கட்சி அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட்டு மக்கள்நலத்துக்கு முதற்கவனம் செலுத்த வேண்டும். சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பாகுபடுத்தும் முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது.

உருமாறிய தொற்றுகளின் பாதிப்புகளைத் தவிர்க்க மேலும் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுவரும் இக்காலத்திலும்கூட, தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதில் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அறிவியல்பூர்வமான அணுகுமுறையை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை இந்தத் தயக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அன்றாட அலுவலகச் செயல்பாடுகள், பள்ளிக்கூட வகுப்புகள், குடும்ப உறவுகள் என பலவற்றிலும் பெருந்தொற்றின் பாதிப்புகள் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. உடல்நலம் போலவே மனநலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

இந்தப் பேரிடர்க் காலத்தில் தமது உயிரைப் பணயம் வைத்து நம்மைப் பாதுகாப்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் ஆகியோர். அவர்களின் தொண்டுள்ளங்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கிறோம். பொருளாதாரச் சுணக்க நிலை, வேலையிழப்புகள், ஊதிய இழப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அறிவும் உழைப்பும் மனிதர்களை எப்போதுமே கைவிட்டதில்லை. உழைப்பால் உருவானதே மனிதனின் பரிணாம வரலாறு. இன்னும் புதிய நம்பிக்கைகளோடு புதிய உற்சாகத்தோடு எதிர்வரும் புத்தாண்டை வரவேற்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்