அரசியல் பந்தை அடிக்கத் திணறும் சித்து

பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, உறுதியான முடிவெடுக்கத் தயங்குகிறார். அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ், தேசிய ஜனநாயக முன்னணிக்கு அடுத்தபடியாக, மூன்றாவது போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சி உருவாகி இருப்பதே இதற்குக் காரணம்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் என்பதால், வாய்ப்பளித்தது பாஜக. சித்து, 2004 முதல் 2014 வரை பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதற்கிடையில், அவரது அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்குப் போய்விட்டது. அப்போது முதல் பாஜக மீது அதிருப்தியாக இருந்தவருக்கு ஆம் ஆத்மி மீது பார்வை திரும்பியது. டெல்லியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இக்கட்சிக்கு, பஞ்சாபில் மூன்று மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் இணைந்து செயல்பட அடித்தளம் போட்டார் சித்து.

இதை அறிந்த பாஜக, தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 28-ல் மாநிலங்களவை உறுப்பினராக சித்துவை நியமித்தது. மத்திய அமைச்சரவையிலும் சித்துவுக்கு இடம் கிடைக்கலாம் எனப் பேசப்பட்டது. இவை எல்லாவற்றையும்விட, அவருக்கு முதல்வர் பதவி மேல் ஆசை வந்துவிட்டது. ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாகவே, 12 ஆண்டு காலம் இருந்த பாஜகவிலிருந்து, கடந்த ஜூலை 18-ல் வெளியேறினார். மாநிலங் களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் சித்து.

முதல்வர் வேட்பாளராக சித்துவை முன்னிறுத்த ஆம் ஆத்மியில் எதிர்ப்புகள் கிளம்பின. வேறுவழியின்றி சித்து ‘ஆவாஸ்-எ-பஞ்சாப் (பஞ்சாபின் குரல்)’ எனும் அரசியல் அமைப்பைத் தொடங்க வேண்டியதாயிற்று. பஞ்சாபை அழித்தவர்களை (பாஜக-சிரோமணி அகாலி தளம்) எதிர்க்கப்போவதாக அறிவித்தார் சித்து. இவருடன் இணைந்த வலுவான தலைவர்களான முன்னாள் இந்திய ஹாக்கி வீரரான பர்கத் சிங், சுயேச்சை எம்எல்ஏவான சிமர்ஜித் சிங் பெய்ன்ஸ் மற்றும் அவரது சகோதரர் பல்வந்த் சிங் பெய்ன்ஸ் ஆகியோர் இருவேறு திசைகளில் திட்டமிடுகின்றனர். இவர்களில் பர்கத் ஆம் ஆத்மியுடனும், பெய்ன்ஸ் சகோதரர்கள் காங்கிரஸிலும் கூட்டணி சேர விரும்புகின்றனர். இத்துடன், லஞ்சம் வாங்கியதாக ஆம் ஆத்மியால் வெளியேற்றப்பட்ட கேப்டன் சுச்சா சிங் சோட்டேபூரும் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். சுச்சாவுடனும் சித்து கட்சித் தலைவர்கள் ரகசிய நட்புறவுகளை வைத்துள்ளனர். இந்தக் குழப்பத்தினால், சித்து தனது அமைப்பை ஒரு அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் இன்னும் பதிவுசெய்யவில்லை. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, ஆஆக என்ற மும்முனைப் போட்டியில் பாவம் சித்து, பந்தை எந்தத் திசையில் அடிப்பது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.

- ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்