இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!

By செய்திப்பிரிவு

தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் விளக்கமளித்திருப்பது தொடர் விவாதத்துக்கே வழிவகுக்கிறது.

செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே பொதுமக்கள் மத்தியில் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. தமிழக பொறுப்பு ஆளுநர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்களே தவிர, அவரை நேரடியாகச் சந்தித்து அவரது உடல்நலம் குறித்துப் பேசியதாக ஒரு தகவலும் வரவில்லை. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட காலத்தில், ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள், தகவல்கள் வெளிவந்தபோதிலும் “ஜெயலலிதா குணமடைந்துவருகிறார்” எனும் ஒரு வரி எல்லோரையும் அமைதிப்படுத்திவந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அந்தச் சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கின. அரசுத் தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ விரிவான விளக்கங்கள் வெளிவராத நிலையில், இது தொடர்பில் சமூக வலைதளங்களில் எண்ணற்ற வதந்திகள் சிறகடித்துப் பறந்தன. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, முதல்வர் பதவியை நோக்கி நெருங்கும் சமயத்தில், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் குழு இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருப்பதை இயல்பானதாகக் கருதிக் கடக்க முடியவில்லை.

ஒரு மாநிலத்தின் முதல்வர் திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மரணம் அடைகிறார்; அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்; ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன; மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள்; ‘நாங்கள் பதில் அளிக்க மாட்டோம்’ என்று இறுக வாய் மூடி இருப்பது என்ன மாதிரியான ஒரு மனோபாவம்? அந்த அளவுக்கு இதுநாள் வரை பொதுமக்களிடம் அலட்சியத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியவர்கள், இப்போது தானாக வலிய வந்து மருத்துவர்களுடனான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதன் பின்னுள்ள நோக்கம் என்ன?

இப்போதும்கூட, தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சரோ, செயலரோ விளக்கம் அளிக்கும் இடத்தில் ஏன் அமரவில்லை? பாமக நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸ் இது தொடர்பில் விடுத்திருக்கும் அறிக்கை, பொதுமக்களின் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. உண்மையில், மருத்துவர்களின் பேட்டி பொதுமக்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மேலும் பல கேள்விகளையே உருவாக்கச் செய்திருக்கிறது.

இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஜெயலலிதா என்ன சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதில் தொடங்கி, அவருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பது வரை காத்திரமான ஆதாரங்களோடும் மருத்துவ ஆவணங்களோடும் மக்களிடத்தில் அரசு விளக்கமளிப்பதே அதற்கான ஒரே வழி. அதுவே அரசின் கடமையும்கூட!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்