அனைவரையும் அரவணைக்கட்டும் புதிய வசிப்புரிமை விதிமுறைகள்

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய வசிப்புரிமை விதிகள் புதிய விவாதங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. ஒருபுறம் வெகு காலமாக அரைகுறைக் குடியுரிமையைக் கொண்டிருந்த, காஷ்மீரின் மக்கள்தொகையில் சிறு அளவிலான மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர்கள், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்து தங்கி தூய்மைப் பணியாளர்களாக இருப்பவர்கள், சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயப் படைகளின் வீரர்களாக இங்கு வந்துசேர்ந்த கூர்க்கா இனத்தவர்கள் என்று இரண்டு, மூன்று லட்சம் பேரை இது உள்ளடக்கும். இவர்கள் நிரந்தரமாக வசிப்போராகக் கருதப்படாததுடன் அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இது நியாயமற்ற சூழல் மட்டுமல்ல; அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் வழங்காத சூழலும்கூட. இன்னொருபுறம், உள்ளூர் மக்கள்தொகை விகிதாச்சாரத்தையும் மாற்றியமைக்கும் முயற்சியாகப் பெரும்பான்மை காஷ்மீரிகளால் இது பார்க்கப்படுகிறது. புதியவர்களின் அதிகாரம் எதிர்கால காஷ்மீரின் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்ற வகையில், அவர்களுடைய அச்சமும் அர்த்தமற்றதல்ல.

ஆகஸ்ட் 2019-ல் சட்டப் பிரிவு 370, 35ஏ ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, மார்ச் 2020-ல் ‘மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்’ என்ற கருத்தாக்கம் ஜம்மு-காஷ்மீரில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. புதிய வசிப்புரிமை விதிகளின்படி ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகள் குடியிருந்த நபர்களும் அவர்களின் பிள்ளைகளும், அல்லது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் ஏழு ஆண்டுகள் படித்துவிட்டுப் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியவர்களும் வசிப்புரிமை பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள். ஒரு தரப்புக்கு வரலாற்றுரீதியாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடுகட்டுவதுடன், இந்த மாற்றங்கள் ஜம்மு-காஷ்மீரில் தற்போது வசிக்கும் மற்றவர்களும் வசிப்புரிமைகளும் அதனுடன் தொடர்புடைய மற்ற உரிமைகளும் பெற வழிவகுக்கும். ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் உற்சாகம் அளிக்கவில்லை. வெளிமாநிலத்தவர்கள் பலரும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்து குவியக்கூடும் என்ற கவலைகளும் நிலவுகின்றன. அந்தப் பிரதேசத்தின் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் இந்த மாற்றங்களைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். நிலம் தங்கள் கைவிட்டுப் போய்விடுமோ, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஜம்முவிலும் நிலவுகிறது.

பொருளாதார முன்னேற்றம், ஒரு சமூகத்தின் துடிப்பு ஆகியவற்றுக்கும், வெளியுலகத்தைத் திறந்த மனதுடன் எதிர்கொள்வதற்கும் நேர்மறையான தொடர்பு இருக்கிறது. அதே சமயம், இத்தகு முயற்சிகளைத் திட்டமிட்ட குடியேற்றமாக அரசு கையாண்டால், அது மிக எதிர்மறையான விளைவுகளையே உள்ளூர் சமூகத்தில் உருவாக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்