பள்ளி இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

பட்டிதொட்டிகளில் இருக்கும் ஏழை எளிய பள்ளி மாணவர்களும் விரும்பிக் கல்வி கற்க முக்கியக் காரணமாக இருந்துவருவது மதிய உணவுத் திட்டம். அந்தத் திட்டத்தின் வழியே கல்வியறிவைப் பெற்று, சமூகத்தில் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உண்டாக்கிக்கொண்டவர்கள் பலர். அப்படி அன்று பசியால் வாடிய குழந்தைகளுக்கு உணவளித்து, அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, இடைநிற்றல் எனும் பிரச்சினைக்குத் தீர்வாய் அமைந்தது மதிய உணவுத் திட்டம்.

இப்படி ஒழிய வேண்டிய இடைநிற்றலை கரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. கடந்த கல்வியாண்டு முதலே கரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்திக்கொள்ள அரசு அனுமதியளித்தது. ஆனால், இன்னமும் பல கிராமங்களை இணைய வசதியும் இன்னபிற தொழில்நுட்ப வசதிகளும் சென்றடையவில்லை. மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவைப்படும் திறன்பேசிகளை (ஸ்மார்ட் போன்) அனைத்துப் பெற்றோராலும் தங்களின் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிட முடியாத பொருளாதாரச் சூழ்நிலையே நிலவுகிறது. இந்தப் பிரச்சினைகளைக் களையும் வகையில் தமிழ்நாடு அரசால் கல்வித் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் இந்த இடைநிற்றல் என்பது குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் என பல பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவருகிறது. குறிப்பாக, ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்குத் திருமணம் செய்துவைப்பதும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் பல இடங்களிலும் அதிகரித்திருக்கின்றன.

குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு, பள்ளி மாணவர்கள் பலரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர். அதில் சில மாணவர்கள் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்துப் பழக ஆரம்பித்துவிட்டால், நாம் ஏன் படிக்கச் செல்ல வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிக்கொள்கின்றனர். இது மிக ஆபத்தான போக்குக்கு வழிவகுத்துவிடும். கரோனா பரவலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாள் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழ்நாட்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2017-18 கல்வியாண்டில் மட்டும் 16% பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் – அதிலும் குறிப்பாக 2015-16 கல்வியாண்டில் 8%ஆக இருந்த இடைநிற்றல், 2017-18-ல் 16%ஆக அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இப்போதைய நிலையில், இடைநிற்றல் என்பது மேலும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும் கடந்த ஆண்டு தேசியப் புள்ளியியல் அலுவலகமும் இடைநிற்றல் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தது. புள்ளிவிவரக் கணக்குப்படி 62% இடைநிற்றல் என்பது பள்ளி அளவிலேயே ஏற்படுகிறது என்றும் நடுநிலை வகுப்புகளில் 17.5%, உயர்நிலை வகுப்புகளில் 19.8%, மேல்நிலை வகுப்புகளில் 9.6%, கல்லூரியின் இளநிலை வகுப்புகளில் 5.1% இடைநிற்றல் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதிக அளவிலான இடைநிற்றல் உயர்நிலை வகுப்புகளில் ஏற்படுகிறது என்பதைப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில், குறிப்பாக ஆண் மாணவர்கள் பொருளாதாரரீதியாகக் குடும்பத்தின் தேவையைப் பூர்த்திசெய்யவும், மாணவிகள் வீட்டு வேலை, திருமணம் போன்ற சூழ்நிலை காரணமாகவும் பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொள்வதாகத் தெரிவிக்கிறது. மொத்தத்தில், எட்டில் ஒரு மாணவர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திக்கொள்வதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.

இப்படி அதிகரித்துவரும் இடைநிற்றலைத் தற்போதைய நிலையில் தடுத்து நிறுத்துவது சவாலான பணியே. ஆயினும், அதைச் செய்தாக வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்துக்கும் அதனை வழிநடத்திச் செல்லும் அரசுக்கும் உள்ளது. அதற்கான சில வழிமுறைகள்:

இடைநிற்றலுக்கான காரணத்தை அறிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஆந்திர அரசு 2018-19 கல்வியாண்டில் சில தரவுகளைச் சேகரித்தது. அதாவது, பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, செயல்திறன், பாலினம், சமூக-பொருளாதாரக் காரணிகள், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் திறன் போன்றவற்றைச் சேகரித்தது. அதன் மூலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 19,500 மாணவர்கள் இடைநிற்பதற்கு வாய்ப்பிருப்பதை முன்பே கண்டறிந்தது. மேலும், அந்த மாவட்டத்தில் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களாகப் பள்ளிகளில் அமர போதிய இருக்கை வசதி இல்லை, கழிப்பறை வசதி இல்லை என்பதுடன் மாணவர்களின் செயல்திறன், உள்கட்டமைப்பில் தேவையான மாற்றம் என சிலவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வை மேற்கொண்ட குழு அரசுக்கு அறிவுறுத்தியது. எனவே, தற்போதைய நிலையில் மாணவர்களின் இடைநிற்றலுக்கான சமூகக் காரணிகளை அறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம்.

சில இடங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் மாணவர்களிடையே இடைநிற்றலைப் போக்குவதற்குச் சில முயற்சிகளைக் கையாள்கின்றனர். ஈரோடு மாவட்டத்தின் வளையபாளையம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ந.கு.தனபாக்கியம், ஊரடங்குக் காலத்தில் மாணவர்கள் சிலரை அவர்களுக்குப் பிடித்த தலைப்பில் புத்தகம் எழுத வைத்து, படைப்பாளர்களாக ஆக்கியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகள் மாணவர்களிடையே கல்வியின் நாட்டத்தை இடைவிடாது தக்கவைத்துக்கொள்ள உதவும்.

குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையே சில மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கிறது. அதனைப் போக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும்போதே பள்ளிகளில் ஏதேனும் அமைப்புடன் சேர்ந்து தொழிற்கல்வியை ஊக்குவிக்கலாம். கரூர் மாவட்டத்தில் இருக்கும் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி அங்குள்ள அரசுப் பள்ளிகளில் கோழி வளர்ப்பு மூலம் மாணவர்களிடையே சிறுசேமிப்புப் பழக்கத்தை உண்டாக்கி, பின்னாளில் கோழி வளர்ப்பு மூலம் அவர்கள் வருமானம் ஈட்டிட வழிவகுத்துவருகிறது.

மாவட்ட மற்றும் மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில், போதிய அளவிலான பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் இடைநிற்றலைப் போக்குவதற்கு உதவி புரிய வேண்டும். எனவே, இடைநிற்றலைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே கல்வியில் சிறந்த சமூகத்தை நம்மால் உருவாக்கிட முடியும்.

- செ.சரத், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: saraths1995@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

19 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

4 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

மேலும்