கூண்டைவிட்டு வான்வெளியை நோக்கி...

By ஆயிஷா இரா.நடராசன்

உலகெங்கும் இன்று ஒருவழிப்பாதைகள் உள்ளன; ஆனால், முதல் ஒருவழிப்பாதை உருவானது, குழந்தைகள் அறிவியல் ஆர்வத்தினால் என்பது ஆச்சரியம் தரும் செய்தி. 1850-களில் லண்டன் ராயல் கல்வியகம் உருவான புதிதில், ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்தவெளி அரங்கில் பல ஆய்வுகளை மைக்கெல் ஃபாரடே குழந்தைகளுக்குச் செய்துகாட்டத் தொடங்கினார்.

இதனால் லண்டனின் அல்பமாரேல் வீதியில் ஏற்பட்ட வாகன நெரிசல், அந்த வீதியை உலகின் முதல் ஒருவழிப்பாதையாக மாற்றியது. ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் ஆய்வகம் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக்கியதும் இந்த நிகழ்வுதான்.

ஒரு குழந்தை, அறிவியல் அறிஞராகப் பரிணமிப்பதற்கான அடித்தளம் மாணவப் பருவத்தில் பள்ளியிலேயே விதைக்கப்பட வேண்டும். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்ற தன் கேள்விக்குக் கரும்பலகையில் விடை தந்ததுடன், குளக்கரைக்கு அழைத்துச் சென்று நேரிலும் விளக்கம் அளித்த அறிவியல் ஆசிரியர், தன் வாழ்வின் லட்சியம் அறிவியல் தேடல்தான் என்பதை உணர்த்தியதாக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவுகூர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் உரையாடலின் தேவை: பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்ட தகவல்களை மனப்பாடம் செய்து, அதை மதிப்பெண்ணாக மாற்றும் கல்வி முறையிலிருந்து விலகி, மாணவர்களுடனான திறந்த உரையாடலை நோக்கி நாம் நகர வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் கூட்டிணைவான ‘ஸ்டெம்’ (STEM), உலக அறிவியல் கல்வியின் அங்கமாக இன்று ஏற்கப்பட்டுள்ளது.

அது பள்ளிக் கல்வியில் இணைக்கப்பட வேண்டும். ஆனால், கல்லூரியில் மட்டும் வெறும் சடங்குபோல் ‘ஸ்டெம்’ அமல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அவற்றிலும் தேர்வுமைய ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுவதால், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி சுயமான தேடல்களுக்கு இட்டுச்செல்லாத இடங்களாகவே பள்ளிகள் உள்ளன.

ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளின் மாணவர் பருவம்தான் அறிவியல், புதிய சிந்தனை, கட்டமைப்பியல், படைப்பாக்கத் திறன் முளைவிடும் பருவம். உலகெங்கும் இந்த வகுப்புகளின் ஊடாகத்தான் ‘ஸ்டெம்’ கல்வி பயணிக்கிறது. இன்று, நம் பள்ளிக் கல்வியில் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பாடப்புத்தக அறிவை நம்பும் வகுப்புகளாக ஆறு முதல் எட்டாம் வகுப்புக் கல்வி சுருக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், நமக்கு உடனடித் தேவை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக் கூட்டுக் கல்வியான ‘ஸ்டெம்’ சார்ந்த திறந்தவெளி உரையாடல் அமைப்புதான். பள்ளிகள்தோறும் அதை உருவாக்குவது கல்விச் சிக்கல்களைத் தீர்த்திட உதவும். செயல்பாட்டு ஆக்கத்திறன், கை-மூளை இயக்க இயல்பூக்கம் ஆகியவை பள்ளிப் பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்புப் பருவத்தில் ‘ஸ்டெம்’ கல்வி என்பதே அதற்கான தீர்வு.

அறிவியல் மனோபாவம்: போலிச் சாமியார்களின் அட்டகாசங்கள், சோதிடப் பரிகார அவலங்கள், வாஸ்து முதல் நரபலிவரை நடந்தேறும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல்–சமூகச் சிந்தனை மலர்ச்சி இன்றைய தேவை என, அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையில் பி.என்.ஹங்கர், பி.எம்.பார்கவா ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 1981இல் ‘இந்திய அறிவியல் மனப்பான்மை அறிக்கை’யில் குறிப்பிட்டது.

மத்திய-மாநில அரசுகளுக்கு 16 அம்சப் படிநிலைகளை அக்குழு பரிந்துரைத்தது: ஒவ்வொரு பள்ளியிலும் வாரம்தோறும் திறந்தவெளிச் செயல்பாடாக, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வலர்கள், வல்லுநர்கள் கலந்துரையாடும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த அம்சங்களில் முதன்மையானது. அன்றாட வாழ்க்கை, இயற்கை நிகழ்வுகள், உடலியல் தொடர்பான மாணவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு, தேடலை விரிவுபடுத்துவதே அறிவியல் மனோபாவம் கொண்ட பகுத்தறிவுச் சமூகத்தை உருவாக்குவதற்கான வழியாகும்.

படைப்பாக்க அறிவியல்: 21ஆம் நூற்றாண்டுக் கல்வியின் நோக்கங்களில் முக்கியமானது புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குதல். நான்காம் தொழிற்புரட்சி காலத் திறன்களை வளர்த்தல், இந்தியாவின் நம் காலத்துக் கண்டுபிடிப்பாளர்களான அஜய்பாட் (பென்டிரைவ்), சபீர் பாட்டியா (ஹாட் மெயில்) போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள், தொழில்நுட்பத் தேடலுக்கான பொறி. அவர்களது ஆர்வம் இந்தியப் பள்ளிப் பருவத்திலேயே விதைக்கப்பட்டதை விவரிப்பவையாக உள்ளன. அந்த வகையில் படைப்பாக்க அறிவியல் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கிட ‘ஸ்டெம்’ ஏதோ ஒரு வடிவில் பள்ளிக் கல்விக்குள் நுழைவது அவசியமாகும்.

ஆசிரியர் - மாணவர் உறவு: வெறும் சொற்களாகவும் படங்களாகவும் இருக்கும் பாடப்புத்தக அம்சத்தை, பலவகைச் சோதனைகள் வழியே புதிய கற்பித்தல் முறைகளில் திறம்பட மாணவர்களிடம் கொண்டுசெல்லும் ஆசிரியர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களது திறன்களை மாணவர்களின் தேடல் நிறைந்த கேள்விகளோடு இணைக்கும் திறந்தவழி உறவுப் பாலத்தை ‘ஸ்டெம்’ கல்விமுறையில் வழங்க முடியும் என்பது அடுத்த பரிமாணம்.

இறுகிப்போன வகுப்பறை எனும் சிறைக் கூண்டுகளில் இருந்து கல்வியை மீட்டெடுத்து, பட்டாம்பூச்சிகளின் தேடலுக்கு வான்வெளியைப் பரிசளிக்கும் ‘ஸ்டெம்’ கல்விமுறையின் ஆற்றல்மிக்க வழிகாட்டும் செயல்வீரர்களாக ஆசிரியர்களுடன் அறிவியல் தொழில்நுட்ப அறிஞர்களும் ஆர்வலர்களும் கைகோக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். - ஆயிஷா இரா. நடராசன் கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

To Read in English: Knowledge revolution will STEM from changing face of classroom

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 secs ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்