சமத்துவமற்ற உலகில் அனைவருக்குமான மனநலம்!

By செய்திப்பிரிவு

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நம் அனைவருக்கும் உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியம், உடல் செயல்பாடு தொடர்பான ஒரு பதற்றம் வந்திருக்கிறது. “நிமிடத்துக்கு இருபது முறை இருக்க வேண்டிய சுவாச எண்ணிக்கை எனக்கு இருபத்தைந்து முறை இருக்கிறது... இது நார்மலா டாக்டர்?” என்ற சந்தேகங்கள் முளைத்திருக்கின்றன. ‘ஆரோக்கியமாக இருப்பது எப்படி?’ என்பதை அவர்கள் தங்களுக்கு வரும் தகவல்களைக் கொண்டு, சோதனை செய்து பார்க்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தின் மீது அத்தனை கவனமாக இருக்கும் மக்கள், இதில் சிறிதளவேனும்கூட மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனையானது. உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி ஆரோக்கியம் என்றால், அது ஒருங்கிணைந்த உடல், மனம் மற்றும் சமூக ஆரோக்கியமே! ஆனால், நாம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு மற்ற இரண்டையும் புறக்கணிக்கிறோம். உண்மையில், உள்ளமும் சமூகமும் ஆரோக்கியமாக இல்லாமல் உடல் ஆரோக்கியம் சாத்தியம் இல்லை.

2000-ல் ஐநா சபையின் ‘நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளில்’ பசி, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் இறப்பைத் தடுத்தல் ஆகியவற்றோடு மனநலத்தை மேம்படுத்தலும் இடம்பெற்றிருந்தது. ஏனென்றால், புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும், மாறிவரும் வாழ்க்கை முறைகளின் காரணமாகவும் மனநலச் சீர்கேடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன. மக்களை நோய்மையில் ஆழ்த்தும் ஐந்து முக்கியமான நோய்களில் ஒன்றாக மனச்சோர்வும் இடம்பிடித்திருக்கிறது. மனநோய்கள் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை உலகம் முழுக்க ஏற்படுத்துகின்றன, இளைய வயதினரின் மரணத்துக்கு முதன்மையான காரணமாகத் தற்கொலை இருக்கிறது. அது மட்டுமில்லாமல், சமீப காலங்களில் பெருகியிருக்கும் உடல்நலச் சீர்கேடுகளுக்கும் மனநலமின்மையே காரணம் என சர்வதேச சுகாதார அமைப்புகள் வலியுறுத்துகின்றன. நாடு, இனம், மொழி தாண்டி மனநலக் கோளாறுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஏழை-பணக்காரர், ஆண்-பெண் என்ற வேறுபாடுகளைத் தாண்டி, எல்லோருக்குமே வரக்கூடியவை. ஆனால், மனநலப் பாதிப்புகள் வருவதற்கான காரணங்களும், மனநலச் சேவைகளும் இப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? உலகம் முழுக்க 30% மக்களுக்கு மனநலப் பாதிப்புகள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இதில் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் எளிய மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கான எந்தச் சேவையும், சிகிச்சையும் கிடைப்பதில்லை. மனநலச் சேவைகள் வழங்குவதில் வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன என்கின்றன அந்த ஆய்வுகள்.

மனநோய்களினால் பாதிக்கப்படும் மக்களில் 80% பேர் இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் இருக்கிறார்கள். இங்கு நிலவும் சமத்துவமற்ற மனநலச் சேவைகளும், எளிய மனிதர்களின் மீது உருவாகும் சமூக அழுத்தமும், புதிய பொருளாதார நெருக்கடிகளும் பெருகிவரும் மனநலக் கோளாறுகளுக்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் அதிகமாக இருக்கும் மனநலம் மீதான எதிர்மறையான பார்வை, மனநோய் தொடர்பாகக் கொண்டிருக்கும் போலி நம்பிக்கைகள் போன்றவை சரியான மனநலச் சேவைகள் கிடைப்பதைத் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

மனநோய்களின் தாக்கமும் பாதிப்பும் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரிடமும், மொழி, இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களிடமுமே அதிகமாக இருப்பதால், மனநலச் சேவைகளுக்கான தேவையும் இவர்களுக்குத்தான் அதிகம். ஆனால், மனநலச் சேவைகளை எளிதில் பெற முடியாத நிலையிலும் இவர்கள்தான் இருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிறைந்த சமூகத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதில்லை. அதிலும், குறிப்பாக மனநலச் சேவைகள் என்று வரும்போது, விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள். மனநலச் சீர்கேடுகளினால் உண்டாகும் வேலையிழப்பு, வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பல்வேறு உடல் நோய்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்சினைகளினால் இவர்களே நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அனைவருக்கும் பொதுவான மனநல சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் வழியாகவே, சமூகத்தில் நலிவடைந்தவர்களும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பதை நம்மால் உறுதிசெய்ய முடியும்.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை “உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் உயரிய நிலையை அடைய அனைவருக்கும் உரிமை உண்டு” என்கிறது. ஒவ்வொரு சமூகமும் அதன் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் சுகாதாரச் சேவைகளை நிவர்த்திசெய்ய வேண்டும். முழு ஆரோக்கியத்தை அடைவதற்கான முயற்சிகளில் மன ஆரோக்கியத்தை முதன்மையாகக் கொள்ள வேண்டும். தனிமனித உரிமைகள், சமூகநீதி போன்றவற்றைக் கருத்தில்கொள்வதன் வழியாகவே, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் மனஆரோக்கியத்தை உறுதிசெய்ய முடியும். அதே போல மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும் மனித உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படு வதற்கான முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்.

மனம் என்பது உடலின் ஒரு அங்கமாக இருப்பதுபோல சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தின் வழியாகவே அடைய முடியும். மனதின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், அதன் ஆரோக்கிய மின்மைகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன ஆரோக்கியமின்மைகள் தனிமனிதப் பிரச்சினை மட்டுமல்ல... அது சமூகத்தின் பிரச்சினையும்கூட. எனவே, மனதைப் பற்றியோ அதன் ஆரோக்கியமின்மைகளையோ பேசுவதற்குத் தயக்கம் கூடாது. தனிமனிதரின் மன ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் முயற்சிகளை அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டும். தங்குதடையற்ற மனநலச் சேவைகள் நாட்டின் கடைக்கோடிக் கிராமத்தைச் சென்றடைவதிலும், அதைப் பெறுவதில் இருக்கும் இடையூறுகளைக் களையும் முயற்சிகளிலும் அரசு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

சமத்துவமற்ற உலகில் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகளும், அதனை மீட்டெடுப்பதற்கான சேவைகளும் எல்லோருக்கும் அத்தனை எளிதானதாகவும், சமமானதாகவும் கிடைப்பதில்லை. தனிப்பட்ட ஒருவரின் ஆரோக்கியம் என்பது அந்த தனிமனிதரின் பொறுப்பு மட்டுமல்ல, அது முழுவதும் ஒரு அரசின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அரசு உணர வேண்டும். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை உறுதிசெய்யும்போது மனநலம் அதில் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com

அக்டோபர் 10: உலக மனநல நாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 mins ago

க்ரைம்

22 mins ago

ஜோதிடம்

20 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

37 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்