மறுபடியும் முதலிலிருந்தா?

சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அரங்கம் இப்போது இருந்ததைப் போலவே பரபரப்பாக இருந்தது. கூட்டணி பேரங்களும் ஊகங்களும் நடந்துகொண்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி சார்ந்த விவாதங்களின் மையமாக இருந்தார். கூட்டணி விஷயத்தில் அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. தேர்தல் முடிவை அவர் தீர்மானித்தவராக இருந்தார்.

இன்றும் அவரது முடிவு தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் எனக் கணிசமானவர்களால் நம்பப்படுகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் அவரது கூட்டணிக்காகக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 5 ஆண்டுகளில் விஜயகாந்தின் முக்கியத்துவம் மாறிவிடவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. ஆனால், இதை அந்தக் கட்சியின் வலிமை என்று சொல்லிவிட முடியுமா?

மாற்று சக்தி என்னும் அஸ்திரம்

இந்தக் கேள்விக்குப் பதில் காண வேண்டும் என்றால், வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்தின் கட்சி தனித்துப்போட்டியிட்டது. “கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி” என்று சொன்ன விஜயகாந்த், இரண்டு திராவிடக் கட்சிகளையும் விமர்சித்து, தன்னை மாற்று சக்தியாக முன்னிறுத்திக்கொண்டார். எம்ஜிஆர் பாணியில் தன் பிரச்சாரங்களை அமைத்துக்கொண்டார்.

மாற்று சக்தியாக முன்னிறுத்திக்கொண்ட உத்திக்குக் கைமேல் பலன் கிடைத்தது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக அந்தத் தேர்தல் அவரை அடையாளம் காட்டியது. ஒரே ஒரு தொகுதியில்(விஜயகாந்த் நின்ற தொகுதி) மட்டுமே கட்சி வென்றது என்றாலும், மாநிலம் முழுவதும் 9%-க்கும் அதிகமான வாக்குகளை அவர் கட்சி பெற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் கட்சி தனியாகவே நின்றபோது கட்சி மேலும் 1.5% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றது.

மாற்று சக்திக்கான தேவையும் தேடலும் மக்களிடம் இருந்ததையே அது காட்டியது. அரசியல் அரங்கில் இரு பெரும் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்துப் பல கட்சிகளும் ஆளுமைகளும் விஜயகாந்துக்கு முன்பே இருந்துவருகிறார்கள். இவர்கள் யாரும் பெறாத ஆதரவைப் பெற முடிந்தது விஜயகாந்தின் சாதனை என்று சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம், யாருடனும் கூட்டணி கிடையாது என்று அவர் தீர்மானமாகச் சொன்னது. சாதிவாதம், மதவாதம் முதலானவற்றிலிருந்து விலகியிருந்ததும் ஒரு காரணம்.

அரசியல் பின்புலம் எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.

கூட்டணி தந்த ‘பரிசு’

தமிழகத்தில் மாற்று சக்தியாக உருப்பெற விரும்பிய பல கட்சிகளும் செய்த அதே தவறைத்தான் விஜயகாந்தும் 2011-ல் செய்தார். அன்று அவருக்கு அது காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் மூலம் அவர் தன் தனித்தன்மையை இழந்துவிட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டபோது அந்தத் தனித்தன்மை மேலும் பலவீனமானது. அவரது கட்சி ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை என்பதோடு, அவரது தனிப்பட்ட வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்பட்டது. மாற்று சக்தி என்னும் அஸ்திரத்தை இழந்த நிலையில் விஜயகாந்த் பத்தோடு ஒன்றாகிப்போனார்.

2011-ல் திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியின் விளைவாக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அவர், இன்று அதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தியின் விளைவாகத் திமுகவுடன் கூட்டணி சேருவார் என்று பேசப்படுகிறது. மீண்டும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் தனது தனித்தன்மை போய்விடும் என அவர் நினைப்பதால், மநகூவுடன் கைகோக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், கூட்டணி வைக்க ஆரம்பித்தபோதே தனித்தன்மை போய்விட்டது என்பதுதான் யதார்த்தம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜயகாந்துக்கு இருந்த வாக்கு வங்கி இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறி. தனித்து நின்றதன் மூலம் பெற்ற வலிமை அப்போது அவருக்குக் கைகொடுத்தது. தவிர, விஜயகாந்த் பொதுவெளியில் நாளுக்கு நாள் தன் பிம்பத்தைத் தானே உடைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டணி விஷயமாக முடிவெடுப்பதில் உள்ள தடுமாற்றமும் கட்சியின் வலிமையைக் குறைக்கக்கூடியதாகவே உள்ளது.

எப்படிப் பார்த்தாலும், இன்று திமுகவோடு அவர் சேர்ந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி உண்டு. ம.ந.கூ.வோடு சேர்ந்தால் அக்கூட்டணியின் வாக்குகளைக் கூட்டலாம். இந்தக் கூட்டணி பலம்பெற்று, அதன் விளைவாகத் தேர்தல் முடிவுகள் குழப்பமாக அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிப்பதில்கூட இந்தக் கூட்டணிக்குப் பங்கு இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் விஜயகாந்த் இந்த முறையும் ‘கிங் மேக்கர்’ஆகத்தான் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மூன்று அணிகள் களத்தில் நிற்கும் நிலையில் தனியாக நின்றால், கட்சியின் நிலைமை என்ன ஆகும் என்பதைச் சொல்லவே முடியாது. தனது தனிப்பட்ட செல்வாக்கு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் இது விஜயகாந்துக்குப் பயன்படலாம். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குப் போய்ச்சேரலாம். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்வதானால், “மறுபடியும் முதல்லேருந்து...”

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்