பத்திரிகை போராளியே சென்று வா!

By செய்திப்பிரிவு

மிழ் அறிவுலகின் முக்கியமான குரல்களில் ஒன்றாக ஒலித்துவந்த ஞாநி (64) மறைந்துவிட்டார். தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தில் ஒரு காலகட்டத்தின் உயரிய பிரதிநிதி அவர். தமிழில் பொது அறிவுஜீவிக்கான (public intellectual) இடத்தை விஸ்தரித்தவர். பொதுப்புத்திக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கியவர். உண்மை என்று தான் நம்பியது எதுவோ அதை யார்க்கும், எதற்கும் அஞ்சாமல் உரக்கச் சொன்னவர். பத்திரிகைப் பணியைத் தொழிலாக அல்லாமல், ஒரு போராட்டக் களமாகவே வரித்துக்கொண்ட போராளி ஞாநி. பத்திரிகை எழுத்தோடு மட்டும் அல்லாமல் புனைவு, ஓவியம், நாடகம், பதிப்பு, அரசியல் என்று வெவ்வேறு தளங்களில் தன்னுடைய பணியை விரித்துக்கொண்ட பன்முக ஆளுமை அவர்!

1954-ல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். ஆங்கில நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக இருந்த தனது தந்தை வேம்புசாமியின் வழியில் பத்திரிகை உலகில் நுழைந்தவர். ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் பணியாற்றத் தொடங்கிய அவர், ‘தினமணி’, ‘விகடன்’ என்று முன்னணிப் பத்திரிகைகள் பலவற்றிலும் பணியாற்றியவர். பணியாற்றிய பத்திரிகைகளில் எல்லாம் இதழியலின் எல்லைகளை விஸ்தரித்தவர். நாளிதழ்கள் சிறப்பு மலர்களை வெளிக்கொணரும் கலாச்சாரம் இங்கே உருவானதில் ஞாநிக்கு முக்கியமான பங்கு உண்டு. அரசியல் கட்டுரைகளுக்கு என்று தனி வாசகர் கூட்டத்தையும் பத்தி எழுத்துக்கு என்று ஒரு முக்கியத்துவத்தையும் உண்டாக்கியதில் அவருக்குச் சிறப்பான ஓரிடம் உண்டு. அமைப்போடு இயங்காத பத்திரிகையாளர்களுக்கு இங்கு இடமே இல்லை எனும் சூழலைக் களையவும் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திர வெளியை விஸ்தரிக்கவும் கடைசி வரை அவர் போராடினார். அவர் நடத்திய ‘தீம்தரிகிட’ பத்திரிகை, ‘ஞானபாநு’ பதிப்பகம் ஆகியவையெல்லாம் இவற்றின் வெளிப்பாடுகளே!

அவர் பங்களித்த துறைகளில் ஊடகத்துக்கு இணையாக அவர் போற்றி வளர்த்த இன்னொரு துறை நாடகம். ‘பரீக்ஷா’ நாடகக் குழுவை உருவாக்கிய அவர், ‘போர்வை போத்திய உடல்கள்’, ‘நாற்காலிக்காரர்’, ‘பலூன்’ உட்பட 30-க்கும் மேற்பட்ட மேடை, வீதி நாடகங்களை இயக்கியிருக்கிறார். பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘அய்யா’ உட்பட குறிப்பிடத்தக்க தொலைக்காட்சித் தொடர்களையும், தொலைக்காட்சிப் படங்களையும் இயக்கியிருக்கிறார். தனது இறுதிநாட்களில் ‘ஓ பக்கங்கள்’ எனும் பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கியிருந்தார். இப்படி அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வடிவங்கள் வெவ்வேறு என்றாலும், அடிப்படையில் அவர் உரையாடல்காரராக இருந்தார். தனக்கு உவப்பான கருத்துகளை மட்டும் அல்லாமல், நேரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்தவர்களோடும் இடையறாது உரையாடிக்கொண்டிருந்தார். ஜனநாயகத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அதற்கான அவருடைய பங்களிப்பும் மகத்தானவையாக இருந்தன.

சாதி, மத அடையாளங்களைக் கடந்து வாழ ஆசைப்பட்ட ஞாநி, எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியை ஆனமட்டும் குறைத்து வாழ்ந்த அரிய ஆளுமைகளில் ஒருவர். விழுமியங்களை அந்நியமாகப் பார்க்கும் ஒரு காலகட்டத்தின் நடுவே நின்றுகொண்டு, திரும்பத் திரும்ப அறத்தையும் மதிப்பீடுகளையும் பேசிக்கொண்டிருந்தார். தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டிருந்த அவர், தமிழ் மக்களின் உரிமைக் குரலாகவும் பன்மைத்துவத்தின் காவலர்களில் ஒருவராகவும் ஒலித்தார். ஞாநியின் மறைவால் தமிழ்ச் சமூகம் தன்னுடைய மேன்மையான ஜனநாயகக் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது என்றாலும், அவருடைய பணி அவரைத் தொடர்வோருக்கு என்றென்றும் உந்துசக்தியாக இருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்