தேசப் பிரிவினைக் கதைகளுக்குள் மண்டோவை அடைத்துவிட முடியுமா?

By முக்பில் அஹ்மார்

தேசப் பிரிவினைப் பின்னணியில் எழுதப்பட்ட ‘டோபா டேக் சிங்’, ‘டண்டா கோஷ்த்’, ‘கோல் தோ’ போன்ற சிறுகதைகள் பாகிஸ்தான், இந்தியாவைத் தாண்டியும் உலகம் முழுவதற்கும் சாதத் ஹசன் மண்டோவைக் கொண்டுசென்றன. துல்லியமான விவரணையுடனும் குரூரமான நேர்மையுடனும் தேசப் பிரிவினையின் பயங்கரங்களை அவர் எழுதிய விதத்துக்கு அருகில் எந்த எழுத்தாளராலும் வர முடியாது என்பது உண்மைதான். ஆனால், தேசப் பிரிவினை தொடர்பான படைப்புகளோடு மண்டோவை நாம் குறுக்கிவிட முடியுமா?

இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்பியவர் நாடக ஆசிரியர் ஷாகித் அன்வர். மண்டோவின் ஆறு கதைகளின் அடிப்படையில் ‘காயிர் ஜரூரி லோக்’ எனும் நாடகத்தை எழுதியவர் அவர். படைப்பூக்கமும் மன உறுதியும் மிக்க எழுத்தாளரான மண்டோ 20-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து வானொலி நாடகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு அனுபவக் குறிப்புத் தொகுப்புகள் மற்றும் ஒரு நாவலை எழுதியிருக்கிறார். உண்மையின் அச்சமற்ற வெற்றியாளராக இருந்த மண்டோ, எந்தவிதமான பாசாங்கையும் அணுகவிடாத கர்வத்துடன் இருந்தவர். விளிம்புநிலை மக்களுக்காக எழுதிய அவர், அடக்குமுறையை ஆதரிக்கும் கட்டுப்பெட்டித்தனத்தைப் பகிரங்கமாகப் பகடிசெய்தார். அவரது கதாபாத்திரங்களில் பாலியல் தொழி லாளர்கள், அத்தொழில் தரகர்கள், எழுத்தாளர்கள், ஏன் பைத்தியக்காரர்கள்கூட உண்டு. அவர்கள் பெரும்பாலும் பெயரற்ற மனிதர்கள். தங்களுக்கான அடையாளம், கண்ணியத்துக்கான அவர்களது இடைவிடாத தேடலை ஆராய விரும்பினார்.

போலித்தனத்தை விமர்சித்தவர்

அவரது ‘மம்மி’ சிறுகதை பாலியல் தொழில் நடக்கும் விடுதியின் தலைவியான, வயதான, இரக்கமுள்ள பெண்ணைப் பற்றியது. அவள் ஒரு தொந்தரவாகப் பிறரால் பார்க்கப்பட்டாலும், வெளியாட்களால் துன்புறுத்தப்பட்டாலும் தனது வாடிக்கையாளர்கள் மீது எப் போதும் அக்கறை காட்டுபவள். தனது வாடிக்கையாளன் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைப் பார்த்து வெகுண்டெழுந்து, அவனை இரக்கமில் லாமல் அடித்து விளாசுவாள். அதே வாடிக்கையாளன் நோய்வாய்ப்படும்போது அருகில் இருந்து அவனைக் கவனித்துக் கொள்வதும் அவள்தான். கனிவான உள்ளம் கொண்டவளாக இருந்தபோதிலும், அவளது விடுதிக்குச் சென்றுவருகின்ற, வசதிபடைத்த, மதிப்பு மிக்க, சமூகத்தில் தங்கள் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் மனிதர்களால் நகரத்தைவிட்டே வெளியேறும்படி அவள் நிர்ப்பந்திக்கப்படுவாள். இந்த நகை முரணை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் மண்டோ. சமூகத்தால் புறக்கணிக்கப்படு கின்ற, அதே சமயம் தங்களது கண்ணியத் தையும் மனிதத்தன்மையையும் கைவிடாத பெண்கள் மீதான அவரது மரியாதையை வெளிக்காட்டும் இந்தக் கதை, சமூகத்தின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்துகிறது. வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அநீதிகளை விளிம்புநிலை மக்களால் எதிர்க்க முடியும் என்று மண்டோ நம்பினார்.

உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவ, சமூகம் தவறுவதைத்தான் தனது கதைகளில் அவர் தொடர்ந்து சுட்டிக்காட்ட முயல்கிறார். பிழைப்புக்காக ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் சமூகம் இது. பலம் பொருந்தியவர்தான் உயிர் பிழைத்திருக்க முடியும். அப்படியான சூழலிலும் அன்பு முகிழ்க்கிறது, இறக்கிறது. மனிதத்தன்மை நிறைந்த அதே சமயம் சலனப்படுத்தக் கூடிய அவரது கதைகள் வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டின. ‘ஹதக்’ எனும் மற்றொரு கதையில், பாலியல் தொழிலாளியான செளகந்தி ஒரு போலீஸ்காரரைக் காதலிக்கிறாள். தன்னைத் தவிர வேறு ஆண்கள் அப்பெண்ணை அணுக அவள் அனுமதிக்கக் கூடாது என்று ஓர் இரவில் அவளை அந்த போலீஸ்காரர் எச்சரிக்கிறார். துரோகம் மற்றும் பொய்களின் விளையாட்டு மனித உடலைத் தன்னுடைய இடமாக்கி விளையாடுகிறது.

எழுத்தில் உறைந்த உண்மைகள்

“தனது சமகாலத்தை மட்டும் மண்டோ தனது எழுத்தில் சித்தரிக்கவில்லை. நமது கூட்டுப் பிரக்ஞையை எந்தச் சமரசமும் இன்றிப் பிரதிபலித்தார். ஒடுக்குமுறை அரசியல் ஒரு குடிமைச் சமூகத்தின் அசலான உறுப்பினர்களான எளிய மக்களை எப்படிப் புறக்கணிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தினார்” என்று அன்வர் என்னிடம் குறிப்பிட்டார்.

உண்மையில், வேறு வழியின்றி பாகிஸ்தானுக்குக் குடிபெயர்வதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே தான் கவனிக்கப்படாதவராக இருப்பதாகக் கருதினார் மண்டோ. பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்பாக, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக மூன்று முறை அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத் தப்பட்டார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தனது நிலை என்ன என்பதை அவர் உணர்ந்திருந்தார். தன்னைப் போன்ற வர்களுக்கு ஒருபோதும் உரிய மரியாதை கிடைக்காது என்பதை அவர் புரிந்துகொண்டார்.

“அனைத்துவிதமான கட்டுப்பெட்டித் தனங் களுக்கும் எதிராக நிற்கும் துணிச்சலும், சுதந்திரமான உணர்வும் மண்டோவின்பால் என்னை ஈர்த்தன” என்று நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மண்டோவைப் பற்றி தான் இயக்கும் அடுத்த படம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இது.

சமரசம் அற்றவர்

மண்டோ ஒருபோதும் விலகி நின்று எழுதவில்லை. அசுத்தமானவை என்று சமூகம் நினைக்கும் விஷயங்களைப் புனிதமாகக் கருதினார். எப்போதும் தனது கதாபாத்திரங்களுடன் கைகோத்து நடந்தார். தான் சித்தரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அவரும் இருப்பார். தூய்மையான, அரூபமான வடிவில் இருந்துகொண்டு, சூழலை மதிப்பிட்டவாறு, பரிவுடன் எழுதுவார். அவரது கதைகள் மிகவும் நேரடியானவை. நெருக்கமானவை. அவை கதைகள் அல்ல ஒருவரது சொந்த அனுபவங்கள் என்று நம்மை நினைக்க வைப்பவை. நாகரிகம் இல்லாதவர் எனும் குற்றச்சாட்டைத் தனது வாழ்நாள் முழுவதும் சுமந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அவர் ஒருபோதும் அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை.

“எனது கதைகள் உங்களுக்கு அழுக்காகத் தெரிந்தால், நீங்கள் வாழும் சமூகம் அழுக்கானது என்று அர்த்தம். எனது கதைகள் மூலம் நான் உண்மையை மட்டுமே அம்பலப்படுத்துகிறேன்” என்று தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் சொன்னார். தான் நம்பியவற்றில் அவர் கொண்டிருந்த இந்தப் பிடிப்பினால்தான் இன்றைக்கும் பொருத்தமானவராக அவர் இருக்கிறார்.

- முக்பில் அஹ்மார், எழுத்தாளர், நாடகக் கலைஞர்.

@ ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்