கண்ணியத்தை மீறும் மேடைப் பேச்சுகள் தமிழகத்துக்குத் தலைக்குனிவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளான அதிமுக – திமுக இரண்டும் தேர்தலை ஒட்டி நடத்திவரும் கூட்டங்களில் வெளிப்படும் பேச்சுகள் மாநிலத்தின் அரசியல் நாகரிகத்தை மேலும் நான்கு படி கீழே இறக்குவதாக அமைந்திருப்பது வெட்கக்கேடு. இழிந்த பேச்சுகள் தமிழக அரசியலுக்குப் புதிதல்ல என்றாலும், முன்வரிசைத் தலைவர்கள் கூடுமானவரை கண்ணியம் காப்பது முந்தைய பண்பாடு. இப்போது முன்வரிசைத் தலைவர்களே மிக சகஜமாகத் தெருச் சண்டைக்காரர்களின் மொழியை வரித்துக்கொள்வது ஒட்டுமொத்த சூழலையும் நாசமாக்கவே வழிவகுக்கும்.

திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதியின் சமீபத்திய பேச்சு கடும் கண்டனங்களை எதிர்கொண்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை. அண்மையில் உதயநிதி, முதல்வர் பழனிசாமியை அவமரியாதையாகப் பேசியதோடு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா உள்ளிட்டோரையும் அவமரியாதையோடு பேசியதானது பெண்கள் எல்லோரையுமே கொச்சைப்படுத்துவது ஆகும். சுயமரியாதைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடிவரும் வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தின் வழிவந்த அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் அதன் கொள்கைகளுக்குமே உதயநிதியின் பேச்சு எதிரானது. தலைமுறைகள் வளர வளர நாகரிகம் மேம்பட வேண்டும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராக திமுகவால் முன்னிறுத்தப்படும் உதயநிதி எதிர்ப் பாதையில் செல்வதும், தன்னுடைய இழிந்த பேச்சை சுய உவகையோடு அனுபவிப்பதும் அவலம்.

பிரதான எதிர்க்கட்சியின் இளைஞரணித் தலைவர்தான் இப்படித் தரம் தாழ்ந்து பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொதுமேடைகளில் தலைமுடிக்குள் விரலைவிட்டுச் சிலுப்பிக்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருமையில் சுட்டிப் பேசுவதைச் சமீப காலங்களில் ஒரு கலாச்சாரமாகவே ஆக்கிக்கொண்டிருக்கும் ராஜேந்திர பாலாஜி ஒரு அமைச்சர் - அரசமைப்புரீதியிலான அந்தப் பதவிக்கு என்று ஒரு கண்ணியமும், காக்க வேண்டிய குறைந்தபட்ச மாண்புகளும் இருக்கின்றன என்பதையே தூக்கி வீச விரும்புகிறாரோ என்று பல சமயங்களில் தோன்றுகிறது.

திமுக அல்லது அதிமுக, உதயநிதி அல்லது ராஜேந்திர பாலாஜி என்று வளர்ந்துவரும் இந்த அரசியல் அசிங்கத்தைக் குறுக்கிவிட முடியாது என்றாலும், மாநிலத்தின் இரு பெரும் கட்சிகள் என்ற வகையில் ஏனைய கட்சிகளைக் காட்டிலும் இந்த இரு கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவருமே ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் காட்சிகளைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அசிங்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கடமை இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் உண்டு. முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருவருமே தத்தமது கட்சியினரின் தடித்தனமான பேச்சுமொழியைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படியான பேச்சுகள் வெளிவரும்போது எதிர்த்தரப்பை முந்திக்கொண்டு சொந்தக் கட்சியினரைப் பொதுவெளியில் கண்டிக்க வேண்டும். முக்கியமாக இரு கட்சிகளையும் வழிநடத்தும் தலைவர்களுமே தங்களது மொழியையுமேகூட ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

விளையாட்டு

9 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்