செய்தி பதிப்புரிமைக்கு மதிப்பளிக்கத் தவறுவதும் உழைப்புத் திருட்டே!

By செய்திப்பிரிவு

பதிப்புரிமை பெற்ற செய்திகளுக்கு உரிய சன்மானம் வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளத் தவறிய ‘கூகுள்’ நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாட்டின் வாணிபப் போட்டிகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் இந்திய மதிப்பில் ரூ. 4,400 கோடி அபராதம் விதித்திருப்பது, இது குறித்து நீண்ட காலமாக நடந்துவரும் விவாதங்களுக்கு மேலும் ஒரு நல்வழியைக் காட்டியிருக்கிறது. டிஜிட்டல் பதிப்புரிமை தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுக்கு கூகுள் இணங்காத நிலையில், அந்நிறுவனத்தைச் செய்தி நிறுவனங்களுடன் நல்லெண்ணத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு 2020 ஏப்ரலில் பிரான்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. பதிப்புரிமை பெற்ற செய்திக் கட்டுரைகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணைய தேடுபொறிகளோ சமூக ஊடகங்களோ தங்களது வலைப்பக்கங்களில் பயன்படுத்தும்போது அதற்கு உரிய சன்மானத்தைத் தொடர்புடைய செய்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய விதிமுறைகளின் அடிப்படை நோக்கம். ஆனால், அதைப் பின்பற்ற கூகுள் தயாராக இல்லை என்று பிரபல செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி அளித்த புகாரின்படியே ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூகுள், பேஸ்ஃபுக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களின் செய்திகளையும் கட்டுரைகளையும் தங்கள் வலைப்பக்கங்களில் காட்டுவதன் மூலம் பெறும் வருமானத்தை அந்தந்த ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற சட்டத்தைக் கடந்த பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அரசு இயற்றியது. இந்தியாவிலும் கூகுள் நிறுவனத்திடம் இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தொடர்ந்து இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துவருகிறது என்றாலும் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம்போல சட்டரீதியான பாதுகாப்பே இந்திய செய்தி நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைக்கு வலுசேர்க்கும்.

இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், தேடுபொறிகளும் சமூக ஊடகங்களும் செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளின் செய்திகளை எவ்வித சன்மானமும் அளிக்காமல், தங்களது வலைப்பக்கங்களில் வெளியிடும் போக்கும் அதிகரித்தபடியே வருகிறது. குறிப்பிட்ட ஒரு செய்திக்குப் பின்னால் உள்ள உழைப்பை எவ்வித மறுபயனும் அளிக்காமல் எடுத்துக்கொண்டு, அதிலிருந்து விளம்பர வருமானங்களையும் பெறுகின்ற அணுகுமுறை சட்டரீதியாக மட்டுமின்றி, அறநெறிகளின்படியும் சரியானது அல்ல. தொலைக்காட்சி, இணையம் போன்ற காலமாற்றத்தின் காரணமான போட்டிகளை நம்பகமான, சரிபார்க்கப்பட்ட, சுயதணிக்கை செய்யப்பட்ட செய்திகளை அளிப்பதன் வாயிலாகவே அச்சு இதழ்கள் எதிர்கொண்டுவருகின்றன. செய்தியாளர்கள், புகைப்படச் செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள், பிழை திருத்துநர்கள், தகவல் சரிபார்ப்பாளர்கள் என்று பலரின் உழைப்பில் செய்திகள் உருப்பெறுகின்றன; மேற்கண்ட ஊழியர்களுக்கான சம்பளச் செலவு போக இதோடு அச்சு, காகிதச் செலவு போன்றவற்றுக்கும் பெருமளவு முதலீடு செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு எவ்விதச் சன்மானமும் அளிக்காமல் தங்களது விளம்பர வருமானத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் போக்குக்கு முடிவுகட்டப்பட வேண்டும். செய்தி வலைதளங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இணையவெளியில் மீறலுக்குள்ளாகும் பதிப்புரிமையைப் பாதுகாக்கவும் முனைய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்