நகைச்சுவை என்னும் அடிப்படை கடமை!

By செல்வ புவியரசன்

அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமை தொடர்பில் குறிப்பிடத்தக்கத் தீர்ப்பொன்றை அண்மையில் வழங்கியுள்ளது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை ஆயம். சர்வதேச பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடக்கத்தைப் போல அந்த உத்தரவின் முதல் வாக்கியமே வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

ஜக் சுரையா, பச்சி கர்காரியா, ஈ.பி.உன்னி, ஜி.சம்பத் போன்ற பிரபல அரசியல் பகடியாளர்களோ கேலிச் சித்திரக்காரர்களோ இந்தத் தீர்ப்பை எழுதினால், இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கடமைகளில் கூடுதலாக ஒன்றைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்திருப்பார்கள் என்று தொடங்குகிறது அத்தீர்ப்பின் முதல் வாக்கியம். அடிப்படைக் கடமைகளில் 12-வது கூறாக ஒன்றை அவர்கள் பரிந்துரைக்கக்கூடுமெனில் அது சிரிக்கவைப்பதற்கான கடமையாக இருக்கும் என்கிறது. கூடவே, அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமையின் கீழ் நகைச்சுவைக்கான உரிமையை விட்டுத்தள்ளுங்கள், மற்றவருக்கு நகைப்பூட்டுவது அடிப்படைக் கடமையும்கூட என்கிறார் இத்தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

வாராணசி முதல் வாடிப்பட்டி வரை

நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது இந்தியாவில் அவ்வளவு எளிதாகவும் இல்லை என்பதையும் நீதிபதி குறிப்பிடத் தவறவில்லை. தாகூரைக் குறித்து விமர்சனம் செய்ததற்காக, குஷ்வந்த் சிங் சந்தித்த எதிர்ப்புகளையும் நினைவூட்டியிருக்கிறார். இந்தியாவில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வாராணசி முதல் வாடிப்பட்டி வரை பிராந்தியவாரியாக ஒரு பட்டியல் இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளத்தில், மார்க்ஸும் லெனினும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்றால் மஹாராஷ்டிரத்தில் சிவாஜியும் வீர சாவர்க்கரும். “வாழ்நாள் முழுவதும் பழைய நம்பிக்கைகளை எதிர்த்துவந்த ‘பெரியார்’ ஈ.வெ.ராமசாமியும் எனது சொந்த நாடான தமிழ்நாட்டில் அப்படியொரு புனிதப் பசுவாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சுவாமிநாதன். நீதிமன்றத் தீர்ப்பில் இயற்பெயரோடு சிறப்புப் பெயரோடும் பெரியார் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதற்குமான ஒரு புனிதப் பசு இருக்கிறதென்றால் அது நாட்டின் பாதுகாப்புதான் என்று முத்தாய்ப்புடன் முடிகிறது அந்தப் பத்தி.

தொடர்புடைய தீர்ப்பில் மனுதாரரான மதிவாணனைக் குறிப்பிடுகையில், தேர்தலில் போட்டியிட்டாலும் அவ்வளவு முக்கியத்துவம் பெறாத கட்சியான சிபிஐ(எம்எல்) கட்சியின் நிர்வாகி என்கிறார் நீதிபதி. சில காகிதப் புலிகளும்கூட தங்களை சுதேசி சே குவேராக்கள் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள் என்று போகிற போக்கில் ஒரு குட்டு வைத்தும் நகர்கிறார்.

வழக்குக்குக் காரணமான ஃபேஸ்புக் பதிவு

மகளுடனும் மருமகனுடனும் சிறுமலைக்குச் சிற்றுலா சென்ற மதிவாணன், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டபோது ‘துப்பாக்கிப் பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என்று நகைச்சுவையாய் எழுதிய ஒரு குறிப்பு காவல் துறை அவர் மீது தேசத்துக்கு எதிராக சதிசெய்ததாக வழக்குப் பதிவு செய்யக் காரணமாகிவிட்டது. அதைக் குறிப்பிட்டிருக்கும் நீதிபதி வழக்கமாகப் புரட்சிக்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்காது, இவர் கன்னி முயற்சியாக அதை முயன்றுபார்த்திருக்கிறார் என்கிறார். மதிவாணனைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்க, நீதித் துறை நடுவர் உறுதியாக மறுத்துவிட்டார். நடுவரைப் பாராட்டியிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, மற்ற நடுவர்களும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக் கைதியாக்கவே காவல் துறையும் அரசுத் தரப்பும் விரும்புகின்றன; நீதித் துறை நடுவர்கள் திருப்தியடைந்தால் மட்டுமே அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன். குற்றச் செயலுக்கான தயாரிப்புகளோ முயற்சிகளோ இல்லாதது; ஒரே ஒருவர் மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்று வழக்குப் பதிவுசெய்திருப்பதன் முரண்பாடு உள்ளிட்ட சட்டரீதியான காரணங்களின் அடிப்படையில் மதிவாணன் மீதான குற்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சிகள் மாறலாம். ஆனால், அரசு என்கிற அமைப்பும் அதனால் இயக்கப்படுகிற காவல் துறையும் தமது இயல்பிலிருந்து மாறுவது அவ்வளவு எளிதல்ல. இந்த வகையில் காவல் துறை தொடர்பாக சுவாமிநாதன் அண்மையில் பிறப்பித்துள்ள வேறு சில உத்தரவுகளும் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன.

அனைத்து பதிவுகளுக்கும் ‘அட்மின்’ பொறுப்பல்ல

வாட்ஸ்அப் பதிவு ஒன்றுக்காக கரூர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மீது தொடரப்பட்ட வழக்கிலும் இவ்வாறே குற்றப் புகாரைச் செல்லாது என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். கரூர் வழக்கறிஞர்களுக்காகத் தொடங்கப்பட்டிருந்த ஒரு வாட்ஸ்அப் குழுவில், இரண்டு வெவ்வேறு சமூகங்களிடையே சுமுகமின்மையை ஏற்படுத்தக்கூடிய சில பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் குழுவில் ஒரு உறுப்பினர் இட்ட பதிவுக்காக அக்குழுவின் நிர்வாகியைப் பொறுப்புக்குள்ளாக்கலாமா என்பதுதான் கேள்வி.

ஒருவேளை, தடயவியல் துறை புலனாய்வில் குறிப்பிட்ட பதிவுகளை இடம்பெறச் செய்ததில் நிர்வாகிக்கும் உறுப்பினருக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதாகத் தெரியவந்தால் பின்பு அதுகுறித்து முடிவெடுக்கலாம். தற்போதைக்கு, வாட்ஸ்அப் குழுக்களின் உறுப்பினர்கள் இடும் பதிவுகளுக்கு அதன் நிர்வாகியை பொறுப்புக்குள்ளாக்க முடியாது என்று கிஷோர் எ. மஹாராஷ்டிர அரசு வழக்கில் பம்பாய் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி சுவாமிநாதன்.

வழக்காடும் உரிமைக்கும் பாதுகாப்பு தேவை

வழக்கறிஞர்களிடையேயான வழக்குகள் ஒருபுறமிருக்க, வழக்கறிஞர்களின் வாதாடும் உரிமையைப் பாதுகாக்கவும் நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு இல்லாமல், சமீபத்தில் மதுரை வழக்கறிஞரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்துப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகுதான் தமிழ்நாடு பார் கவுன்சிலே அச்சம்பவத்தைக் கண்டித்துள்ளது.

தஞ்சையில் சில மாதங்களுக்கு முன்பு மூத்த வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் உரிய உத்தரவுகள் இல்லாமல் காவல் துறை சோதனையிட்டது. அதைக் கண்டித்து தஞ்சை வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியும்கூட இன்னும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வழக்காடும் உரிமையை நிலைநிறுத்துவதில் மதுரை உயர் நீதிமன்றத்தின் விரைந்த செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. நிறைகோலினை நிறுத்திப் பிடிக்கும் கரம் வலதோ, இடதோ தட்டுகள் இரண்டும் சமமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

ஓடிடி களம்

28 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

மேலும்