துருக்கியின் ஆபத்தான சீண்டல்!

By செய்திப்பிரிவு

சிரியா எல்லை அருகில் ரஷ்யப் போர் விமானம் துருக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கும் சம்பவம், ஏற்கெனவே சிக்கலாகியிருக்கும் சிரிய உள்நாட்டுக் கலவரம் தொடர்பான சூழலை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ‘எங்களுடைய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததால்தான் சுட்டோம்’ எனும் துருக்கியின் பதில், ரஷ்யாவை மேலும் சீண்டியிருக்கிறது. வான் எல்லைக்குள் நுழைந்ததற்காகவே சுட்டதாகக் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது.

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ என்று அழைக்கப்படும் ‘வட அட்லாண்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள்’ அமைப்பில் துருக்கியும் இடம்பெற்றிருப்பதால், இதைத் தற்செயலாக நடந்ததாகவோ வேறு உள்நோக்கம் இருந்திருக்காது என்றோ கருதிவிட முடியாது. துருக்கியின் தலைநகரமான அங்காராவில் உள்ள வட்டாரங்களே இந்த வான் எல்லைப் பிரவேசம் வெறும் 17 விநாடிகள்தான் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கின்றன. இது எப்படி துருக்கிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவிட முடியும்? நவீன உலகில் ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் இன்னொரு நாட்டு விமானம் நுழைவது அரிதிலும் அரிதான நிகழ்வு அல்லவே? அப்படியே நிகழ்ந்தாலும், எல்லா நாடுகளும் இப்படிச் சுட்டுவீழ்த்திவிடுவதில்லை. வேறொரு நாட்டு வான் எல்லையில் நுழையும் தவற்றை அதிக முறை செய்த நாடுதான் துருக்கியும். 2007-ல் சிரியா மீது குண்டு வீச துருக்கியின் வான்பரப்பு வழியாகத்தான் இஸ்ரேல் விமானம் சென்றது. துருக்கியும் கிரேக்கமும் தங்களுடைய வான் எல்லையிலிருந்து பக்கத்து நாட்டு எல்லைக்குள் நுழைவது என்பது அடிக்கடி நடக்கும் சமாச்சாரம்தான். அப்போதெல்லாம் கிரேக்க விமானங்களைத் துருக்கி சுட்டுவீழ்த்தியதில்லையே?

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதலே பஷார் அல் அசாத் அரசை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு துருக்கி உதவிவருவது உலகறிந்த ரகசியம். நான்கரை ஆண்டுகளாக நடக்கும் இந்தப் போரால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். அதைப் போலப் பல மடங்கு மக்கள் அகதிகளாகிவிட்டனர். அத்துடன் ஐஎஸ் என்ற பெயரில் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.

துருக்கி தன்னுடைய எல்லையைச் சரியாக மூடாததால்தான் அதன் வழியாக உலகின் பல பகுதியிலிருந்தும் ஐஎஸ் அமைப்பில் சேர ஏராளமானோர் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஐஎஸ் அமைப்பு எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி, சர்வதேசச் சந்தையில் விற்று தனக்குத் தேவைப்படும் பண வசதியைப் பெற துருக்கிதான் மறைமுகமாக உதவுகிறது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம்சாட்டியிருக்கிறார். உலக நாடுகளின் நெருக்கடியாலும் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்குதலாலும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகப் போர் தொடரப்போவதாக அறிவித்தது துருக்கி அரசு. ஆனால், உண்மையில் ஐஎஸ் அமைப்பை எதிர்க்கும் குர்துகளுக்கு எதிராகத்தான் அந்நாடு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஐஎஸ் அமைப்புக்கு எதிராகப் போர் நடத்துவதில் துருக்கிக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்நாடு, ஜஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடுகிறதா அல்லது புவிஅரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுகிறதா? பதில் எதுவாக இருந்தாலும் ரஷ்ய விமானத்தை அது சுட்டுவீழ்த்தி யிருப்பதால் ஐஎஸ் அமைப்புக்கு உடந்தையாகத்தான் துருக்கி செயல்படுகிறது என்று கருத வேண்டியிருக்கிறது. அப்படி இல்லையென்றால், நடந்த தவறுக்காக ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரிவிட்டு, பிற நாடுகளுடன் சேர்ந்து சிரிய நெருக்கடிக்கு முடிவு காண ஒத்துழைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

8 mins ago

வணிகம்

22 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

35 mins ago

உலகம்

48 mins ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்