எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் நாம்!

By செய்திப்பிரிவு

வேலைவாய்ப்புகள் முன்னெப்போதையும் விடப் பல மடங்கு பெருகியிருந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இது, எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் என்றாலும் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சுமார் 11 கோடிக்கும் மேல். வேலை செய்யும் பருவத்தினரில் இந்த அளவு 15%. இந்தியக் குடும்பங்களில் சுமார் 28% வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளன. 15 வயது முதல் 60 வயது வரையிலான வேலை செய்யக் கூடிய பருவத்தினரில் வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை மட்டுமே 7.5 கோடிக்கும் மேல். இவர்கள் மொத்தம் 7 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

மாநிலவாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம் (54%), ஜம்மு காஷ்மீர் (47%), ஜார்க்கண்ட் (42%), கேரளம் (42%), ஒடிசா (39%), அசாம் (38%) ஆகியவற்றில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். குஜராத் (12%), மகாராஷ்டிரம் (14%), கர்நாடகம் (14%), தமிழ்நாடு (18%), ஆந்திரம் (18%) ஆகியவற்றில் குறைவு. இந்தத் தரவுகளெல்லாம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப் பட்டிருக்கின்றன.

2001-ல் இதே போன்ற கணக்கெடுப்பின்போது 23% குடும்பங் களைத்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பாதித்திருந்தது. 2011 கணக்கெடுப்பின்படி, அந்தப் பிரச்சினை 28% குடும்பங்களைப் பாதித்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவில்லை என்பது ஐமுகூ அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று. எனவே, மத்திய அரசு உடனடியாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். அரசின் செலவைக் குறைக்க ஆள்குறைப்பு செய்வது, காலியிடங்களை நிரப்பாமல் பதவிகளையே காலிசெய்வது, துறை களைக் குறைப்பது, நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை சுருக்குவது போன்ற செயல்களில் இறங்கக் கூடாது. வேலைவாய்ப்பு பெருகினால் நுகர்வும் பெருகும்; அது தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை வளர்ச்சிக்கு நேரடியாக உதவும்.

கடந்த 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பில் முன்னேற்றமே இல்லாமல் இருப்பதால்தான் அரசு எத்தனை சலுகைகள் தந்தாலும் உற்பத்தித்துறை மீட்சி அடையவில்லை. இப்போது விவசாயத்தில் நிரந்தர வருமானம் இல்லை, கிடைக்கும் வருமானமும் போதவில்லை என்பதால் இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறவே நினைக்கின்றனர். கிராமப்புறங்களில் 30% வீடுகளில் வேலை கிடைக்காதவர்கள் உள்ளனர். நகரங்களில் இதே அளவு 23% ஆக இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இருப்பது சூழலின் பேரபாயத்தை நமக்கு உணர்த்துகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அந்த 11 கோடி மக்களை மட்டும் பாதிப்பதல்ல; ஒட்டுமொத்த இந்தியாவையும் பல வழிகளில் பாதிப்பது.

பணத்தையும் தங்க நகைகளையும் வீட்டிலேயே வைத்துப் பூட்டினால் எப்படி யாருக்கும் எந்தப் பலனையும் கொடுப்பதில்லையோ அதே போல, வேலைசெய்யும் உடல் தகுதி/மனநலம் இருந்தும் சுமார் 11 கோடிப் பேருக்கு வேலைகொடுக்காமல் வைத்திருக்கிறோம். தேசத்தின் அரிய செல்வமான மனித வளத்தை எப்படியெல்லாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்