கேட்டிருப்பாய் காற்றே…

By செய்திப்பிரிவு

மரபான உணவுப் பயிரான நெல் உற்பத்தியிலிருந்து காலனியத்துக்குக் கொள்ளை லாபம் தரும் பணப்பயிர் உற்பத்திக்கு மாறியதால், உலகெங்கும் உழைப்பு சக்தி தேவை உருவாக்கப்பட்டது. ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், சுரங்கத் தொழில், இருப்புப் பாதை அமைத்தல், காட்டை அழித்து வசிப்பிடமாக்குதல் என்று 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய காலத்தில் தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தனர்.

மொரீஷியஸ் தீவுக்கு ஆய்வுக்காகப் போயிருந்தபோது ஒரு செய்தியைக் கேட்டு அதிர்ந்துபோனேன். வலிமையான உடற்கட்டுள்ள தமிழர்களைக் கப்பலில் இறக்கும்போதே ஒரு ரூபாய்க்கு (கூடுதல் விலைக்கு) வாங்கிக்கொள்கிறோம் என்று போட்டிபோட்டுச் சந்தையில், கூவிக் கூவி ஏலத்தில் விற்பது போன்ற நிலை அப்போது இருந்திருக்கிறது.

இலங்கை மலையகம், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, வியட்நாம், கம்போடியா, டிரினிடாட், ஜமைக்கா, ரியூனியன், மொரீஷியஸ், பிரெஞ்சு கயானா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனத் தமிழர்கள் கண்டம்விட்டுக் கண்டம் தாவுகின்ற வாழ்வைக் கொண்டிருந்தார்கள். இப்படிச் சென்றவர்கள் அங்கேயே ஐந்தாறு தலைமுறைகளாகத் தங்கி, அந்தந்த அரசுகளின் குடியுரிமையைப் பெறுவதற்கு எத்தனையோ போராட்டங்களை நடத்தி ரத்தம் சிந்தினார்கள். மின்கம்பத்தில் கட்டிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டும், மலேரியா காய்ச்சலுக்கு உள்ளாகியும், விஷஜந்துக்கள் தாக்கியும், பயணத்தின்போது நோய்கள் தாக்கியும், கடின உழைப்புத் தண்டனையாலும் இறந்துபோனவர்கள் ஏராளம். லயன்/ கம்பம் போன்ற வீடுகளில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுக் கல்வி, சுகாதாரம் என்று எந்த அடிப்படை வசதிகளும் பேணப்படாமல், மனித உரிமைகள் சார்ந்து சிறிதும் அக்கறை காட்டாமல் அவர்கள் கொத்தடிமைகள்போல நடத்தப்பட்ட காலம் அது.

இலங்கையின் மலையகத்துக்குப் புலம்பெயர்ந்தபோது வழி தெரியாத சூழலில், விஷஜந்துக்களும் வனவிலங்குகளும் தாக்கக்கூடிய இருள்சூழ் புதர்மண்டிய அந்த அடர்காடுகளில் நாங்கள் பயணிக்கிறபோது, அங்கங்கே வழிநெடுகிலும் கிடந்த எலும்புக் கூடுகளை வழித்தடமாகக் கண்டு, நாங்கள் பயணப்பட்டோம்; அந்த அளவுக்கு முன்னால் சென்ற மனிதர்கள் பலரது உயிரைப் பறிகொடுத்த பயணமாக, அது அமைந்திருந்தது என்றெல்லாம் எழுதுகிறார்கள். இலங்கை மலையகத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூரிலிருந்து போன நடேசய்யர் தொழிற்சங்கம் அமைத்து, மலையகத் தமிழர்களுக்காகப் பாடுபட்டிருக்கிறார். இன்று பச்சைப் பசும்பரப்பாய் விரிந்து பரந்திருக்கும் மலைக்காட்சிக்குக் கீழே புதையுண்ட வரலாறும் வாசிக்கப்பட வேண்டும். காலையில் நாம் சுடச் சுடப் பருகுவது தேநீரும் காபியும் மட்டும் அல்ல; மலையகத் தமிழர்களின் ரத்தமும்தான் என்று தனது ஆவணப் படத்தில் கூறுகிறார் தவமுதல்வன்.

மலேசியாவில், சிங்கப்பூரில், ‘புயலிலே ஒருதோணி’ நாவலில் சொல்லுகிற பல்வேறு நாடுகளில் படக்கூடிய பாடுகள், அ.ரங்கசாமி எழுதிய ‘நினைவுச்சின்னம்’ (சயாம் மரண ரயில்) நாவலில் சொல்லப்படும் இருப்புப் பாதை பணியின்போது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களின் வரலாறு போன்றவை சொல்ல முடியாத துயரம் செறிந்தவை. வீரம் செறிந்த போராட்டங்களையும், போராளி மாவீரன் மலேயா கணபதி கொல்லப்பட்டது போன்ற பேரிழப்புகளையும் கண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். ரப்பர் தோட்டத் தொழிலிலும் அவர்கள் பட்டபாடு குறித்து ‘நாடு விட்டு நாடு’ நூலில், முத்தம்மாள்பழனிசாமி எழுதுகிறார். நோய்வாய்ப்படுதல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறைகள் என்று துயரங்களின் பட்டியல் நீள்கிறது.

கறுப்பு ஜூலைக்குப் பிறகு, ஈழத் தமிழர்கள் உலகெங்கிலும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். மொழி, நிற, இன, அரசியல், கால நிலை, பண்பாட்டு முறிவுகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிமிர்கிற வரலாறு அவர்கள் வரலாறு.

இப்படியான சூழல்களில் இன்றைக்குத் தமிழர் வரலாற்றை எழுதினால், அது உலகத் தமிழர் வரலாறாக விரியும். கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினர் எனும் அளவுக்கு அயல் புலங்களில் வாழும் தமிழர்கள் குறித்து, 25 ஆண்டு காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிற ஒரு ஆராய்ச்சியாளராக, ஒரு கல்வியாளராக 2012-ல் நான் அளித்த ஆய்வறிக்கையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கென்று அவர்களின் நலன் பேணும் அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற ஒரு பரிந்துரையை நான் முன்வைத்திருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன்.

தமிழ்நாட்டு முதல்வர், வெளிநாடு வாழ் தமிழர் நலன் பேண ஒரு அமைச்சர், புலம்பெயர் தமிழர் நலவாரியம் என புதிய முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார். மனிதநேயத்தை விரும்பும் எல்லா தமிழர்களுடைய கனவுகளும் பலித்திருப்பதைப் போல இதை உணர முடிகிறது. உலக நாடுகளில் நீண்ட காலமாகத் தமிழ் கற்கை இருக்கைகள், ஆய்வுகள் தேங்கியிருப்பதையும் இதன் தொடர்ச்சியாக இனி புத்துயிர்க்கச் செய்யலாம். பாரதி சொன்ன, ‘கேட்டிருப்பாய் காற்றே அவர் விம்மி விம்மி விம்மி அழும் கதை’ இனி மாறும் என நம்புவோம்.

- தென்னவன் வெற்றிச்செல்வன், புலம்பெயர் தமிழர் குறித்த ஆய்வாளர். தமிழ்ப் பல்கலைக்கழக, அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: vetripoet@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்