என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?

By செய்திப்பிரிவு

சமூகத்தில் தொடர்ந்து அவமதிப்புகளைச் சந்தித்து வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள், சவால்களை மற்றவர்களால் அத்தனை எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை. சக மனிதர்களாக அணுகப்படாமல் தனித்தே அடையாளம் காணப்பட்ட சூழல் ஓரளவுக்கு மறைந்துவரும் நிலையில், அவர்கள் அடைய வேண்டிய உரிமைகள் பல கைக்கெட்டாத தொலைவில்தான் இன்னும் இருக்கின்றன. சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க அரசு செய்ய வேண்டியவை என்ன?

கல்கி சுப்ரமணியம், பொள்ளாச்சி.

வயது முதிர்ந்த திருநங்கைகளுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை. அரசு முதியோர் இல்லங்களில் அவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம், இறந்துவிட்டால் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்வது போன்றவற்றை அரசு செய்யும் என்று நம்புகிறோம். மூன்றாம் பாலினத்தவரைப் பற்றிய சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கல்வியைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்.

காவ்யா, சென்னை.

திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டது ஒரு நல்ல முயற்சி. எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முதல் பல நல்ல விஷயங்கள் கிடைத்தன. ஆனால், தற்போது அந்த நலவாரியம் சரியாகச் செயல்படுவதில்லை. எங்களது பாலினத்தை ‘பெண்’ என்று அடையாளப்படுத்தும்போது எங்களது எண்ணிக்கை குறித்த தகவலில் பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன. சில விண்ணப்பப் படிவங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்பதற்கான குறியீட்டுப் பெட்டி இருக்கிறது. எல்லா படிவங்களிலும் அது பரவலாக்கப்பட வேண்டும்.

குணவதி, திண்டுக்கல்.

திருநங்கைகளுக்குக் கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் எங்கள் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.

ஷீத்தல், புதுச்சேரி.

நால்ஸா தீர்ப்பில் பாலின மாறுபாடு அடைந்தோரை மனிதநேயத்துடன் பாதுகாத்து அவர்களுக்கான உரிமைகளை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்கான முயற்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். மாநிலங்களவையில் ஆங்கிலோ- இந்தியர்களுக்கு ஒதுக்கீடு தரப்படுவதுபோல் திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு தரப்பட்டால், எங்கள் பிரச்சினைகளைப் பேசச் சந்தர்ப்பம் கிடைக்கும்!

ஆல்கா, சென்னை.

குடும்பம், சமூகம், பள்ளி என்று பல்வேறு இடங்களில் அவமதிப்புகளைத் திருநங்கைகள் எதிர்கொள்கிறார்கள். இவற்றைத் தடுக்க, ‘குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை’ எனும் கொள்கையைக் கொண்டுவர வேண்டும். ‘மாறிய பாலுணர்வு கொண்ட குழந்தைகள்’ எனும் வகைப்பாட்டின் கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை இதில் இணைக்க வேண்டும். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திருநங்கைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஜீவா, சென்னை.

திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி செய்துதர வேண்டும். பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். திருநங்கைகளை அவமதிப்பவர்கள், கேலி கிண்டல் செய்பவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தெளிவான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

மாளவிகா, நாமக்கல்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அரசுத் துறையில் வேலை கொடுக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அரசுத் துறையில் வேலை கொடுக்கத் தொடங்கினால் தனியார் நிறுவனங்களிலும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். கிடைக்கும் குறைந்த சம்பளத்தில் அன்றாட வாழ்க்கையை ஓட்டிவிட முடியும் என்றாலும், எதிர்காலத்தில் எங்களுக்கென்று எந்தச் சேமிப்பும் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அரசு வேலைதான் பாதுகாப்பு அளிக்கும்.

சுதா, சென்னை.

குடும்ப அளவில் திருநங்கைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆதரவுடன் நடத்தும் வகையில், சட்டம் கொண்டுவர வேண்டும். எங்களுக்கென்று தனியாக ரேஷன் கார்டு வழங்குவதற்குப் பதிலாக, எங்கள் குடும்பத்துடனே நாங்கள் இணைத்துவைக்கப்பட்டால் அது மிகுந்த மகிழ்ச்சி தரும். ஐஏஎஸ் அதிகாரிகள்தான் பல திட்டங்களுக்கு வழி வகுக்கிறார்கள். திருநங்கைகள் பற்றிய புரிதல் அவர்களிடம் ஏற்படுத்தினால், எங்கள் பிரச்சினைகளை அவர்கள் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். அரசியலில், தேர்தலில் எங்களுக்குக் குறிப்பிடத் தக்க இடம் கொடுக்க வேண்டும்.

பிரேமா, கோவை.

திருநங்கைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். டாக்ஸி ஓட்டுதல் போன்ற சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்குக் கடன் உதவி வழங்க வேண்டும். திருநங்கைகளுக்கு எல்.ஐ.சி. பாலிசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வயதான திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கும் சேர்த்து இளம் திருநங்கைகள்தான் சம்பாதிக்கிறார்கள். முதிய திருநங்கைகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும்.

லிவிங் ஸ்மைல் வித்யா, சென்னை.

திருநங்கைகளை மூன்றாம் பாலினம், நான்காம் பாலினம் என்றெல்லாம் வகைப்படுத்திக் கொண்டிருக்காமல், எங்களைச் சக மனிதர்களாக நடத்தும் எண்ணம் உருவாக வேண்டும். அதை நோக்கிய செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். கண்துடைப்பு நடவடிக்கைகளை விட்டுவிட்டு, திருநங்கைகளின் பாதுகாப்பு தொடர்பாக தெளிவான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்