இன்றைய இளைஞர்கள்: எங்கே நிகழ்கிறது பிறழ்வு?

By சிவபாலன் இளங்கோவன்

சமீப காலமாகப் பதின்பருவத்தினரின் நடவடிக்கைகளாக நாம் கேள்விப்படுபவை அச்சம்கொள்ள வைப்பதாகவே இருக்கின்றன.

240 கி.மீ. வேகத்தில் பைக் ஓட்டும் ஒருவரின் சமூக வலைதளக் கணக்கை லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களில் பெரும்பாலோர் மிகவும் இளைய மாணவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. அவரால் தூண்டப்பட்டு, இவர்களும் அதேபோல அதிவேகமாக பைக் ஓட்டுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அதிலும் ஒரு சிலர் பைக் வாங்கித் தரவில்லை என்பதற்காக வீட்டில் உள்ளவர்களின் மீது வன்முறையில் இறங்கும் செய்தியையும்கூட நாம் அண்மையில் நிறைய கேள்விப்படுகிறோம்.

ஆசிரியர்களையோ பெற்றோரையோ முதியோரையோ துளியும் மதிக்காத ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. அது குறித்து அவர்களிடம் எந்தக் குற்றவுணர்வும் இல்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது. சுய தேவைகளை மட்டுமே சிந்திக்கிற, தன்னலத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தராத, சக மனிதர்களின் தேவையை, அருகாமையை முற்றிலுமாகப் புறக்கணிக்கக்கூடிய பண்புகளுடன் பெரும்பாலான வளரிளம் பருவத்தினர் இருக்கின்றனர்.

அவர்களால் யாருடனும் ஆழமான, உண்மையான உறவைப் பேண முடிவதில்லை. எல்லா உறவிலும் சுயவிருப்பங்களே மேலோங்கி இருக்கின்றன. அதை விட்டு அவர்களால் வெளிவர முடிவதில்லை, வெளிவர முயல்வதும் இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, அடுத்த தலைமுறையைப் பண்படுத்துவதில் நாம் எங்கேயோ தவறிழைக்கிறோமோ என்று தோன்றுகிறது. அது எங்கு என்பதுதான் புரியாத ஒன்றாக இருக்கிறது.

அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள்

இன்றைய காலத்தில் வளரும் நாடுகளின் மிக முக்கியமான பிரச்சினையாகப் பதின்பருவத்தினரின் மனநலப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

வளரிளம் பருவத்தில் தற்கொலைகள், சாலை விபத்துகள், போதைப் பழக்கம் போன்றவை கடந்த பத்தாண்டுகளில் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. மேலும் இன்றைய மாணவர்களின் கவனச் சிதறல், பொறுமையின்மை போன்றவை கற்றலைப் பெரிதும் பாதிக்கின்றன.

கற்றலையும் தாண்டி சக மனித உறவு, பிறரின் உணர்வுகள் சார்ந்த புரிதல், சமூகத்தின் மீதான அக்கறை, பொறுப்புணர்வு, பண்பாட்டு மதிப்பீடுகள் போன்றவையெல்லாம்கூட இன்றைய இளைஞர்களிடம் பெருமளவு வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

இன்றைய இளைஞர்களிடம் உருவாகிவரும் இந்த சுயநலமிக்க, நிதானமற்ற, கட்டுப்பாடுகளற்ற நடவடிக்கைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? அவற்றால் இந்தத் தலைமுறை எதிர்காலத்தில் என்ன விதமான ஆபத்துகளை எதிர்கொள்ளப்போகிறது? அவற்றை நாம் எப்படித் தடுக்கப்போகிறோம்?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மூளையே ஆதாரம்

பொதுவாகவே, நமது மூளை வளர்ச்சியில் முதல் 15 வருடங்கள் மிக முக்கியமானவை. துரிதமாக மூளை வளர்ச்சியடையும் காலம் என்பதால், குழந்தைப் பருவமும், வளரிளம் பருவமும் ஒருவருடைய வளர்ச்சியில் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பிற்காலத்தில் ஒருவருக்கு உருவாகக்கூடிய சிந்தனைத் திறனையும், மேம்பட்ட உணர்வுகளையும், மனிதப் பண்புகளையுமேகூட இந்தப் பருவத்தில் உருவாகக்கூடிய மூளையின் வளர்ச்சியே தீர்மானிக்கிறது.

அதனால், இந்தப் பருவத்தில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தான உணவு, சுகாதாரமான வாழிடம், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், குடும்பச் சூழ்நிலை, பெற்றோரின் வளர்ப்பு முறை, எளிதான கல்வி அமைப்பு, சக மாணவர்களுடனான உறவாடல், பாரபட்சமற்ற சமூக வாழ்க்கை முறைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. ஒரு குழந்தை எதிர்காலத்தில் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரமற்ற வாழிடம், சிக்கலான குடும்பச் சூழல், முறையற்ற குழந்தை வளர்ப்பு, சுமையான கல்வித் திட்டங்கள், மானுட விழுமியங்கள் வீழ்ச்சியடைந்த சமூக அமைப்பு, பொருளாதார நெருக்கடிகள், வறுமை, போதைப் பொருள் பயன்பாடு, டிஜிட்டல் கருவிகளின் அதீதத் தாக்கம், ஒழுங்கற்ற சமூக வலைதளங்களின் ஆதிக்கம், திரைப்படங்களில் வன்முறையை விதந்தோதும் நாயக பிம்பங்கள் ஆகியவையெல்லாம் இந்தக் காலத்தில் இயல்பான மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய காரணிகளாக இருக்கின்றன. இதனால், குழந்தைகள் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை நாம் சமீப காலமாகக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.

உலகம் முழுவதும் 10 வயதிலிருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களில் ஏழில் ஒருவருக்கு மனரீதியான பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதேபோல 15 வயதிலிருந்து 19 வயதில் இருப்பவர்களின் இறப்புக்குத் தற்கொலைகளும், சாலை விபத்துகளும் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்கிறது.

மனநலப் பிரச்சினைகள் பெருமளவில் இந்த வயதினரிடம் அதிகரித்துவருவதுதான் இந்தத் தற்கொலைகளுக்கும், சாலை விபத்துகளுக்கும் காரணம். சமீபத்தில் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவர் ஒருவரைப் பார்த்தேன். “கல்லூரி பிடிக்கவில்லை, நண்பர்கள் கேலி செய்கிறார்கள்” என்று குறை சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்த சில நாட்களில் பையில் கத்தியை மறைத்து எடுத்துச் சென்று நண்பர்களை மிரட்டியிருக்கிறார்.

சிறு அவமானங்களைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதுவும் புதிய தலைமுறை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எந்தப் பிரச்சினையிலும் அண்டவிடாமல் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதால், அவர்கள் முதல் முறை ஒரு பிரச்சினையையோ அல்லது அவமானத்தையோ எதிர்கொள்ளும்போது தடுமாறிப்போகின்றனர்.

மிகுந்த உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல், ஏதேதோ செய்து பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள். சிறு தோல்விகளுக்குக்கூடத் தற்கொலை வரை அவர்கள் செல்வதற்கு இந்தத் தடுமாற்றமும், உணர்ச்சிவசப்பட்ட, நிதானமற்ற நிலையுமே காரணம்.

பெற்றோர்களே முன்மாதிரி

பெற்றோர்களும் சமூகமும் முதலில் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பதின்பருவத்தினர் பெரும்பாலான விஷயங்களைத் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்களுக்கு முன்பு நாம் மானுடப் பண்புகளில், பிறரை மதிப்பதில், அறத்தோடு வாழ்வதில், சிக்கனமான வாழ்க்கை முறைகளில் உதாரணமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, சக மனிதர்களுடனான உறவில் மேன்மையையும், பரஸ்பர மரியாதையையும் கொடுப்பதை நம்மிடமிருந்து நமது குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் நாம் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். கல்வி என்பது அறத்தையும், அறிவியலையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக்கொடுப்பதாக இருக்க வேண்டும்.

மாணவர்களிடமிருந்து வெளிப்படும் தவறான, பிறழ்வான நடவடிக்கைகளை வைத்து அவர்களை எடை போடாமல், அதற்கான காரணங்களை அவர்கள் வாழும் சமூகத்திலிருந்தும், குடும்பச் சூழ்நிலையிலிருந்தும், கல்வி அமைப்பிலிருந்தும் கண்டறிந்து, அதற்கான தீர்வைத் தேட வேண்டும்.

வளரிளம் பருவத்தில் நிகழும் இப்படிப்பட்ட பிறழ்வான நடவடிக்கைகள் எல்லாம் ஒருவகையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஒரு பரவசத்தில் செய்யக்கூடியவையே. அதனால், இந்த வயதில் ஏற்படும் தவறான பழக்கவழக்கங்களில் இருந்தெல்லாம் இவர்களை எளிதாக மீட்டுவிட முடியும். அதனால் நாம் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் இந்தப் பிரச்சினையை அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டையும், சமூக வலைதள நடவடிக்கைகளையும் முறைப்படுத்த வேண்டும். டிஜிட்டல் சாதனங்கள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளைப் பற்றித் தொடர்ச்சியாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதை இன்னும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது தொடர்பான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

பெற்றோர்களிடம் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் வழியாகவும், திரை நேரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் வழியாகவும் நாம் மாணவர்களை இவற்றிலிருந்து ஓரளவு பாதுகாக்கலாம்.

ஒட்டுமொத்த சமூகமே தனது சமீபத்திய தவறுகளிலிருந்து மாற்றிக்கொண்டு, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒன்றாக மாற வேண்டும். சக மனிதர்களின் மீது பல்வேறு காரணங்களை முன்வைத்து நிகழும் வெறுப்புப் பேச்சுகளும், வன்முறைச் சம்பவங்களும் சமூக வலைதளங்களின் வழியாக மிக எளிதாக நமது குழந்தைகளிடம் வந்துசேர்ந்துவிடுகின்றன.

இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் இவையெல்லாம் தவறல்ல என்ற மனப்பான்மையோடு வளர்வார்கள். அதை உணர்ந்து ஒரு ஆரோக்கியமான சமூகத்தை இன்றைய குழந்தைகளுக்கு நாம் அமைத்துக் கொடுத்தாக வேண்டும்.

- சிவபாலன் இளங்கோவன், பேராசிரியர், மனநல மருத்துவர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

To Read this in English: Whither headed are today’s youth?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்