காந்தி 147: தன்னை வருத்தும் ஆயுதம்

By பழ.அதியமான்

உண்ணாவிரதத்தை, அரசியலில் ஒரு போராட்டக் கருவியாக மாற்றி வெற்றி கண்டார் காந்தி.

காந்தியிடம் இருந்த எது அவரை மகாத்மாவாக்கியது? எது அவரை தேசப்பிதாவாக்கியது? காந்தியிடம் இருந்த லட்சிய வேட்கையை விடவும், அவர் மேற்கொண்ட வழிகள்தாம் அவரை ஆகச் சிறந்த ஆளுமையாக வரலாற்றில் பதிவு செய்தது என்று சொல்லத் தோன்றுகிறது.

லட்சியத்தை அடைய காந்தி கையாண்ட முறைகள் மற்றவர்களிடம் இல்லாதவை; புதியவை அல்லது புதுப்பிக்கப்பட்டவை. அவர் தந்த விளக்கங்கள் அவ்வடிவங்களை ஆன்மிக நிலைக்கு இட்டுச் சென்றன. அப்போராட்டங்கள் தலைவனோடு மட்டும் தொடங்கி முடியவில்லை; பங்குபெறும் ஒவ்வொரு தொண்டரோடும் அது பின்னியிருந்தது. உப்பு சத்தியாக்கிரகம் என்றால் உப்பு அள்ள அவர்கள் கடற்கரைக்குப் பல மைல் நடந்து சென்றார்கள். வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டம் என்றால் தீண்டல் பலகையின் முன் வெய்யிலில் காய்ந்தார்கள், மழையில் நனைந்தார்கள்.

மூன்று சக்திகள்

களத்தில் பீரங்கிகளோடு நின்ற எதிரியுடன் சமர் புரிய தந்திரசாலி காந்தி பலப்பிரயோகத்தை முற்றிலும் தவிர்த்தார். ஆயுதங்களின் வலிமையால் வெற்றியடைவது சாத்தியமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த புத்திசாலி காந்தி, சூட்சும சக்திகளைக் கையில் எடுத்தார். முதலாவது சத்தியம், இரண்டாவது உபவாசம், மூன்றாவது மௌன விரதம்.

சத்தியாக்கிரகத்தைப் பெரும்பாலும் பிரித் தானியருக்கு எதிராக, தானும் கைக்கொண்டார்; மற்றவருக்கும் பரிந்துரைத்தார். உபவாசம் என்கிற உண்ணாவிரதத்தைச் சக இந்தியரைத் தன் வழிக்குக் கொண்டுவரத் தான் மட்டுமே பயன்படுத்தினார். மூன்றாவதான மௌனத்தைக் காந்தி தன்னைச் சோதித்துக்கொள்ள உபயோகித்தார்.

இம்மூன்றில், உபவாசம் என்கிற தன்னை வருத்தும் ஆயுதத்தை, அரசியலில் ஆன்மி கத்தைக் கலந்த காந்தி எப்படி கையாண்டார் என்று நினைத்துப் பார்ப்பது சமகாலத்துக்கான போராட்ட வடிவத்தைக் கண்டுணர நம்மைத் தூண்டலாம்.

140 நாட்கள் உண்ணாவிரதம்

காந்தி தம் உண்ணாவிரதங்களை எதற்காக நிகழ்த்தினார்? 1918-ல் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அதுவே இந்தியாவில் அவரது முதல் உண்ணாவிரதம். அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் 1913-ல் இருமுறை தென்னாப்பிரிக்காவில் அவர் நிகழ்த்தியவை பிராயச்சித்த நோக்கம் கொண்ட உண்ணாவிரதங்கள். வன்முறைச் செயல்களுக்கு மன்னிப்பு கேட்கவும், அதைத் தடுக்கவுமாக நான்கு முறை உண்ணுவதை நிறுத்தினார். தீண்டாமைக்கு எதிரான உண்ணாநோன்புகளை ஐந்து முறையும் மதக் கலவரங்களை நிறுத்த நான்கு முறையும் உண்ணாவிரதம் இருந்தார்.

வேறு வகையிலும் காந்தி உண்ணாநோன் புகளைக் கடைப்பிடித்தார். சத்தியாக்கிரகத்தை நினைந்து ஊக்கம் பெற 1919 ஏப்ரல் 6 முதல் ஒவ்வொரு ஆண்டும் அந்நாளில் உண்ணாதிருந்தார். விடுதலை கிடைக்கும் வரை குறிக்கோளில் அழுத்தம் பெற திங்கட்கிழமைதோறும் 1921 நவம்பர் 28 முதல் உண்ணாமல் இருக்க முடிவெடுத்தாராம். ஆசிரமவாசிகளைத் திருத்தும் நோக்கத்துடன் பலசமயம் உண்ணாநோன்பு இருந்தார். எல்லாவற்றையும் கணக்கிட்டால் காந்தியின் உண்ணாவிரதங்களின் எண்ணிக்கை 34-ஐத் தொட்டுவிடும். 1913 முதல் 1948 வரை 35 ஆண்டுகளில் மொத்தம் 140 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

புலனடக்கமே நோக்கம்

பட்டினி விரதமிருக்கும் எண்ணம் காந்திக்கு எப்படித் தோன்றியது? தான் பிறந்த மாநில மான குஜராத்தில் ஜைனர்களிடம் நிலவிவந்த இறக்கும்வரை நீடிக்கும் சல்லேகனா என்ற உண்ணாவிரதத்தைக் காந்தி கவனித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே பிரதோஷ நாளில் அவர் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். எனினும் பகவத் கீதையிலிருந்து ஊக்கம் பெற்றே தாம் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்ததாக சுயசரிதையில் காந்தி உணர்த்தியிருக்கிறார். புலனடக்கமே காந்தியின் உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம். ‘உடலோடு சேர்ந்து உள்ளமும் பட்டினி விரதத்தை அனுஷ்டிக்காவிட்டால், அது நயவஞ்சகத்திலும் அழிவிலுமே முடியும்’ என்றார் காந்தி.

விரதங்கள் அநேகமாக எல்லா மதங்களிலும் இருக்கும் ஒரு வழக்கம்தான். மதங்களில் சடங்காக இருந்த உண்ணாவிரதத்தை, அரசியலில் ஒரு போராட்ட கருவியாக மாற்றி வெற்றி கண்டார் காந்தி.

எல்லாச் சூழலிலும் உண்ணாவிரதத்தைக் காந்தி பரிந்துரைக்கவில்லை. 1924-ம் ஆண்டில் வைக்கம் கோயில் தெரு நுழைவிற்காக சத்தியாக்கிரகம் நடந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தடுக்கப்பட்ட இடத்தில் சத்தியாக்கிரகிகள் பட்டினி கிடந்தார்கள். அப்போது காந்தி பட்டினி கிடக்க வேண்டாம் என்றெழுதினார்.

‘உங்களிடம் அன்புள்ளவருக்கு எதிரில் நீங்கள் பட்டினி கிடக்கலாம். அதுவும் உமது உரிமையை வற்புறுத்துவதற்கல்ல. அவரை நல்ல நெறிக்குக் கொண்டுவருவதற்காகும். என்னை விரோதி என்று கருதும் ஒருவரை சீர்செய்ய நான் பட்டினி கிடக்க மாட்டேன்’ என்றார் அவர்.

உண்ணாவிரதத்தை ‘பிளாக் மெயிலிங்’ உத்தியாகப் பயன்படுத்துவதைக் காந்தி எப்போதும் விரும்பியதில்லை. தந்தை மது குடிப்பதை நிறுத்த மகன் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் அதே மகன், சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படிக் கேட்டு, உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றார் காந்தி. “உரிமையை வற்புறுத்துவதற்கல்ல” என்ற சொற்றொடரின் பொருள் இதுதான். உண்ணாவிரதம் என்பது அன்புள்ளவர்களிடம் மாற்றம் ஏற்படுத்தத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு முறை என்ற தெளிவு காந்தியிடம் இருந்தது.

உலகம் முழுவதும் உண்ணாநிலை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரீஷ், கியூபா போன்ற நாடுகளில் சிறைக் கைதிகள் பலர் உண்ணாவிரதமிருந்தனர். பகத்சிங் 116 நாள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்தார். உண்ணாவிரதமிருந்த பலர் உலகம் முழுவதும் உயிர் இழந்துள்ளனர். யதீந்தரதாஸ், பொட்டி ராமுலு, சங்கரலிங்கம், திலீபன் ஆகியோர் அவ்வகையில் உடனே நினைவுக்கு வரும் அமர ஜீவிகள்.

காந்தி காலத்தில் உண்ணாவிரதங்களுக்கு முழு மதிப்பிருந்ததா? பல காலமாக உண்ணாவிரத முறை நிலவினாலும் காந்தி அதை அரசியலில் இடம்பெறச் செய்தபோது பலரும் எதிர்த்தனர். ‘அதனால் ஒரு பயனும் விளைவதில்லை, விளம்பரத்தைத் தவிர’ என்ற குற்றச்சாட்டு எழுந்துகொண்டே இருந்தது. பெரியார் உண்ணாவிரதத்தை மறுத்தார்.

போராட்ட வடிவம்

இத்தகைய எதிர்ப்புகள் இருப்பதைக் காந்தி அறிந்தே இருந்தார். “பொதுமக்கள் எனது உண்ணாவிரதத்தைப் பற்றிக் கவலையுற வேண்டுவதில்லை. அதை அவர்கள் கவனியாதிருப்பார்களாக. விரதம் என்னோடு கலந்த ஒன்று. கண் இழந்து வாழ்தலும் கூடும். உண்ணாவிரதம் இல்லாமல் நான் வாழ்தல் முடியாது” என்று காந்தி உறுதியாகச் சொல்லிவிட்டார். தமது இறப்பு உண்ணாநிலையினால் நிகழ வேண்டும் என்ற அளவுக்கு அதை விரும்பியிருந்தார்.

காந்தியின் உண்ணாவிரதத்தை யோசிக்கும் வேளையில் தற்காலப் போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டிய அவசியத்தை நோக்கி மனம் செல்கிறது. தொடர்புடையவரிடம் எந்தச் சிறு அசைவையும் ஏற்படுத்தாமலேயே நமது போராட்டங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. பொருளாதார இழப்போ அளவிட முடியவில்லை. பொருட்சேதம் இல்லாமல் தொடர்புடையவரைச் செயல்நோக்கித் தூண்டவுமான ஒரு போராட்ட வடிவத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ஏடாகூடமாக உற்பத்தியைப் பெருக்கிப் போராடுவது ஜப்பானிய முறை.

ஆத்ம சக்தியைப் பெருக்கும், இருதரப்பாரின் சுயபரிசீலனைக்கு வழிவகுக்கும் உண்ணாவிரதம் என்கிற அற்புத முறையை நமது மரபிலிருந்து கண்டெடுத்தவர் காந்தி. அவரது பிறந்த நாளில் காலத்திற்கேற்ற ஒரு போராட்ட வடிவத்தை நாம் சிந்திக்கலாம், விருப்பமிருந்தால்!

- பழ. அதியமான், எழுத்தாளர், ஆய்வாளர் தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

6 mins ago

தமிழகம்

18 mins ago

சுற்றுலா

38 mins ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்