ஆரம்பமாவது நியூட்டனிலே…

By செய்திப்பிரிவு

‘இயற்கையும் இயற்கையின் விதிகளும் இருளுக்குள் கிடந்தன/ “நியூட்டன் பிறப்பதாக” என்றார் கடவுள், எல்லாம் வெளிச்ச மாயிற்று.’ (அலெக்ஸாண்டர் போப் எழுதிய, நியூட்டனின் கல்லறை வாசகம்)

அறிவியல் என்ற சொல்லுடன் நியூட்டனின் பெயரை இயல்பாகவே நாம் இணைத்துவைத்திருக்கிறோம். நியூட்டனின் மூன்றாம் விதிகுறித்து பலருக்கும் ஆழமாகத் தெரியாவிட்டாலும் ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை ஒன்று இருக்கும்' என்ற வாசகங்களைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு ‘நியூட்டன்' என்று பதில் சொல்லாதவர்களே அநேகமாக இருக்க முடியாது. நம்மால் வெளிப்படையாக உணர முடியாத அளவுக்கு நம் வாழ்க்கையில் நியூட்டன் ​பொதிந்திருக்கிறார்.

இங்கிலாந்தில், 1642 கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தவர் நியூட்டன். குறைப்பிரவத்தில் பிறந்த நியூட்டன் சில நாட்கள்கூட வாழ மாட்டார் என்ற கணிப்பைத் தாண்டி, தனது 84-ம் வயதில் (1727) தனக்கு ஏற்பட்ட மரணத்தையும் தாண்டி இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அறிவியல் துறையைப் பொறுத்தவரை அவரது 20-கள்தான் மிகமிக முக்கியமானவை. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டவைதான்.

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், நவீன அறிவியலின் பிதா மகனாகக் கருதப்படும் நியூட்டன், தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டது ரசவாதம், மறைஞானம் போன்ற செயல்பாடுகளில்தான்.

நியூட்டன் 1684-ம் ஆண்டு தனது ‘பிரின்சிபியா' நூலை எழுத ஆரம்பித்தார். அதற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கண்டு பிடித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த நூலை எழுதினார். அந்த நூலில் ஈர்ப்புவிசையின் பிரபஞ்சம் தழுவிய தன்மையையும், அதைக் கொண்டு கோள்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவற்றின் சுற்றுப்பாதையை எப்படிக் கணக்கிடுவது என்பதையெல்லாம் அவர் காட்டினார். இயக்கத்தைப் பற்றிய மூன்று விதிகளும் (நியூட்டனின் மூன்று விதிகள்) இந்தப் புத்தகத்தில்தான் இடம்பெற்றிருக்கின்றன.

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சார்பியல் தத்துவத்தின் வருகையால் நியூட்டனின் காலம் முடிந்துவிட்டது என்று பலரும் சொன்னார்கள். ஆனால், நியூட்டன் இன்னும் செல்லுபடியாகிறார் என்று சுப்பிரமணியம் சந்திரசேகர் (இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற தமிழர்) இப்படிச் சொன்னார்: “அறிவியல் மேதைமையின் சிகரமாக ஐன்ஸ்டைனைக் கருதுவது இன்றைய மோஸ்தர்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடும்போது ஐன்ஸ்டைன் உண்மையிலேயே மாபெரும் மேதைதான். ஆனால், நியூட்டனுடனான ஓட்டப்பந்தயத்தில் ஐன்ஸ்டைன் இரண்டாவதாகத்தான், அதுவும் வெகுதொலைவில் பின்தங்கி வருவார். அவரது பிரின்சிபியாவில், இயக்கவியல் (டைனமிக்ஸ்) என்ற அறிவியல் துறையைப் போகிற போக்கில் நியூட்டன் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட நவீன அறிவியலின் அனைத்து அம்சங்களுக்கும் அடியோட்டமாக ‘பிரின்சிபியா’ காணப்படுகிறது. மொத்தப் புத்தகத்தையும் நியூட்டன் 18 மாதங்களில் எழுதிமுடித்திருக்கிறார்.”

சார்பியல் கோட்பாட்டின் வரவால் ஈர்ப்புவிசை குறித்த நியூட்டனின் விதி காலாவதி ஆகிவிட்டதா என்ற கேள்விக்கு சந்திரசேகர் பதில் சொல்கிறார்: “ஈர்ப்புவிசைக்கு எது காரணம் என்பதைத் தான் விளக்க வில்லை என்றும், ஈர்ப்புவிசை என்ன செய்கிறது என்பதைத்தான் விளக்கினேன் என்றும் நியூட்டன் தெளிவுபடுத்துகிறார். ஈர்ப்பு விசைக்கு எது காரணம் என்பது இன்றுவரை ஒரு புதிர்போலத்தான் இருக்கிறது.”

நியூட்டனின் பல கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் இன்றைக்கும் மிகவும் பொருந்துபவையாகவே இருக்கின்றன என்று அறிவியலாளர் கள் பலரும் கருதுகின்றனர். ராக்கெட் ஏவுதல், விண்கலம் அனுப்புதல் போன்றவற்றுக்கு நியூட்டனின் விதிகள்தான் உதவுகின்றன.

நியூட்டன் மறைந்து 287 ஆண்டுகள் ஆகியும், அறிவியல் உலகில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டும் இன்னும் நியூட்டன் பிரம்மாண்டமாகவே நிற்கிறார். அறிவியல் யுகத்தின் கதவை அகலமாகத் திறந்துவிட்டவர் அவர் என்பதுதான் அதற்கு முக்கிய மான காரணம். அந்த மேதையின் நினைவு நாளில் அவருக்கு நமது நன்றியையும் வணக்கத்தையும் செலுத்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்