மாதம் ஒரு நாள் கிராமங்களை நோக்கி: ஏன் முக்கியமானதாகிறது?

By செய்திப்பிரிவு

விவசாயிகளின் பிரச்சினைகளை நேரிலேயே சென்று கண்டறியவும், தீர்வுகள் காணவும் தமிழ்நாட்டு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஒவ்வொரு கிராமமாகச் செல்லும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்திருப்பது காலத்தின் தேவை கருதிய முக்கியமான திட்டம். ஆனால், இந்தத் திட்டம் வெறும் சடங்காக அமைந்துவிடாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் முழுநாள் ஆய்வுப் பயணமாக அமைய வேண்டியது அவசியம். கட்சி வேறுபாடுகளைத் தவிர்த்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இத்திட்டம் வெற்றிபெறத் துணைநிற்க வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தை அலுவல்நிமித்தமாக மேற்கொள்ளும்போது, அதே நாளில், அதே பகுதிகளில் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டியதும் முக்கியம்.

அமைச்சரோ சட்டமன்ற உறுப்பினரோ ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாகச் செல்லும்போது, விவசாயிகளுடனான சந்திப்பாக மட்டும் தங்களது நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளாமல், அங்கு நடந்துவரும் அனைத்து அரசாங்கத் திட்டங்களையும் மேற்பார்வையிட வேண்டும். தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அடிப்படைக் கட்டமைப்புகளின் செயல்பாட்டையும் உறுதிசெய்ய வேண்டும். சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் ஆகிய அத்தியாவசிய வசதிகள் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகள் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்கள், தொழிற்சாலைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உண்டா என்பதையும் பார்த்தும் கேட்டும் அறிய வேண்டும். கிராமங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்றாலும் அவற்றிலுள்ள இடைவெளிகளை இத்தகைய ஆய்வுப் பயணங்களால் உடனுக்குடன் சரிசெய்ய முடியும்.

கிராமப்புற ஆய்வுப் பயணங்களின்போது, ‘தூய்மை இந்தியா’ திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியதும்கூட முக்கியம். சென்னைக்கு மிக அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில், பேருந்து நிலையத்திலிருந்து அரை கிமீ தொலைவிலுள்ள நரிக்குறவர் குடியிருப்பில் கழிப்பறை வசதிகள் இல்லாததன் காரணமாகப் பெண்களும் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் வேதனையானவை. நகர்ப்புறங்களையொட்டிய பகுதிகளிலேயே இதுதான் நிலை. கிராமப்புறங்களிலும் ஏறக்குறைய இதுதான் நிலை. அனைத்து கிராமங்களிலும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதுதான் பெண்கள் அனுபவிக்கும் இத்தகைய வெளியில் சொல்ல முடியாத துயரங்களுக்குத் தீர்வாக இருக்க முடியும்.

கிராமங்களை நோக்கிய ஒரு நாள் பயணம் என்ற திட்டம் குறிப்பிட்ட சில துறைகளுக்கானதாக மட்டுமின்றி, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திட வேண்டும். வேளாண்மையை லாபகரமாக மாற்றுவது நீண்ட கால இலக்காகவே இருக்க முடியும் என்ற நிலையில், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமப்புற மக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கைச் சூழலையாவது முதலில் அளித்தாக வேண்டும். அதற்கு இத்தகைய பயணங்கள் நிச்சயம் பயன்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்