போர்க் குற்ற விசாரணைகளில் பாரபட்சம் கூடாது

By செய்திப்பிரிவு

காங்கோவின் மக்கள் ராணுவ அதிகாரியான போஸ்கோ ஸிங்காண்டாவைப் போர்க் குற்றவாளியாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருப்பது, தீவிரமான குற்றங்களைப் புரிபவர்கள் உள்நாட்டுச் சட்டங்களிடமிருந்து தப்பித்தாலும் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஸிங்காண்டா 13 போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்றும், அவற்றில் 5 மனித குலத்துக்கு எதிரானவை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவை 2002-03-களில் காங்கோவில் நடந்த இன மோதல்களுடன் தொடர்புடையவை.

2006-ல் சர்வதேச நீதிமன்றம் ஸிங்காண்டா மீது குற்றம் சாட்டிய பிறகும்கூட அவர் சரணடைவதற்கு ஏழாண்டுகளானது; விசாரணை தொடங்க மேலும் சில மாதங்களானது. காங்கோ இன மோதலுக்குக் காரணமான தாமஸ் லுபாங்கா 2012-ல் தண்டிக்கப்பட்டார். சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து தண்டனைக்கு ஆளான முதலாவது நபர் அவர்தான். அதன் தொடர்ச்சியாக, காங்கோ இன மோதல்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள சமீபத்திய இத்தீர்ப்பு, இதுவரையிலான சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

சாட்சிகள் மிரட்டப்படுவதாலும் சாட்சியங்கள் அழிக்கப்படுவதாலும் ஆட்சியாளர்கள் மீதான முக்கிய வழக்குகளைக் கைவிடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது நீதிமன்றம். 2007-ல் கென்யாவில் நடந்த இன வன்முறைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அதிபர் உருகு கென்யட்டாவின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பதவியில் இருந்தபோதே குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜரான முதல் அதிபர் அவர். ஆனால், 2014-ல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப் பட்டன.

கென்ய அரசு நல்லெண்ணத்துடன் நடந்துகொள்ள வில்லை என்றும், முக்கியமான சாட்சியமொன்று அரசுத் தரப்பால் நிறுத்திக்கொள்ளப்பட்டது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர். இத்தகைய தடைகளைத் தாண்டி மேல்முறையீடுகள் செய்ய முயன்றபோது குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கீட்டாளரான படோ பென்சுவோடா ‘வருத்தமும் தொல்லையும்’ தரும் நபராகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் வர்ணிக்கப்பட்டார்.

அவ்வழக்கில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் முன்னாள் துணை அதிபர் ஜீன் பியரே பெம்பா விடுவிக்கப்பட்டார். 2016-ல் போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு, 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் அவர். கடந்த ஜனவரியில் ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் அதிபர் லாரென்ட் க்பாக்போ மனித குலத்துக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இன்னொரு பக்கம், இராக் மற்றம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்குக் கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில், தாங்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதாகப் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் கருதுகின்றன. இத்தகைய நியாயமற்ற செயல்பாடுகளைக் காரணம்காட்டி புருண்டி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகிவிட்டன. போர்க் குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு நாட்டையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான், மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 mins ago

தமிழகம்

49 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்