யானையும் டிராகனும்: இரண்டு நாடுகளின் கதை!

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சீனாவின் வளர்ச்சியைவிட அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) கட்டியம் கூறியிருப்பதுகுறித்து வியப்போ, பூரிப்போ அடைவதற்கு ஏதுமில்லை. சுமார் 20 ஆண்டுகளாகப் பெரு ஓட்டமாக ஓடி பொருளாதாரத்தை வளர்த்த பிறகு, சீனா இப்போது சற்றே இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நுகர்வை மட்டுமே லட்சியமாகக் கொண்டு பயணப்பட்ட பாதையை உற்பத்தியை நோக்கித் திருப்பி இப்போது முதலீட்டை அதிகரிக்கிறது. இந்த முயற்சியானது தொடர் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவக்கூடியது. ஆனால் ‘சீன டிராகன்’ கடந்த பாதையைக் கடக்க, ‘இந்திய யானை’ வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது.

1990 முதல் 2013 வரையில் சீனத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 10%-க்கும் மேலாக இருந்துவந்தது. ஆனால், இந்தியாவாலோ 2003 முதல் 2009 வரையில் 9%-க்கும் மேலாகத்தான் பராமரிக்க முடிந்தது. சீனத்தின் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி அதை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக மாற்றியது. அந்நாட்டின் வறியவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க உதவியது. எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு உயர்த்த வழிகோலியது. சுகாதார வசதிகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது.

இந்தியா அடுத்த பத்தாண்டுகளுக்கு 7% முதல் 8% வரையில் வளர்ச்சி கண்டால்தான், ஆண்டுதோறும் படித்து முடித்து வேலைபெற புதிதாகத் தகுதி பெறும் 1.20 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், நாட்டின் சமூக, இதர அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும். சீனத்தில் நபர்வாரி வருவாய் ஆண்டுக்கு 3,500 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2,10,000), இந்தியாவை விட 3 மடங்கு அதிகம். இந்தியாவில் 25% குடும்பங்களின் வீடுகளுக்கு இன்னமும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை.

சீனத்தில் மின்சார இணைப்பு இல்லாத வீடுகளே கிடையாது. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 74% ஆனால், சீனத்தில் அது 95%. எனவே, இந்தியாவில்தான் உலக நாடுகளிலேயே இளைஞர்கள் அதிகம் என்று மார்தட்டிக்கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்? சமூகத்தின் அனைத்துத்தரப்பு மக்களும் ஒருசேர பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்தால்தான் நாம் உயர முடியும்.

சீனாவைப் போலப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு முன்னால், சீனத்தின் அனுபவங்களிலிருந்து சில பாடங்களையும் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். கட்டுக்கடங்காமல் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்ததால் சீனத்தின் நிலம், நீர், காற்று என்று அனைத்துமே கடுமையான சூழல் பாதிப்புக்கு ஆளாகிவிட்டது. உலக நாடுகள் எச்சரிக்கும் வகையில் அதன் நகரங்கள் மாசுபட்டு நிற்கின்றன. சீனாவுக்கு இருக்கும் பல பலவீனங்கள் இந்தியாவிடமும் இருக்கின்றன.

ஆனால், அதன் பலம் இந்தியாவிடம் இல்லை. மனித வளத்தில் சீனா செய்த முதலீடும் அறிவியல் ஆராய்ச்சிக்கு அது அதிக நிதி ஒதுக்கியதும் அதன் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது. இந்தியாவில் பொருட்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகமாக வேண்டும். அதற்கு, நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வேளாண் துறையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவர வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் எண்கள்தான் என்று குறுக்கிவிட நினைப்பவர்களின் சூழ்ச்சிக்கு நாடு இரையாகிவிடக் கூடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்