அமெரிக்க – ஈரான் பதற்றம் தணியட்டும்!

By செய்திப்பிரிவு

அமெரிக்கா - ஈரான் இடையில் போர் வெடிக்குமோ என்கிற அச்சம் தணிந்திருக்கிறது என்றாலும், பதற்றம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. ஈரானின் புரட்சிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி, அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இராக்கில் அமெரிக்கப் படைகளின் ராணுவத் தளங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது ஈரான். தொடர்ந்து, தனது எல்லையில் பறந்த உக்ரைனைச் சார்ந்த விமானத்தைச் சுட்டதை ஒப்புக்கொண்டதோடு, அது மனிதத் தவறால் நடந்தது என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா நடத்திய படுகொலை கடும் கண்டனத்துக்குரியது என்றால், அதற்கு எந்த வகையிலும் குறையாத கொடுமை இரானின் விமானத் தாக்குதல்.

ஒட்டுமொத்த உலகையும் சூழ்ந்த பதற்றத்தை இரு நாடுகளும் இப்போதைக்குக் குறைத்திருக்கின்றன. இராக்கின் வடக்கில் உள்ள குர்திஸ்தானின் தலைநகரமான எர்பில், இராக்கின் மேற்கில் உள்ள அல்-அசத் ஆகிய இடங்களில் இருந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா தங்களுடைய படைத் தளபதியைக் கொன்றதற்குப் பதிலடியாகவும், தங்களாலும் ஏவுகணைகளை வீசித் தாக்க முடியும் என்று காட்டுவதற்காகவும் ஈரான் இதைச் செய்தது. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்குப் பொருந்தும் அளவுக்குப் பதிலடி கொடுத்துவிட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவித்தது. அதாவது, மேலும் தாக்குவதற்கு ஏதுமில்லை, இத்துடன் முடித்துக்கொள்கிறோம் என்ற தகவலையும் அதில் சேர்த்துக் கூறிவிட்டது. அமெரிக்கப் படை எதிர்த் தாக்குதல் நடத்தி முறியடிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு பதிலடியிலும் இறங்கவில்லை. அமெரிக்கத் துருப்புகளுக்குச் சேதம் இல்லை என்று கூறிய அதிபர் ட்ரம்ப், தாங்களும் இதை மேலும் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று உணர்த்தியிருக்கிறார்.

அமெரிக்காவும் ஈரானும் நேரடிப் போரில் இறங்கிவிடவில்லை என்பது ஒன்றே தற்போதைக்கு நிம்மதி அளிக்கிறது. ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்திருந்தால், மேற்காசியப் பகுதி முழுவதுமே ரணகளம் ஆகியிருக்கும்.

ராணுவ பலத்தில் அமெரிக்காவின் அசுர பலத்துக்கு ஈரான் ஈடு இல்லை என்றாலும் அதுவும் தன்னளவில் பலமான நாடுதான். ஈரானிடம் கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளும் அவற்றைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளும் ஏராளமான எண்ணிக்கையில் போராளிகளும் உள்ளனர். அமெரிக்காவையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்குவது ஈரானுக்கு எளிது. பாரசீக வளைகுடாவைத் தாக்கி, உலக நாடுகளுக்கு கச்சா பெட்ரோலிய எண்ணெய் கிடைக்கவிடாமல்கூட அதனால் தடுத்துவிட முடியும். எனவே, இந்த மோதல் முற்றியிருந்தால் எல்லா நாடுகளுமே பொருளாதாரரீதியாக பாதிப்படைந்திருக்கும் என்பதோடு ஈரானும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியிருக்கும்.

இப்போதைய பதற்றம் முற்றிலுமாகக் குறைக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் மேலும் தாமதம் செய்யாமல் தலையிட்டு, இரு நாடுகளையும் அமைதிப்படுத்த வேண்டும். மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் அணுசக்தி உடன்பாடு தொடர்பாகத்தான் மோதல் தொடங்கியது. அதில் சுமுகத் தீர்வு ஏற்பட பிற நாடுகள் உதவ வேண்டும். ஈரானும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சமாதானம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்