பொலிவியத் தேர்தல்: சோஷலிஸ்ட்டுகளின் மறுவருகை!

By செய்திப்பிரிவு

பொலிவியாவில் நடந்துமுடிந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ஈவோ மொராலிஸின் ‘சோஷலிஸத்தை நோக்கிய இயக்கம்’ கட்சியானது எதிர்ப்பாளர்களாலும் ராணுவத்தாலும் வெளியேற்றப்பட்டு, ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது. ஈவோ மொராலிஸின் விருப்பத்துக்குரிய வேட்பாளரான லூயிஸ் ஆர்க் 55.10% வாக்குகளைப் பெற்றிருக்கிறார்; அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கியப் போட்டியாளரும் வலதுசாரியுமான கார்லோஸ் மெஸா 28.83% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

2003 - 05 ஆண்டுகளில் அதிபராகப் பதவிவகித்த மெஸா, இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இது பொலிவிய பூர்வீகக் குடிகளின் முதல் தலைவரான மொராலிஸுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றியாகும். அதைத்தான் லூயிஸ் ஆர்க் பங்கிட்டுக்கொண்டுள்ளார். நவம்பர் 2019-ல் ராணுவத் தலைமை ஆட்சியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்ட பிறகு, நாட்டை விட்டு வெளியேறிய மொராலிஸ் முதலில் மெக்ஸிகோவிலும் பின்பு அர்ஜெண்டினாவிலும் அரசியல் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து, வலதுசாரி அணியைச் சேர்ந்த மரபுவாத செனட்டரான ஹீனைன் ஆன்யெஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்; அவர், மொராலிஸின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளில் பெரும்பாலானவற்றில் திருத்தங்களையும் கொண்டுவந்தார். எனினும், மொராலிஸின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது. திறந்தநிலை சந்தைப் பொருளாதாரத்தைக் காட்டிலும் சமத்துவத் தன்மை கொண்ட சோஷலிஸக் கொள்கைகளையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பதவியேற்கவுள்ள பொலிவியாவின் புதிய அதிபர், மொராலிஸின் சாதனைகள், தவறுகள் இரண்டிலிருந்துமே பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தென் அமெரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றாக இருந்த பொலிவியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் மொராலிஸ். அவரது ஆட்சிக்காலத்தில், மிக மோசமான வறுமை நிலையிலிருந்து அந்நாடு மீண்டுவந்தது. 2006-ல் 33% ஆக இருந்த வறுமை நிலை 2018-ல் 15% ஆகக் குறைந்தது. பொதுத் துறை முதலீடுகளைத் தொடங்கிய அவர் பெருமளவில் பள்ளிக்கூடங்களையும் சுகாதார மையங்களையும் திறந்தார், சாலைகளை உருவாக்கினார், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் துறையைத் தேசியமயமாக்கினார், இதன் வாயிலாக பொலிவியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவாக்கம் பெற்றது.

அதேநேரத்தில், அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் பதவிக் கால வரம்புகளை மீறித் தொடர்ந்து தானே ஆட்சியில் தொடர்வதற்கு மொராலிஸ் மேற்கொண்ட முயற்சிகள்தான் அவருக்கு எதிர்ப்பு வலுப்பதற்குக் காரணமாயிற்று. பொது வாக்கெடுப்பில் அம்முயற்சி தோல்வியுற்ற பிறகும், பதவியில் தொடர்வதற்கான தடையை அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் வாயிலாக அவர் விலக்கிக்கொண்டார். இது 2019 அக்டோபர் தேர்தலில் அவரது வேட்பு மனுவின் சட்டபூர்வமான செல்லும் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது, அவர் தேர்தலில் வென்றார் என்றாலும் மோசடிக் குற்றச்சாட்டை எதிர்கொண்டார், கண்டனங்களுக்கு ஆளாகி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். புதிய அதிபரான ஆர்க், அரசியல்ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கும் பொலிவியாவில் சோஷலிஸம் நோக்கிய இயக்கத்தின் சமூகப் பொருளாதாரப் புரட்சியைத் தொடர்வதால் மட்டுமே மக்களுடைய ஆதரவைப் பெருக்கிக்கொள்ளவும் தனது அரசியல் எதிரிகளைச் சமாளிக்கவும் முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

41 mins ago

விளையாட்டு

47 mins ago

வலைஞர் பக்கம்

57 secs ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்