மக்களின் சொத்துகள் காக்கப்பட வேண்டும்!

By செய்திப்பிரிவு

பொதுத்துறை நிறுவனங்கள் நவீன இந்தியாவின் கோயில்கள் என்று நாட்டின் முதல் பிரதமர் நேரு கூறியது, வார்த்தைத் தோரணம் அல்ல. இந்தியா நவீன வரலாற்றில் அடியெடுத்துவைக்க அடித்தளத் தூண்களாக அமைந்தவை நம்முடைய பொதுத்துறை நிறுவனங்கள். மாபெரும் கனவுகளையும் தொலைநோக்குப் பார்வையையும் குழைத்து கட்டி எழுப்பப்பட்டவை அவை. வளர்ச்சி, முன்னேற்றம், வளம் என்ற கோஷங்களோடு ஆட்சியைப் பிடிப்பவர்கள் வீட்டின் நிதி நிலைமையைச் சீரமைக்கிறேன் என்கிற பெயரில், வீட்டைக் கூறுபோட்டு விற்க முயற்சிப்பது எந்த வகையிலான புத்திசாலித்தனம் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொருளாதார முன்னேற்றத்துக்கு எந்த மோசமான வழியைத் தேர்ந்தெடுத்ததோ அதே வழியில்தான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பயணிக்கிறது. முந்தைய அரசைவிடவும் வேகமாக, முந்தைய அரசைவிடவும் மூர்க்கமாக.

நிதித் திரட்டலுக்கான ஒரு வழியாகப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் நரேந்திர மோடி அரசு, பெரும் ஆவலோடு செயல்படுகிறது. சில நிறுவனங்களில் அந்த நிறுவனத்தின் நிர்வாகமே கைமாறும் அளவுக்கு 51% பங்குகளை விற்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, நிலைமையின் தீவிரத்தை உணர்த்தக்கூடியவை. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசின் வேட்கைக்குத் தப்பவில்லை. நிதித் திரட்டலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன; ஆனால், விடலைப் பருவத்தினரின் மனோபாவத்தோடு துரித பலன் தேடுவது 120 கோடி மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு அழகல்ல.

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவுக்கு ஆதரவு தேடும் விதமாக, அவற்றுக்கு எதிரான பிரச்சாரங்களும் முடுக்கிவிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. யாரும் கேட்கலாம், “பொதுத்துறை நிறுவனங்களில் குறைபாடுகள் இல்லையா? அவை நஷ்டத்தில் இயங்கவில்லையா? மக்கள் சேவைக்கு அவை போதுமானவையாகத்தான் இருக்கின்றனவா?”

ஆனால், இவற்றுக்கான உண்மையான பதில் என்ன? காலத்தோடும் சந்தையோடும் போட்டியிட முடியாத நிலைக்கு, அவற்றை முடக்கி வைத்திருக்கும் அரசியல்தானே? அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் அவர்களிடம் காணப்படும் கடைந்தெடுத்த ஊழல் கலாச்சாரமும்தானே பல பொதுத்துறை நிறுவனங்களை இன்றைக்கு முடக்கி வைத்திருக்கிறது? பொதுத்துறை நிறுவனங்கள் காலாவதியாகிவிட்டன என்றால், பாரத ஸ்டேட் வங்கியும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், பாரதத் தொலைத்தொடர்பு நிறுவனமும் எப்படி இன்றைக்கு சர்வதேச அளவில் கவனிக்கப்படும் நிறுவனங்களாக இருக்கின்றன?

பொதுத்துறை நிறுவனங்களின் வருகைக்கு முன் இந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் எப்படிப் பேயாட்டம் போட்டன என்பதை நாடு இன்னமும் மறந்துவிடவில்லை. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன், இந்நாட்டில் இருந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எப்படியெல்லாம் மக்கள் பணத்தைச் சூறையாடின? சுதந்திரம் அடைந்து வங்கிகள் தேசியமயமாக்கப்படும் காலகட்டத்துக்குள்ளான, முதல் இரு தசாப்தங்களுக்குள் நூற்றுக்கணக்கான தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் மக்களின் பணத்தை ஏப்பமிட்டு மூடப்பட்டன? இன்றைக்கும் கிராமப்புற இந்தியாவுக்கான சேவையைப் பொதுத்துறை நிறுவனங்கள்தானே தருகின்றன?

பொதுத்துறை நிறுவனங்களில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆனால், திறமையான நிர்வாகம் என்பது இத்தகைய நிறுவனங்களிலுள்ள சிக்கல்களைக் களைந்து, சந்தையிலும், செயல்பாட்டிலும் அவற்றை முன்னுக்குக் கொண்டுவருவதில்தான் இருக்கிறது. கூறுபோட்டு விற்பதில் அல்ல!

ஒருபுறம் லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பெருநிறுவனங்களாலும் பெருமுதலாளிகளாலும் விலைக்கு வாங்கப்படுகின்றன. இன்னொரு புறம் விலை போகாத பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களால் வாங்கவைக்கப்பட்டு அவையும் நஷ்டப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுத் தவறுகள் இவை.

இப்படியான இக்கட்டான சூழலில் பொதுத்துறை நிறுவனங் களைக் காக்க, அகில இந்திய அளவில் கை கோத்திருக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் சங்கங்களின் கூட்டுச் செயல்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவை. பொதுத்துறை நிறுவனங்கள் காக்கப்பட வேண்டும் என்றால், அவை தம்முடையவை என்று முதலில் மக்களை உணரவைக்க வேண்டும் என்ற நோக்கிலான பிரச்சாரங்கள் பாராட்டப்பட வேண்டியவை. இந்தத் தருணத்தில், ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமானதாகிறது. எந்தப் போராட்ட பிரச்சாரக் கருவிகளைவிடவும், மக்களிடம் பொதுத்துறை நிறுவனங்களைப் பிணைக்கும் மிகப் பெரிய ஆயுதம் பணிக் கலாச்சாரம். இதை ஊழியர் சங்கங்கள் உணர வேண்டும்.

பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் தம்முடைய பணியை வெறும் சம்பளத்துக்கான வேலையாக அல்லாமல், மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பு என்று கருதிச் செயல்படுவதே மக்களை இயல்பாக அந்நிறுவனங்களுடன் பிணைக்கும். ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தன்னுடைய நிறுவனம் என்று மக்கள் கருத வேண்டும் என்றால், அப்படியான உறவு அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இன்முகத்துடன் கூடிய சேவையிலிருந்தே தொடங்கும். பணிக்கலாச்சாரம் எனும் வலிய ஆயுதத்தை நம்முடைய பொத்துறை நிறுவனங்கள் இன்னும் கூர்தீட்ட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் சொத்து. அந்தச் சொத்தைப் பாதுகாக்கும் கடமையில் ‘தி இந்து’வும் கை கோக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்கத் தன்னுடைய தார்மிக ஆதரவை அளிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அவசியம்; இன்றைக்கும், நாளைக்கும், நாளைய நம் தலைமுறைகளுக்கும். காப்போம், எந்த நாளும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்