பொதுத் தேர்வுகள் ரத்து- வரவேற்புக்குரிய முடிவு

By செய்திப்பிரிவு

ஒருவழியாகப் பத்து, பதினோராம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கால தாமதமான முடிவு என்றாலும், இது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் கூடுதல் தொற்று அபாயத்திலிருந்து தப்பித்திருக்கிறார்கள். முக்கியமாக, பெரும் மன அழுத்தத்திலிருந்து மாணவர்களோடு சேர்த்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு கண்டிராத பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும் கரோனா தொற்று போன்ற ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதில் அரசுகள் திட்டமிடலில் சறுக்குவது புரிந்துகொள்ளக் கூடியது. கிருமியின் போக்கும், அது உண்டாக்கும் விளைவுகளும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறாக இருக்கின்றன. அதிலும், இந்தியாவில் ஒன்றிய அரசே பெரும்பாலான அதிகாரங்களைத் தன் கையில் வைத்திருக்கும் நிலையில், மாநில அரசுகளானவை பல்வேறு விஷயங்களையும் அனுசரித்தே ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மிகச் சிறந்த வழிமுறை என்னவென்றால், முன்னுரிமைகளை வரிசைப்படுத்துவதும், அவற்றில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தின் ஆலோசனைகளையும் பெற்று முடிவுகளை மேற்கொள்வதும்தான். ஏனென்றால், எவ்வளவு சிறந்த முடிவுகளையும்கூட நாசமாக்கிவிடக் கூடிய வல்லமை இன்று கிருமியின் போக்கில் இருக்கிறது. ஆக, அரசானது தன்னளவில் வேறு கூடுதல் சிக்கல்களை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது.

கொள்ளைநோய் காலகட்டத்தில் இயல்பாகவே கல்வி நிலையங்கள் கடைசி வரிசைக்குச் சென்றுவிடுகின்றன. கட்டுப்பாட்டுக்குள் தொற்று வரும் வரை பள்ளிக்கூடங்கள் இயக்கத்தைப் பற்றிய பேச்சுக்கே இடம் இல்லை என்ற முடிவை முன்பே தமிழக அரசு எடுத்திருந்தால் மக்களுக்கும் இவ்வளவு அலைக்கழிப்புக்கு இடம் இல்லை; அரசுக்கும் தேவையற்ற அழுத்தங்கள் இல்லை. எதிர்க்கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், பொது நல அமைப்புகள், ஊடகங்கள், நீதிமன்றம் என்று பல தரப்பு எதிர்ப்பின் விளைவாகவே இப்போதும் தேர்வை ரத்துசெய்யும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், பெரும்பான்மையினரின் கருத்துகளுக்குத் தமிழக முதல்வர் மதிப்பளித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல, இந்தப் பிரச்சினைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.

இயல்பான காலகட்டத்தைவிடவும் மோசமான ஒரு காலகட்டத்தில், அரசானது எல்லோருடைய அக்கறையான குரல்களுக்கும் செவி மடுப்பது முக்கியமானது. ஒரு சமூகமாக நாம் செயல்படுவதிலுள்ள பெரிய அனுகூலம் அனைவரின் கூட்டுத் திறனும் சேர்வதன் வழியே நம்மை நாமே பலப்படுத்திக்கொள்வதுதான். கூட்டுச் சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிப்போம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

52 mins ago

விளையாட்டு

58 mins ago

வலைஞர் பக்கம்

11 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

மேலும்