பிராமணர் அல்லாத இயக்கத்துக்குத் தோல்வியா?

By கி.வீரமணி

சமஸ் எழுதிய ‘தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ கட்டுரையை வாசித்தேன். கட்டுரையின் கடைசிப் பகுதி தொடர்பாக விவாதிக்க நிறைய இருக்கிறது. “திமுக தலைவர் முதுமைக்கு ஆளாகியுள்ளார். ஜெயலலிதா மறைந்துவிட்டார். இனிமேல், சித்தாந்தத்துக்கு இடம் இல்லை; சாதிய, மதவாத சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழிகோலும்; தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறிவைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை; இப்போது எண்ணிக்கைப் பெரும்பான்மையும் பொருளாதார வலுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணிதிரள ஆரம்பித்திருப்பதன் விளைவு, ஏனைய கட்சிகளையும் இது பீடிக்கும்; முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணிதிரளல்களும் பேரங்களும் நடக்கும். கூடவே, மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்” என்று ‘ஆரூடம்’ சொல்கிறது கட்டுரை. இதனைத் ‘தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பத்தை’ நுணுக்கமாக அறிந்த கருத்தாகக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் சாதிக் கட்சிகளும், சாதியத் தலைவர்களும் அவ்வப்போது வெளிப்படையாக நடைபோட்டது உண்டு. ‘வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை’ என்கிற அளவுக்குக்கூட இருந்திருக்கிறது. அவை எல்லாம் எடுபடவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட சாதிச் சங்கங்களை ஒருங்கி ணைத்து, அரசியல் கட்சிகளை மிரட்டிப் பார்த்த காட்சிகளைத்தான் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? அவை எல்லாம் தேர்தல் களத்திலே கூட காலடி எடுத்துவைக்க முடியாமல் தன்னளவில் கரைந்து உருத் தெரியாமல் போய் விட்டன.

சிந்தனைப் புரட்சி

சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை காட்டினாலும், வெளிப்படையாகத் தம் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டம் போடும் கலாச்சாரம் ஒழிந்துபோயிற்று. அப்படிப் போட்டுக்கொள்வது அவமானகரம் என்ற மனநிலை - திராவிட இயக்கத்தால், குறிப்பாக தந்தை பெரியாரின் சிந்தனைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.

பிற மாநிலங்களில், இடதுசாரித் தலைவர்கள் கூடப் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தைத் துறக்க முடியாத நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான, வரலாற்றை அலட்சியப்படுத்திவிட முடியாது.

குறிப்பிட்ட சில வட்டாரங்களில், மாவட்டங் களில் குறிப்பிட்ட சாதியினர் அதிகம் இருந்தால், அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதில் பெரிய தத்துவார்த்தம் இருப்பதாகக் கூறிவிட முடியாது.

பாஜகவின் வியூகம்

சாதிக் கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் கட்டிய பணத்தை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். சாதியைச் சொல்லித் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற முடியாத காரணத்தால் அரசியல் முகபடாமுடன் காட்சியளிப்பவர்களை அடையாளம் கண்டு, வாக்காளர்கள் கழித்தல் கணக்கைப் போட்டுத் தள்ளினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அடிப்படையே இல்லாத சாதிய மதவாதம் தலை தூக்குவதற்கு எங்கே இடம் இருக்கிறது?

கட்டுரையாளர் ‘டெல்லியின் கை ஓங்கும்’ என்று சொல்லும்போது மதவாதம் ஓங்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. டெல்லியில் தமிழக அரசியலில் மீன் பிடிக்க எத்தனிக்கும் பாஜகவின் வியூகமும் தெரிகிறது. இதனை நானே முன்பு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், வடக்கே சில மாநிலங்களில் மத்திய பாஜக ஆடிய அரசியல் சித்து விளையாடல் தமிழ்நாட்டில் எடுபடாது!

தமிழ்நாட்டில் பிரதானமாக இருக்கக்கூடிய கட்சிகளைத் தாண்டி சாதி, மதவாதம் தலைதூக் கும் என்பதெல்லாம் ஒருவகை ‘மாயாவாதம்’தான். கட்டுரையின் கடைசிப் பகுதியோ ஒரே குழப்பம்.. குழப்பம்!

துவேஷமல்ல காரணம்

“திராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான ஒரு காலகட்டத்துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கில்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்திய சாதியக் கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல்வியே அது. தன்னுடைய கட்சியைத் தாண்டி, எதிரிகள் மீதும்கூட ஜெயலலிதாயிஸத்தைப் படரவிட்டுச் சென்றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்!” என்று கட்டுரையை முடித்துள்ளார் தோழர் சமஸ்.

‘பிராமண’ எதிர்ப்பு என்பது ஒரு வரலாற்றின் கட்டாயம். அந்த இயக்கம் தமிழ் மண்ணைப் புரட்டிப்போட்டிருக்கிறது. அடித்தட்டு மக்கள் மத்தியிலே ஒரு தன்மான உணர்வை, சிந்திக்கும் கூர்மையைத் தட்டி எழுப்பியிருக்கிறது. அந்த எதிர்ப்புக்கான காரணம் துவேஷமல்ல; துவேஷம் செய்யும் தத்துவத்தையும், சமூகத்தின் சகல பரப்பிலும் ஆதிக்கம் செய்த அதன் வேர்களையும் அதாவது, மூல பலத்தையும் நொறுக்கித் தள்ளியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற அளவுக்குச் சூழ்ச்சித் திறன் மிக்க பிராமணியத்தை மக்களுக்கு அடையாளம் காட்டி, பெரும்பாலான மக்கள் மத்தியில் பிராமணியத்தை அடையாளம் காட்டிய இயக்கத்தின் மீது - அதன் தத்துவத் தலைவர் மீது கட்சிகளையெல்லாம் கடந்து, வணக்கத்தையும் நன்றியையும் செலுத்தும் ஒரு மனப்போக்கும் தமிழ்நாட்டில் உண்டு.

பெரியார் தோற்றுவிட்டாரா?

காங்கிரஸிலிருந்து பிராமண ஆதிக்கப் போக்கை எதிர்த்து, பிராமணர் அல்லாத மக்களுக்கான பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை வலியுறுத்தியும், காங்கிரஸுக்குள்ளே போர்க்கொடி தூக்கி, ஒரு கட்டத்தில் அதற்கு காங்கிரஸ் பயன்படாது என்று திண்மையாகக் கருதி வெளியேறி, பிராமணர் அல்லாத இயக்கத்தை ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் நிர்மாணித்த தந்தை பெரியார் தோற்றா போய்விட்டார்?

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு சட்டப்பாதுகாப்புடன் வீறு நடை போடவில்லையா? அன்றைக்கு வெறும் 50% பிராமணர் அல்லாதோருக்குக் கோரினார் பெரியார். அதற்கு இணங்க மறுத்த பிராமணர்கள், இப்போது மாநாடு கூட்டி, ‘எங்களுக்கு இடஒதுக்கீடு தந்திடுக’ என்று தீர்மானம் போடும் காட்சி நம் கண்முன்னே நடக்கவில்லையா?

நிலைக்கக் காரணம்!

இந்த சட்டப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப் பட்டவர் - கட்டுரையாளர் அடையாளம் காட்டும் ‘பிராமண’ப் பெண்மணியான முதலமைச்சர் ஜெயலலிதாதானே! அவர்கூட திராவிடப் போர்வையோடு, அதன் சமூக நீதிக் கொள்கையை ஏற்ற காரணத்தால்தான் நிலைக்க முடிந்தது! இதன் மீது யாராவது கைவைக்க முடியுமா? சங்கராச்சாரியாரை அவர் கைதுசெய்ய வில்லையா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மாநிலக் கட்சியாக இருந்தாலும், தேசியக் கட்சியாக இருந்தாலும் பிராமணர் ஒருவர் தலைமை தாங்க முடிகிறதா - பாஜக உட்பட? இது எதைக் காட்டுகிறது?

தமிழ்நாட்டில் 234 சட்டப் பேரவை உறுப்பினர்களுள் இரண்டே இரண்டு பேர்தான் பிராமணர்கள்; அதிலும் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு?

பாஜக இன்னும் தமிழ்நாட்டில் ஏன் வேர் பிடிக்க முடியவில்லை? அதன் மீதான பிராமணிய இந்துத்துவா எதிர்ப்பு என்பது இங்கு வேரூன்றி இருப்பது காரணம் அல்லவா?

புதிய தேசியக் கல்வித் திட்டம் என்பது - இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் இங்கு ஏன் நிலைநிறுத்த முடியவில்லை? இன்னும் சொல்லப்போனால், பாஜக எனும் மதவாத பிராமணிய இந்துத்துவாவை எதிர்க்க பெரியார் அலை தமிழ்நாட்டையும் கடந்து இந்தியா முழுவதும் தேவைப்படும் காலகட்டம் இது!

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்