எஸ்ஸார் ஸ்டீல் வழக்கில் முன்னுதாரணத் தீர்ப்பு 

By செய்திப்பிரிவு

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இதுபோன்ற விவகாரங்களை வங்கிகளும் அரசும் கையாள்வதற்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. வங்கிகளின் வாராக்கடன் சுமையைக் குறைக்கவும், கடன் கொடுத்தவர்களுக்கு விரைவாகப் பணம் திரும்பக் கிடைக்கவும் இது பெரிதும் உதவும்.

‘தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்றம்’, ‘தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நடுவர் மன்றம்’ ஆகியவற்றுக்கு இடையில் திவாலான நிறுவனத்தின் சொத்துகளை விற்றால், அந்தத் தொகையை யார் முதலில் பெற வேண்டும் என்பதில் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

நிறுவனத்தின் உற்பத்திக்கு மூலப்பொருட்களைத் தந்தவர்கள், சேவைகள் அளித்தவர்கள் அவற்றுக்கான தொகையைப் பெறுவதற்கு முதலில் முன்னுரிமை தர வேண்டும் என்று ‘தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நடுவர் மன்றம்’ வலியுறுத்தியது. ‘நிதியாகக் கடன் வழங்கியவர்களுக்குத்தான் முதலில் கடன் தொகையைத் திருப்பித் தர வேண்டும், அப்படிக் கடன் பெறும்போது அளித்த பிணை சொத்துகளை விற்று அதைத் தீர்க்க வேண்டும்’ என்று தீர்ப்பில் கூறியிருக்கிறது.

கடனைத் திருப்பிச் செலுத்த 330 நாள் என்ற வரம்பானது மீறப்படக் கூடாத புனிதம் அல்ல என்றும் தீர்ப்பு குறிப்பிடுகிறது. சில வேளைகளில், ஏதோ ஒரு காரணத்தால் நிறுவனங்களால் கடன் தவணையையோ வட்டியையோ செலுத்துவதற்குத் தாமதம் ஆகலாம். இதையே, திருப்பிச் செலுத்த முடியாத நிலையாகக் கருதிவிடக் கூடாது என்று தீர்ப்பு விளக்கியிருக்கிறது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை விற்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால், வங்கிகள் அதற்குக் கொடுத்த ரூ.40,000 கோடி கடனில் கிட்டத்தட்ட 90% வசூலாகிவிடும். அந்நிறுவனத்துக்கு மூலப் பொருட்களையும் இதர பொருட்களையும் சேவைகளையும் வழங்கியவர்களுக்கு அந்நிறுவனம் தர வேண்டிய தொகை ரூ.1,200 கோடி மட்டுமே.

வங்கிகள் அளித்த கடனை முதலில் தீர்க்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறிவிட்டதால், அரசுடைமை வங்கிகள் பல வலிமையடையும். அவற்றின் லாபமும் உயரும். அந்த நம்பிக்கையில்தான் இத்தீர்ப்புக்குப் பிறகு பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்பு சந்தையில் வேகமாக உயர்ந்தது.

ஒரு நிறுவனத்தைக் கடன் நிலுவைக்காக, ‘நொடிந்த நிறுவனம்’ என்று அறிவிப்பதும், திவாலான அந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்றுக் கடனை வசூலிக்கும் நடைமுறையும் இந்தியாவைப் பொறுத்தவரை இன்னமும் அதிகம் பழகாதது. இதில் இனிதான் வங்கிகள் அனுபவம் பெற வேண்டும்.

பல நிறுவனங்களில் எடுக்கப்பட்ட திவால் நடவடிக்கைகளால், கடனில் 50%-க்கும் குறைவாகத்தான் வசூலாகும் நிலைமை காணப்படுகிறது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில்தான் வங்கிகளின் மூலதனம் பெருமளவு முடங்கியிருக்கிறது. அது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே, இந்த நடவடிக்கைகள் வேகம் பெற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்