உள்நாட்டுப் போரைத் தாங்குமா எத்தியோப்பியா?

By செய்திப்பிரிவு

எத்தியோப்பியாவின் பிரதமராக அபிய் அஹ்மது 2018-ல் பதவியேற்றபோது இனக்குழு மோதல்களால் பிளவுபட்டுக் கிடக்கும் அந்த நாட்டுக்குப் புதிய விடியல் வந்துவிட்டது என்றே அந்நாட்டினர் நம்பினார்கள். தொடக்கத்தில் அவர் தனது அரசியல் எதிர்த் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊடகங்களுக்கு இருந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். எரித்ரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நகர்வுகளுக்காகத்தான் 2019-ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், சீரழிவு கூடிய சீக்கிரமே தொடங்கிவிட்டது.

எத்தியோப்பியாவின் டைக்ராய் பிரதேசத்தின் மீது அபிய் போரை அறிவித்திருக்கிறார். டைக்ராய் பிரதேசமானது ‘டைக்ராய் மக்கள் விடுதலை முன்னணி’ (டி.பி.எல்.எஃப்.) என்ற கட்சியால் ஆளப்பட்டுவருகிறது. அபிய் பதவிக்கு வந்த பிறகு அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்த டி.பி.எல்.எஃப். இயக்கத்தினரை நீக்கினார். அதிகாரத்தை மையத்தில் குவிக்கும் அவரது நடவடிக்கைகள் டி.பி.எல்.எஃப். இயக்கத்தை மேலும் மேலும் விலகிச்செல்ல வைத்தன. ஆகஸ்ட்டில் நடந்திருக்க வேண்டிய பொதுத் தேர்தலை எத்தியோப்பியாவின் கூட்டரசு கரோனா பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி 2021-க்குத் தள்ளிவைத்திருப்பதை அதிகாரத்தைக் கைப்பற்றும் செயலாகவே டைக்ராய் அரசியலர்கள் கருதுகின்றனர்.

எத்தியோப்பியாவின் மக்கள்தொகை 11 கோடி, இதில் டைக்ராய் மக்களின் எண்ணிக்கை 6%. இவர்கள் எப்போதுமே அரசாங்கத்தில் அதிக அளவு செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள். ஆனால், அங்குள்ள மிகப் பெரிய இனக்குழுவான ஒரமோ மக்கள் எப்போதும் தாங்கள் ஒதுக்கப்படுவதாக முறையிடுவதுண்டு. பிரதமர் அபிய் ஒரமோ இனத்தைச் சேர்ந்தவர்தான். ஒரமோ பகுதியில் கூட்டரசுக்கென்று அதிக அளவிலான அதிகாரங்களை அவர் குவிக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. டைக்ராய் மக்களோ தங்களுடைய உரிமைகளை அபிய் பறிக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இப்போது டைக்ராய் மீது எத்தியோப்பிய அரசே குண்டு வீசியிருக்கிறது. இனக்குழுக்களுக்கு இடையில் மிகக் கடுமையான பதற்றம் நிலவும் சூழலில் தன் நாட்டு மக்கள்மீதே அபிய் போர் அறிவித்திருக்கிறார்.

குண்டுவீச்சு போன்றவற்றின் மூலம் டைக்ராய் பகுதியின் கிளர்ச்சி அரசியலர்களுக்கு வலுவான செய்தி ஒன்றைப் பிரதமர் அபிய் சொல்ல நினைக்கிறார். ஆனால், இனக்குழுக்களுக்கும் பிரதேசங்களுக்கும் இடையிலான உரசல்களைத் தடுக்க ராணுவ நடவடிக்கை எடுப்பது உதவாது என்பதை அபிய் உணர வேண்டும். எத்தியோப்பியாவின் பிரதேசங்கள் பலவும் இனக்குழு அடிப்படையில் பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் அவற்றுக்கே உரிய ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன. இந்த ஆயுதக் குழுக்களெல்லாம் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அனுபவம் பெற்றவை. தன் நாட்டு மக்கள் மீதே குண்டு வீசுவதை நிறுத்திவிட்டு, வெவ்வேறு இனக்குழுக்களுடனும் முக்கியமாக டைக்ராய் பிரதேசத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதிக்கு வழி காண வேண்டும். மிக முக்கியமாக அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்ய வேண்டும். அதுதான் அமைதியை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

24 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

மேலும்