சுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: கவிஞனும் கப்பலோட்டிய தமிழனும்

By செய்திப்பிரிவு

வ.உ. சிதம்பரனார், தான் பிறந்த ஒட்டப்பிடாரம், பாஞ்சாலங் குறிச்சிக்கு அருகில் அமைந்திருந்தது குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். கட்டபொம்மனுக்கு துரோகம் இழைத்ததற்காக அவப்பெயர் பெற்ற எட்டயபுரம் ஜமீனில் பிறந்தவர் பாரதி. இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தொலைவு 30 கிலோமீட்டர்கூட இருக்காது. வ.உ.சி.யும் பாரதியும் குடும்ப நண்பர்களும்கூட. என்றாலும் தம் சொந்த ஊர்களில் அவர்கள் சந்தித்துக்கொண்டதே இல்லை.

முதல் சந்திப்பு

அவர்களின் முதல் சந்திப்பு சென்னையில் நிகழ்ந்தது. 1906இன் பிற்பகுதியில் தம் நண்பர் ஒருவரைச் சுங்குராம் தெருவில் சந்தித்துவிட்டு பிராட்வே சாலையைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த ‘இந்தியா’ வார இதழின் அலுவலகத்தை வ.உ.சி. கண்டார். உள்ளே நுழைந்து மகாகவியைச் சந்தித்தபோது பரஸ்பர மரியாதை மட்டுமல்லாமல், கூர்மையான சில கருத்து வேறுபாடுகளும் நிறைந்த ஒரு நட்பு பூத்தது. அப்போது 34 வயதினரான வ.உ.சி., பாரதியைவிட 10 வயது மூத்தவர் என்றாலும் மகாகவியின் மகத்துவத்தை அங்கீகரிக்க, இந்த வயது வேறுபாடு தடையாக இருக்கவில்லை. ’என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்துகொண்டிருந்த தேசாபிமான நெருப்பு, விளக்குப் போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது’ என்று பின்னாளில் இந்தச் சந்திப்பைப் பற்றி பெருந்தன்மையுடன் பதிவுசெய்திருக்கிறார் வ.உ.சி.

அவர்கள் இருவரும் முதல்முறையாகச் சந்தித்ததற்கு அடுத்த சில ஆண்டுகளில் நிகழவிருந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அசாதாரணமான அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்துக்கான வெகுமக்கள் திரட்சியின் முதல் கட்டமான சுதேசி இயக்கம், அதன் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி விரைவில் தன்னுடைய பிரமிப்பூட்டக்கூடிய கப்பல் நிறுவனம் வழியே, சுதேசியப் பொருளாதாரப் போராட்டத்தைத் தொடங்கினார். கப்பல் நிறுவனத்துக்கு முதலீடு திரட்டுவதற்காக வ.உ.சி தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தமிழகமெங்கும் கடுமையான பயணங்களில் அடுத்த ஆண்டு கழிந்தது. வ.உ.சி.யோடு பாரதியும் பல மேடைகளில் பங்கேற்று உரையாற்றினர். வ.உ.சி.யின் தொழில்முயற்சி குறித்து, தான் நடத்திவந்த இதழ்களில் மிக விரிவாகவும் பேரார்வத்துடனும் தொடர்ந்து எழுதிவந்தார். நடைமுறை சாத்தியமற்றதென்றாலும் லட்சியவாதம் சார்ந்த பல அறிவுரைகளையும் பாரதி என்கிற கவிஞர் வழங்கிவந்தார்.

இணைந்து பணி

1907இல் சூரத்தில் நடந்த கொந்தளிப்பு மிகுந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு ஒன்றாகப் பயணித்து, லோகமான்ய திலகருடைய அணியின் சார்பாகச் செயல்பட்டதில், அதற்கு வலுச்சேர்த்ததில் இருவருக்கிடையிலான பிணைப்பு மேலும் வலுப்பட்டது. திலகர், அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களை முதன்முறையாகச் சந்தித்துவிட்டு பாரதியும் வ.உ.சியும் இரட்டிப்பு உத்வேகத்துடன் திரும்பினர்.

சூரத் பிளவுக்கு அடுத்த மூன்று மாதங்களில் சுதேசி இயக்கம் உச்சத்தை அடைந்தது. சுதேசிக் கப்பல்களைச் செலுத்தியது நீராவியா தேசப்பற்றுப் பிரச்சாரமா எனத் திகைக்கும் அளவுக்கு வ.உ.சி.யின் செயல் வேகம் இருந்தது. வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவா இணைந்த பிறகு இந்த நிலை மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மேடைப் பேச்சின் வரலாற்றாசிரியர் பெர்னார்ட் பேட் ’பேச்சின் பிழம்பு’ (‘Oratorical incandescence’) என்று குறிப்பட்டதுபோல் இருவரின் பேச்சாற்றலும் ஒளிர்ந்தன. வ.உ.சியும் சிவாவும் அரசியல் தொடர்பாடலுக்கான ஊடகமாகத் தமிழை வலுப்படுத்தினர். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் அன்றாடம் நிகழ்ந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் கம்பெனியின் போட்டி, பிரிட்டிஷ் நீராவி கப்பல் நிறுவனத்துக்கு எதிராகத் தீவிர அறைகூவலை விடுத்தது. இதையடுத்து வ.உ.சி இன்னொரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தார். பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கோரல் ஆலையில் தொழிலாளர் போராட்டத்துக்குத் தலைமை வகித்து அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுத்தார்.

அப்போது பிரிட்டிஷார் காரியத்தில் இறங்கினர். நெல்லை மாவட்ட ஆட்சியர் எல்.எம். விஞ்சு, அழைத்து மிரட்டியபோதும் வ.உ.சி பின்வாங்க மறுத்தார். நாடகீயத் தருணங்கள் மிக்க இந்த உரையாடலைப் பாரதி உணர்ச்சிப் பெருக்கான கவிதைகளில் பிரமாதமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

ராமனுக்கு ஒப்புமை

12 மார்ச் 1908 அன்று வ.உ.சியும் சிவாவும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் வன்முறை வெடித்தது. அரசு சொத்துகளை மக்கள் தீக்கிரையாக்கினர். பின்னாளில் இது ‘திருநெல்வேலி எழுச்சி’ என்று அழைக்கப்படலானது.

வ.உ.சி மீது தேசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. திருநெல்வேலிக்குப் பயணித்த பாரதி வ.உ.சியை சிறையில் சந்தித்த பிறகு, அச்சந்திப்பைப் பற்றி எழுதிய பதிவுக்குத் தமிழ் இதழியல் வரலாற்றில் என்றும் தனியிடம் உண்டு. அரசாளச் சொன்னாலும் காட்டுக்குச் செல் என்றாலும் மலர்ந்த செந்தாமரையைப் போன்ற ராமனின் முகம் இருந்ததாகச் சொன்ன கம்ப ராமாயண வரியை வ.உ.சி.க்குப் பொருத்திக்காட்டினார் பாரதி வ.உ.சி மீதான தேசதுரோக வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது என்றாலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரு ஆயுள் மட்டுமே உள்ள மனிதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்பது எவரும் அறியாதது.

தேசியவாத புனிதத் தலம்

வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட கொடூரமான தண்டனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சுறுத்தல். அதை உணர்ந்த பாரதி, பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஆனாலும் வ.உ.சியின் அரசியல் திட்டங்களுக்கான பாரதியின் பிரச்சாரம் விடாமல் தொடர்ந்தது. வ.உ.சிக்கு ஆதரவாக வழக்காடுவதற்கு ஒன்றும், மூழ்கிவிடும் நிலையில் இருந்த அவருடைய கப்பல் நிறுவனத்தை மீட்பற்கு மற்றொன்றுமாக பாரதி இரண்டு நிதிகளைத் திரட்டினார்- .

சிறையில் வ.உ.சியின் துன்பங்கள் தொடர்ந்தன. பழிவாங்கும் எண்ணம்கொண்ட அரசு, அவரைச் செக்கிழுக்க வைத்தது. ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்…’ என்ற காலத்தால் அழியாத கவிதையை பாரதி எழுத, இதுவே வித்து. அசலான தேசப்பற்றாளர்களுக்கு வ.உ.சி அடைக்கப்பட்டிருந்த கோவைச் சிறைதான் 'தேசியவாத புனிதத் தலம்' என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.

மேல்முறையீட்டில் வ.உ.சிக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு, அவர் டிசம்பர் 1912இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகே தன்னுடைய நண்பரைச் சந்திக்க அவர் புதுச்சேரிக்குச் செல்ல வாய்த்தது. அது ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமிருக்க முடியாது. பாரதியின் வீட்டில் வ.உ.சி தங்கியிருந்த மூன்று நாளும், அவர்கள் இருவரும் 'வாசிப்பிலும் எழுத்திலும் ஆழ்ந்திருந்தனர்' என்று காவல் துறை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அரசியல் பிளவு

சுதேசிய இயக்கத்தின் தோல்வியின் காரணமாக தேசபக்தர்கள் வாழ்வாதாரத் திற்கும் போராட வேண்டியிருந்தது. பொருளீட்ட வ.உ.சி. எல்லா வகைகளிலும் முயன்றார். உணர்வுரீதியாக உடைந்திருந்த பாரதி, தலைமறைவு வாழ்க்கையை முடித்துக்கொண்டு தன்னுடைய இறுதி நாட்களைக் கழிக்கச் சென்னைக்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையில் அரசியல் பிளவுகளும் வெடிக்கக் காத்திருந்தன. காந்தியின் எழுச்சி, திலகரின் தொண்டர்களை நிலைகுலைய வைத்திருந்தது. மகாராஷ்டிரத்தில் திலகரைப் பின்பற்றியோர் இந்து மகாசபையில் இணைய, தமிழகத்தில் திலகரின் தொண்டர்கள் காந்தியை நோக்கி நகர்ந்தனர். பாரதியோ தயக்கமின்றி காந்தியை மகாத்மா என்றழைத்தார். வ.உ.சி. திலகரின் பாதையிலிருந்து வழுவாமல், காந்தியை அரசியல்ரீதியாக எதிர்த்து நின்றார். இந்த இருவேறு அரசியல் பாதைகள் இருவரின் நட்பை எப்படி பாதித்தது என்பதை அறியச் சான்றுகள் இல்லை.

உண்மை அஞ்சலி

1908இல் கப்பலோட்டிய வ.உ.சி. சிதம்பரம் 1920இல் கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்து, குறைந்த ஊதியம் அளித்துவந்த எழுத்தர் பணியில் சேர்ந்தார். இருவரும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அத்தோடு இல்லாமல் போயின. செப்டம்பர் 1921இல் பாரதி மறைந்தது நாளிதழ்ச் செய்தியாகவே வ.உ.சி.யை எட்டியது.

மரணிப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன்பாக 1933இல் வ.உ.சி தன்னுடைய நண்பர் குறித்து ஒரு நினைவுரையை வெளியிட்டார். அவருடைய மறைவுக்குப் பின் வெளியான இந்த நினைவுரை வ.உ.சி.யின் உண்மையுணர்வுக்கும் நேர்மைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. தன்னடக்கத்தோடு பாரதியின் மேதைமைக்குப் புகழுரை செலுத்தியிருக்கிறார் வ.உ.சி.

தீவிர சைவர்கள் தம்முடைய இறுதிக் கணங்களில் திருவாசகம் கேட்பது வழக்கம். வ.உ.சி.யோ தன் மரணப்படுக்கையில் பாரதி பாடல்களைக் கேட்டார். தன் உற்ற நண்பருக்கு வ.உ.சி. செலுத்திய உண்மை அஞ்சலி இது.

டிசம்பர் 10, 2021 அன்று ‘தி இந்து’வில் வெளியான கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்.

© தி இந்து

(சுருக்கமாகத் தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்