முடிக்கப்போவது நீதிமன்றமா,மக்கள் மன்றமா?

By கே.கே.மகேஷ்

கடைசியில் அது நடந்தேவிட்டது. தினகரன் அணியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் 18 பேரை, தகுதிநீக்கம் செய்துவிட்டார் சபாநாயகர். 20-ம் தேதிக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் கேட்டுக்கொள்ளலாம். அதில் அவர் தோற்க வாய்ப்பே இல்லை. ஆனால், இந்த ஆட்சி நிலைக்குமா, நிலைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் தமிழக வரலாற்றிலேயே புதிது என்கிறார்கள். இல்லை, 1988-ல் இதே கூத்தை அன்றைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் நடத்தினார். எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, 132 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவில், ஜெயலலிதாவை 33 பேர் ஆதரித்தார்கள். இன்றைய தனபால் போல, அன்றைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், ஜெ. அணியைச் சேர்ந்த 33 பேரையும் தகுதிநீக்கம் செய்தார். 26.1.1988-ல் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அதைப் புறக்கணித்தார்கள். கடைசியில், வெறும் 111 உறுப்பினர்களைக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதில் ஜானகி வென்றதாக அறிவித்தார் பி.ஹெச்.பாண்டியன்.

வரலாறு திரும்புமா?

வானளாவிய அதிகாரம் உள்ளதாக வாய்ஜாலம் காட்டிய பி.ஹெச்.பாண்டியனின் தீர்ப்பை மாற்றி எழுதியது, உண்மையிலேயே வானளாவிய அதிகாரம் கொண்ட மத்திய அரசு. கூடுதலாக ஒரு 15 நாட்கள் அந்த ஆட்சி நடக்கத்தான் சபாநாயகரால் உதவ முடிந்ததே தவிர, அதிமுக ஆட்சி அதன் பதவிக்காலத்தை நிறைவுசெய்ய அவரது நடவடிக்கை உதவவில்லை.

இந்த முறையும் அந்த வரலாறு திரும்ப வாய்ப்பிருக்கிறது. காரணம், 18 உறுப்பினர்களின் தகுதிநீக்கம், சட்டத்துக்குப் புறம்பானது என்றே சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். கட்சி கொறடாவின் அதிகாரம் சட்டமன்றத்துக்குள்தான் செல்லுபடியாகும். சபைக்கு வெளியே ஒரு உறுப்பினரின் செயல்பாட்டின் மீது நடவடிக்கை எடுக்க அவரால் பரிந்துரைக்க முடியாது. கட்சித்தாவல் சட்டத்தின்படி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு. ஆனால், தினகரன் அணியைச் சேர்ந்த 18 உறுப்பினர்களும் அரசுக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிராகச் செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள் ஆளுநரைச் சந்தித்து அளித்த மனுவில்கூட, இந்த அரசின் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லப்படவில்லை. முதல்வர் பதவியிலிருந்து பழனிசாமியை நீக்க வேண்டும் என்றுதான் கோரியிருந்தார்கள்.

நியாயமற்ற நடவடிக்கை

ஆனால், பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேர் வாக்களித்திருந்தனர். அவைக்குள் கட்சி கொறடா வின் உத்தரவை மதிக்காமல், பகிரங்கமாகக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டும், 8 மாதமாக அவர்கள் மீது சிறு நடவடிக்கைகூட எடுக்கவில்லை சபாநாயகர். அதே நபர், சபை கூடும் வரையில்கூடக் காத்திருக்காமல், தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரை அவசர கதியில் தகுதிநீக்கம் செய்திருப் பதற்கு ஒரே காரணம்தான் இருக்கிறது. 12ஐவிட 18 பெரியது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயம்தான். இந்த நடவடிக்கை கொஞ்சமும் நியாயமற்றது. நீதிமன்றத்துக்கே சென்றாலும், இது செல்லாது.

கர்நாடகத்தில் இதேபோல முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராகச் செயல்பட்ட 11 பாஜக எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். அந்த நடவடிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, செப்டம்பரில் பழனிசாமி அரசு தப்பித்தாலும், குறைந்தபட்சம் டிசம்பர் வரையிலாவது தாக்குப்பிடிக்குமா என்பதே கேள்வி!

ஆளுநர் என்ன செய்வார்?

பழனிசாமியைக் கவிழ்ப்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை கர்நாடக குடகில் தங்கவைத்துவிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநர் கொண்டுவர வேண்டுமென்று காத்திருந்தார் தினகரன். காணாமல்போனார் ஆளுநர். வெறும் 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்காக சட்ட மன்றத்தைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, பழனிசாமிக்கு உத்தரவிட்ட ஆளுநர், 19-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுபெற்ற தினகரன் அணியின் கோரிக்கையை ஏற்காதது ஏன் என்று தமிழக எதிர்க் கட்சிகள் கூப்பாடு போட்டன. அவர் சென்னை வருவதாக இருந்தால், பழனிசாமி ஆட்சியை உறுதி செய்வதாகத்தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். இப்போது அதற்கேற்பத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார் சபாநாயகர் தனபால்.

இனி ஆளுநர் வருவார். அவர் வேண்டுகோளின்படி, பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவார் பழனிசாமி. வாழ்த்திவிட்டுப் போவார் ஆளுநர். தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அல்லது ஏற்கெனவே, திமுக தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்கில் இதற்கு எதிராகத் தீர்ப்பு வரலாம். சபாநாயகரின் தீர்ப்பு சரியே என்று தீர்ப்பு வருவதற்கும் நம்முடைய சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டுகளும் இங்கே மக்களாட்சி நடைபெறப்போவதில்லை. வாக்களித்த மக்களும் முக்கியமில்லை, வென்றுவந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முக்கியமில்லை. காலியாகக் கிடக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்கள் பணி என்று எதுவுமே முக்கியமில்லை. ஒரே ஒருவருக்குத்தான் இந்த ஆட்சி முக்கியம். அதுவும் மத்திய பாஜகவுக்கு என்றால், அதற்குப் பிறகும் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்