யார் லாபத்துக்காக யார் இழப்பது?

By செய்திப்பிரிவு

தொழிற்பேட்டைகள் அமைக்க, கிராமப்புற அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்த, ராணுவத் தேவைகளுக்கு, வீட்டு வசதித் திட்டங்களுக்கு, அரசும் தனியார் துறையும் இணைந்து மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று அரசுக்குத் தேவைப்படும் நிலங்களை உரிய இழப்பீடு தந்து கையகப்படுத்த வகை செய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியிருக்கிறது.

அரசின் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், நிலங்களை இழப்போருக்கு உரிய நஷ்டஈடு தரப்பட வேண்டும், தேவைப்படும் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவோரில் 70% பேர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று முன்னரே கொண்டுவரப்பட்ட சட்டத்தில்தான் இப்போது அவசரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி, நிலங்களை வைத்திருப்போரின் சம்மதத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. இந்த நிலத்தை அரசு வளர்ச்சித் திட்டங் களுக்கு எடுத்துக்கொள்வதால், சமூகத்துக்கு அதனால் ஏற்படக்கூடிய பிற பாதிப்புகளைக் கணக்கில்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இவ்விரண்டும்தான் நெருடலை ஏற்படுத்துகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் தேவைப் படும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பலவந்தமாக வாங்கித் தருவதற்குத்தான் இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்களைக் களையவும், நீண்ட தாமதத்தைத் தவிர்க்கவும் இதை மேற்கொண்டிருப்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்படுவது, அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. சில விதிவிலக்குகளின் அடிப்படையில் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஒன்றே போதும், பெருநிறுவனங்களும் அரசும் தங்களுக்கான விதிவிலக்கு களை இஷ்டம்போல் உருவாக்கிக்கொள்ள. எந்தத் திட்டத்துக்கு, எந்த நிலம் தேவை என்பதை இனி அதிகார வர்க்கமே முடிவெடுத்துச் செயல் படுத்திவிட முடியும். சாதாரண மக்களை மேலும் சக்தியற்றவர்களாக இது மாற்றிவிடக் கூடும்.

கிராமப்புறங்களில் நிலங்களைக் கையகப்படுத்தினால் அதன் மதிப்பைப் போல நான்கு மடங்கும், நகர்ப்புறமானால், சந்தை மதிப்பைப் போல இரண்டு மடங்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய அம்சம் ஓரளவுக்கு இழப்பீட்டை உத்தரவாதம் செய்யக்கூடும். தொழில் வளர்ச்சியும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என்பதை அனைவருமே ஏற்கிறார்கள். அதற்காக எதைத் தியாகம் செய்வது, யார் தியாகம் செய்வது என்பதில்தான் பிரச்சினையே. கிராமப்புற மக்கள், வனவாசிகள், பழங்குடிகள், ஆதிவாசிகள் ஆகியோருடைய வாழ்க்கை நலனையும் கவனிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் சொந்தமாக நிலம் ஏதும் இல்லாதவர்கள். எனவே, நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அதைச் சார்ந்த நிலமற்ற தொழிலாளர்களும் வேரற்ற மரங்களைப் போல வாழ்வாதாரத்தை இழந்துவிடுவதைப் பார்த்துவருகிறோம். வனப் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுப்பதாக இருந்தாலும், தொழிற்சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் நேரடிப் பாதிப்பு அவர்களுக்குத்தான்.

இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வரும் போதாவது, விரிவாக விவாதித்து முடிவு காண்பதே நன்மையைத் தரும். ஏழை விவசாயிகளின் நிலங்கள் மீதும் அவர்கள் வாழ்க்கையின் மீதும்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சிவப்புக் கம்பளத்தை அரசு விரிக்க வேண்டுமா என்ற கேள்வியைப் புறக்கணித்துவிடலாகாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்