கரோனாவுக்குத் தடுப்பூசி: அவசரத் தேவைதான்… ஆனால், அவசரப்படக் கூடாது!

By செய்திப்பிரிவு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) நிலவும் பிரச்சினைகளை கரோனா தொற்று மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஐசிஎம்ஆரின் தலைவர் பல்ராம் பார்கவா கடந்த வாரம் மருத்துவர்களுக்கு எழுதிய கடிதமானது, ஆகஸ்ட் 15-க்குள் கரோனாவுக்குத் தடுப்பூசி தயாராக இருக்கும் வகையில் மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்குக் கட்டாயப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. அந்தக் கடிதம் குறித்த சலசலப்புகள் எழுந்ததும், கொள்ளைநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான அவசரத் தேவையை உணர்த்துவதே தமது நோக்கம் என்றும், தடுப்பூசியை மேம்படுத்துவது குறித்த விதிமுறைகளிலிருந்து விலகும் நோக்கம் எதுவுமில்லை என்றும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இச்சூழலில், உலகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளெல்லாம் மருந்து, தடுப்பூசி சோதனைகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்திவருகின்றன. உடனடித் தேவையின் காரணமாக மருந்துகளைத் தயாரிப்பதில் சற்று நெகிழ்வான போக்கு பின்பற்றப்படுவதுடன், மருத்துவத் துறையின் வழிகாட்டலின்படி சந்தையிலும் அவை அனுமதிக்கப்படுகின்றன. ‘ரெம்டெசிவிர்’, ‘பவிபிரெவிர்’ போன்ற மருந்துகள் குறைந்த அளவிலேயே பலனளிக்கிறபோதும் நோயாளிகளுக்கு அவை பரிந்துரைக்கப்படுவதற்கான காரணமும் அதுதான்.

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவை மருந்துகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவை. அனைத்து வகை தடுப்பூசிகளுக்குமான அடிப்படைத் தத்துவமானது ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு நோய்க்கூறுகளை உட்செலுத்துவதோடு தொடர்புடையது. பரிசோதிக்கப்படும் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையானது அது ஆரோக்கியமானவர்களை நோயாளியாக்கக் கூடாது என்பதுதான். இரண்டாவதாக, அந்தத் தடுப்பூசி நோய்த்தடுப்பு ஆற்றலைத் தூண்டிவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அது செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். நடப்புச் சூழலில் சில ஆயிரம் பேரிடம் அதைப் பரிசோதித்துப் பார்த்தால் மட்டுமே அது நலமளிப்பதாக இருக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைவிட அவர்கள் அதிகளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நீண்ட கால நோக்கில் நிரூபித்தாகவும் வேண்டும். இந்த ஒவ்வொரு படிநிலையையும் அவசரப்படுத்த முடியாது.

‘கோவாக்ஸின்’ மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக், தடுப்பூசி தயாரிப்பதில் அனுபவமும் நன்னம்பிக்கையும் கொண்டது. ‘சார்ஸ்-கோவிட்-2’ கிருமியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கூறுகளைக் கொண்டு ‘கோவாக்ஸின்’ மேம்படுத்தப்பட்டது. எனினும், பரிசோதிக்கப்படும் தகுதியான தடுப்பூசிகளில் நூறில் ஒன்றாகவே இது இருக்கும். தடுப்பூசிக்கான சோதனைகளை நடத்தி முடிப்பதற்கே குறைந்தபட்சம் 6-9 மாதங்கள் வரை தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளரான சௌம்யா சுவாமிநாதன். இதற்கிடையில், பெரும்புகழ் வாய்ந்த ஐசிஎம்ஆருக்கு ஆய்வுகளின் அடிப்படைகளையே தவிர்த்துவிடலாம் என்கிற குழப்பம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. அறிவியலை நம்முடைய வேகத்துக்கு அவசரப்படுத்த முடியாது. நோயின் புதிய அம்சங்கள் அனைத்தும் தொடர்ந்து பொதுக்கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. நெருக்கடியான இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது மட்டுமே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்