க்யூபாவின் புதிய தலைமை முன்னிருக்கும் சவால்கள்!

By செய்திப்பிரிவு

க் யூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக ரவுல் கேஸ்ட்ரோ அறிவித்திருப்பது உலகெங்கும் உள்ள இடதுசாரிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 1959-ல் ஃபிடெல் கேஸ்ட்ரோவின் தலைமையில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த தலைமுறையின் இறுதித் தூண்களில் ரவுல் கேஸ்ட்ரோவும் ஒருவர். ஃபிடெல் கேஸ்ட்ரோவுக்கு 2006-ல் உடல்நலம் குன்றிய பிறகு இரண்டாண்டுகள் கழித்து அவர் தன் தம்பியும், சக போராளியுமான ரவுல் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். க்யூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தளர்த்தியதும், அவர் க்யூபாவுக்கு வந்து அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்துவைத்ததும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சற்று சுமுகம் ஏற்பட்டது.

2018-ல் அதிபர் பதவியை விட்டு விலகிய ரவுல், பொறுப்பைத் தனது அடுத்த தலைமுறைத் தலைவரான மிகெல் டியாஸ் கனேலிடம் ஒப்படைத்தார். இப்போது ரவுல் ஓய்வுபெற்றதை அடுத்துத் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் மிகெல் டியாஸ் கனேலிடம் கொள்கை மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. சோஷலிஸத்துடன் நாடு கொண்டிருக்கும் மாற்ற முடியாத அர்ப்பணிப்பில் புதிய தலைமையும் உறுதியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கேஸ்ட்ரோ சகோதரர்கள் கட்டியெழுப்பிய மூடுண்ட, சோஷலிஸப் பொருளாதாரம் பல பத்தாண்டுகள் வெற்றிகரமாகவே இயங்கின. கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் க்யூபா புரிந்திருக்கும் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்படும் சீனா செய்ததுபோல் இல்லாமல், க்யூபா தன் பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதில் மெதுவாகவே செயல்பட்டது என்பது அதன் விமர்சகர்களின் குற்றச்சாட்டு.

1990-களில் சோவியத் ஒன்றியத்தின் உதவி கிடைப்பது நின்றுபோன பிறகு, தன் நாட்டு மக்களைச் சிக்கனமாக இருக்கும்படி ஃபிடெல் கேட்டுக்கொண்டார். ஒருவழியாக அனைத்து முட்டுக்கட்டைகளையும் க்யூபா வெற்றிகரமாகச் சமாளித்தது. அதே நேரத்தில், தென்அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது க்யூபாவின் அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், தற்போது அங்கே கம்யூனிஸ அலை ஓய்ந்திருக்கிறது. க்யூபாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கிவந்த வெனிஸுலாவே தற்போது நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஒபாமா காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் எல்லாம் ட்ரம்ப் காலத்தில் ரத்துசெய்யப்பட்டன. போதாதற்கு, கரோனா பெருந்தொற்று க்யூபாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் 1990-களைப் போலவே உணவுப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ரவுலுக்கு அடுத்து கட்சிப் பொறுப்பேற்பவர் இந்தச் சவால்களுக்கெல்லாம் முகம் கொடுப்பதே க்யூபாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

48 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்