தண்டலம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள்!

By டி.எஸ்.சுப்பிரமணியன்

ராஜராஜ சோழன் (ஆட்சிக் காலம் பொ.ஆ. 985–1014) காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள், அரக்கோணத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பைத் தண்டலம் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் ஒன்று அக்காலத்தில் பெரிதாக இருந்திருக்க வேண்டும். அது மூன்றாக உடைந்து, நடுப் பகுதி மட்டும்தான் இப்போது கிடைத்துள்ளது. கல்வெட்டுப் படியைக் கல்வெட்டு அறிஞர்கள் எ.சுப்பராயலு, வெ.வேதாசலம், சு.இராஜவேலு மூவருக்கும் அனுப்பியபோது, இக்கல்வெட்டுகள் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள் என்று கூறினார்கள்.

இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் என்னவென்றால், அது கிராமத்தின் பெயரை இலுப்பைத் தண்டலம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அது பன்மா நாட்டில் அடங்குகிறது என்று கூறுகிறது. அதாவது, இந்த அழகிய கிராமத்தின் பெயர் இலுப்பைத் தண்டலம் என்று ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் மாறாமல் வழங்கிவருகிறது. இந்தக் கல்வெட்டு ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளை (பிரசஸ்தி) – அவர் போரில் வெற்றி கண்டு, நாடு பிடித்த பகுதிகளையெல்லாம் – பட்டியலிடுகிறது.

இந்தக் கல்வெட்டு, திருவெண்காடிச்சாணி என்ற பெயர் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணி இலுப்பைத் தண்டலத்திலுள்ள (திரு அகத்தீஸ்வரர்) கோயிலுக்குத் தானமாகக் கொடுத்த நிலம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. அக்கோயிலின் மூன்று சந்தி பூஜைக்கும் (மூன்று வேளை காலை, மதியம், மாலை வழிபாட்டுக்குரிய) செலவுகளுக்கு இந்த நிலத்தை அந்தப் பெண்மணியும் அவரது உறவினரும் தானமாக அளித்துள்ளனர்.

இந்தக் கல்வெட்டு அந்த நிலங்களின் எல்லைகளைக் குறிப்பிடுகிறது என்று சுப்பராயலு, வேதாசலம், இராஜவேலு ஆகியோர் கூறினார்கள். மணிகார்த்திக், அவருடைய நண்பர் வசந்த் ஆகியோரும், இலுப்பைத் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் இந்தக் கல்வெட்டைக் கடந்த ஜனவரி மாதம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் பார்த்துவிட்டு, அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் கு.சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளனர். கார்த்திகேயனும் வசந்தும் சந்திரசேகரனின் மாணாக்கர்கள்.

பேராசிரியர் சந்திரசேகரனும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான ம.ராஜேந்திரனும் நானும் ஜனவரி 20-ம் தேதி இலுப்பைத் தண்டலம் கிராமத்துக்குச் சென்றோம். அங்கு மேலும் ஒரு கல்வெட்டை கார்த்திகேயன் காண்பித்தார். அது பராந்தகச் சோழன் (ஆட்சிக் காலம் பொ.ஆ. 907 – 955) காலத்தைச் சேர்ந்தது என்று சந்திரசேகரன் கூறினார். அவ்வூரில் கோயில் அருகில் பல கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு அருகில்
வசந்த் (இடது)
கார்த்திகேயன்.

‘இலுப்பைத் தண்டலம் ஒரு அழகிய, வித்தியாசமான ஊர். வயல்கள் சூழ்ந்த மருத நிலப் பகுதி. இவ்வூரிலுள்ள கோயிலின் பெயர் அகத்தீஸ்வரர் கோயில். இந்தப் பெயர் கொண்ட கோயில்கள் சோழர் காலத்தில் குறைவாக இருந்தன. இப்போது பார்ப்பதைவிட இந்தக் கோயில் பெரிதாக இருந்திருக்க வேண்டும்” என்று ம.ராஜேந்திரன் கூறினார்.

இக்கோயில் முன்பு பெரிதாக இருந்ததாகவும் அது சிதிலமடைந்துபோனதால், 18 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைப் புதுப்பித்துக் கட்டினோம் என்றும் அந்த ஊர் மக்கள் கூறினார்கள். கோயிலின் கர்ப்பக்கிரஹத்தில் அழகிய, பெரிய லிங்கம் ஒன்று உள்ளது. விநாயகர், முருகன், துர்க்கை, பைரவர் போன்றோருக்குத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டியபோது, கல்வெட்டுகளை ஒரு இடத்தில் வைத்துள்ளனர். “அந்தக் கல்வெட்டுகளை ஜனவரி 18-ம் தேதி பார்த்தபோது, குறிப்பிட்ட ஒரு கல்வெட்டு மிகவும் முக்கியமானதாகவும் தெளிவாகவும் இருந்தது. மேலும், அந்தக் கல்வெட்டின் பின்புறம் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. உடனே, எங்கள் ஆசிரியர் சந்திரசேகரனிடம் கூறினோம்” என்றார்கள் கார்த்திகேயனும் வசந்தும்.

‘இக்கல்வெட்டைச் செதுக்கியவர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு பொறிப்பாளர். ஏனென்றால், ஒவ்வொரு எழுத்தின் மேலும் ஒரு தலைக்கட்டு உள்ளது. அக்காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடக் கல்வெட்டுகளில் இம்மாதிரி எழுத்துகளின் மேல் தலைக்கட்டுகள் (Serif Marks) இருக்கும்’ என்று கல்வெட்டு ஆய்வாளர் இராஜவேலு கூறினார். இக்கோயிலின் கல் பலகைகளின் மீது பெரிதாக மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி சுப்பராயலுவிடம் கேட்டபோது ‘அந்த மீன் சின்னங்கள் மங்களகரத்தைக் குறிப்பன. அவை பாண்டிய நாட்டைச் சேர்ந்தவை அல்ல. ஏனென்றால், பாண்டிய நாட்டுச் சின்னம் இரட்டைக் கயல்கள் ஆகும். இங்கு கல் பலகைகளில் ஒரு மீனின் சின்னம்தான் உள்ளது’ என்றார்.

அகத்தீஸ்வரர் கோயில்

இவ்வூரில் புதுக் கற்காலத்தைச் சேர்ந்த பல கருவிகளும் கிடைத்துள்ளன.

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட கல்வெட்டில் கிடைத்துள்ள வாசகத்தை இராஜவேலு இவ்வாறு படித்தார்:

1. பூண்டமை மனக்கெளெ காந்தனூர் சாலை…
2. நாடுங் கொல்லமுங் கபிங்கமும் பெட்டியை…
3. க விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள்…
4. து பந்மா நாட்டு இலுப்பைத் தண்டலமாகிய கந்த…
5. தாமன் பிராஹ்மணி திருவெண்காட்டிச் சாணியும் இவள்…
6. ற்கு தானமட்டின பூமியும் உறுப்பிட்டூர்க் கிரமங்…
7. த்தி கமார இராமவித்தனும் நடாதூர் மாதவ சோமா…
8. மூன்று ஸந்தியும் பலி வலமி செயக் கொட்டவ…
9. ண்டக நூர் மாதவச் சோமாசி பூமிக்கு தெற்கும் தென்
10. (க்கும்) வடபாற்கெல்லை புற்றுக்கு தெற்கும் இனனா (ன் கெல்லை)…

பிப்ரவரி 5, 2022 அன்று இந்தியத் தொல்லியல் துறையை (சென்னை) சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இரா.இரமேஷ், ப.த.நாகராஜன், மோ.பிரசன்னா ஆகியோர் இலுப்பைத் தண்டலம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டைக் கண்டறிந்தனர். ‘இந்தக் கல்வெட்டு ராஜராஜ சோழனின் 24-ம் ஆட்சியாண்டில் (பொ.ஆ. 1009-ல்) வெளியிடப்பட்டது. இந்தக் கல்வெட்டு மிக நீளமாக, கல்லின் இரு புறமும் செதுக்கப்பட்டுள்ளது. அவரின் மெய்க்கீர்த்தி உள்ளது. இதனை உடனடியாக முழுமையாகப் படிக்க முடிவில்லை’ என்று அந்தக் கல்வெட்டைப் பற்றி இரமேஷ் கூறினார்.

பராந்தகச் சோழன் (பொ.ஆ. 907-955) கல்வெட்டும் இந்தக் கிராமத்தை இலுப்பைத் தண்டலம் என்றே குறிப்பிடுகிறது என்றார் இரமேஷ். எனவே, இக்கிராமத்தின் பெயர் சுமார் 1,100 ஆண்டுகளாக மாறாமல் இலுப்பைத் தண்டலம் என்றே வழங்கிவருகிறது. எல்லாக் கல்வெட்டுகளையும் இம்மூவர் படியெடுத்தனர். புதுவரவுகளான இந்தக் கல்வெட்டுகள் இலுப்பைத் தண்டலம் கிராம மக்களுக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும் ஒருங்கே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

- டி.எஸ்.சுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: subramsivam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

58 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்