வெள்ளை அறிக்கை: நிதிப் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கட்டும்

By செய்திப்பிரிவு

அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதிப்படுத்துவது என்பதைத் தாண்டி, நிலைமை மோசமானதற்குத் தான் காரணமில்லை என்பதையும் அதைச் சீர்ப்படுத்துவது எளிதாக இல்லை என்பதையும் எடுத்துச் சொல்வதற்காகவும் வெள்ளை அறிக்கைகள் பயன்படுகின்றன. தமிழ்நாடு அரசின் அதிகரித்துவரும் கடன் சுமை குறித்து வெளியாகியிருக்கும் தற்போதைய வெள்ளை அறிக்கையும் அத்தகையதே. இருபதாண்டு காலமாகத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்துவருவது இந்த அறிக்கையின் வழியே தெளிவாகிறது. அதே நேரத்தில், பெருந்தொற்று காரணமாக அரசின் வருவாய் குறைந்து சுமையின் அழுத்தம் அதிகரித்துவருகிறது. இதையும் கவனத்தில் கொண்டே, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகளை மதிப்பிட வேண்டும் என்பதுதான் வெள்ளை அறிக்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சேலம் கொங்கணாபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பக்க நியாயமாகச் சில கருத்துகளைத் தெளிவுபடுத்திவிட்டார். அவற்றில் முக்கியமானது, தமது ஆட்சிக் காலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது. மின்னுற்பத்திக்கான செலவு உயர்ந்துவிட்ட நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்படாததும் வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்சினையை மேலும் நீண்ட காலத்துக்குத் தள்ளிவைக்கவும் முடியாது. பழனிசாமி சுட்டிக்காட்டியிருக்கும் மற்றொரு நெடுநாளைய சிக்கல், எரிபொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கேற்ப பொதுப் போக்குவரத்தின் பயணக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது. இவ்விரண்டு விஷயங்களிலும் திமுக தெளிவான ஒரு முடிவை எடுக்கக் காலத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

கடன் சுமைக்கான பழியிலிருந்து தம்மைக் கவனமாக விடுவித்துக்கொள்ள விரும்பும் அதிமுகவானது, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இன்றைய நிதிநிலையில், பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு சாத்தியமில்லை. புதிய திட்டங்களுக்கும் பெரிதும் வாய்ப்பில்லை, அப்படியே தொடங்கப்பட்டாலும் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவியலாது என்பது அதிமுகவுக்குத் தெரியாதா என்ன? அரசியலும் நிதியியலும் இணைகோடுகள். இரண்டும் ஒன்றாகச் சேர முடியாது. அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். நிதியியலைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிதி நிர்வாகத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாள வேண்டியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகளும்கூட இதை நன்றாகவே அறிவார்கள்.

தமிழ்நாட்டின் உடனடித் தேவை கடன் சுமைகளுக்கான பழியை யார் மீது சுமத்துவது என்பது அல்ல, அரசுக்குப் புதிய வருவாய் வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது என்பதும் அதை எப்படித் திட்டமிட்டுச் செலவிடுவது என்பதும்தான். திமுக அரசு எதிர்கொண்டிருக்கும் இந்தச் சவாலை மக்களும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, தேர்தல் நேரப் பிரச்சாரங்களைப் போல பரஸ்பரக் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துத் தீர்வுகளை நோக்கி தமிழ்நாடு அரசு முதலடியை எடுத்துவைக்கட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்