தொடர்ந்து முன்னேறுங்கள்!

By செய்திப்பிரிவு

இந்திய விவசாயிகள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடலாம். இந்திய அரசு கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களை ஏழைகளுக்கு மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பதற்கும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்சக் கொள்முதல் விலை நிர்ணயித்து வாங்குவதற்கும் உலக வர்த்தக ஒப்பந்த அமைப்பு போட்டுக்கொண்டிருந்த முட்டுக்கட்டை தற்காலிகமாக விலகியிருக்கிறது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் ஃபுராமேனும் இந்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இதற்கான சமிக்ஞைகளைக் கொண்டிருக்கிறது. “2017 வரைதான் இந்தியா மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க முடியும். அதற்குப் பிறகு, உலக வர்த்தக அமைப்பில் ஒப்புக்கொள்கிற வகையில்தான் செயல்பட வேண்டும்” என்கிற வற்புறுத்தல்கள் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் உலகச் சந்தையைத் தங்களுடைய கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே வகுத்த சட்ட திட்டங்கள் காரணமாகவே இந்தப் பூசல்கள் தொடர்கின்றன. ஆண்டுதோறும் சுமார் ரூ.1,20,000 கோடி அளவுக்கு தம் நாட்டு விவசாயிகளுக்கு மானியம் அளிக்கிறது அமெரிக்கா. ஆனால், பிற நாடுகள் மானியம் தருவதால் சர்வதேசச் சந்தையில் விலை பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது. இத்தனைக்கும் அமெரிக்க விவசாயம் பண்ணையாளர்கள் கையில் இருப்பது; இந்திய விவசாயமோ ஏழை, சிறு விவசாயிகள் கையில் இருப்பது. வளர்ந்த நாடுகளின் அரசியல் எப்போதுமே இப்படித்தான்.

இந்தியா தன்னுடைய விவசாயிகளுக்கு மானியம் அளிப்பதும் அரசின் அமைப்புகள் கொள்முதலில் பங்கேற்பதும் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்காக அல்ல; வறுமைக்கோட்டுக்குக் கீழ் நசுங்கிக்கொண்டிருக்கும் வறியவர்களின் பசியைக் கொஞ்சமேனும் போக்க. அப்படியும் பெரிய மாற்றங்களை நம்மால் கொண்டுவர முடியவில்லை. உதாரணமாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 2005-06 காலகட்டத்தில் 48% பேர், போதிய உடல் வளர்ச்சியை எட்டாமல் இருந்தனர்; இப்போது 2013-14 காலகட்டத்தில் 39% ஆக அவர்களுடைய விகிதம் குறைந்திருக்கிறது. அதேபோல, எடை குறைவாக இருந்த குழந்தைகள் விகிதம் 2005-06-ல் 20% ஆக இருந்தது 2013-14-ல் 15% ஆகக் குறைந்திருக்கிறது. இன்னும்கூட ரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் குறிப்பிடும் அளவுக்கு மாற்றங்கள் இல்லை. இப்படித்தான் இருக்கிறது நம்முடைய வளர்ச்சி. மேலும், விதை, உரம், பூச்சிக்கொல்லிகள் என இடுபொருட்களில் கொஞ்சமேனும் மானியம் அளிப்பதாலும் கொள்முதலில் பங்கேற்பதாலும்தான் இந்தியாவில் விவசாயிகள் கையில் விவசாயம் குற்றுயிரும் குலையுயிருமாகவேனும் இருக்கிறது.

இத்தகைய சூழலில், எந்த நாடும் தன்னுடைய மொத்த தானிய விளைச்சலின் மதிப்பில் 10%-க்கும் அதிகமாக மானியம் தரக் கூடாது என்பது போன்ற வளர்ந்த நாடுகளின் குரலை உலக வர்த்தக அமைப்பு எதிரொலிப்பது கோடிக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையோடு நடத்தும் சூதாட்டம்.

மக்கள் நலத் திட்டங்களுக்கான அரசின் செலவுகள் எப்போதும் மனித வளத்தில் செய்யப்படும் முதலீடுகள். இந்திய அரசு இந்த விவகாரத்தில், தற்காலிக முன்னேற்றத்தோடு நிறைவடையாமல், தொடர்ந்து நாம் எதிர்கொள்ளும் ஏனைய மக்கள் விரோத நிபந்தனைகளை எதிர்த்தும் பேச வேண்டும். ஏனைய நாடுகளின் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்