ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்பாட்டில் ஒரு சமூக அநீதி!

By கு.கணேசன்

நாட்டில் கரோனா இரண்டாம் அலைத் தாக்குதலில் பல அசாதாரண சூழல்களைக் காண்கிறோம். மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை, படுக்கைகள் இல்லை என்பதோடு, பயனாளிகளே ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் எனும் அளவுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மோசமாகியுள்ளது. எந்த நாட்டிலும் இல்லாமல் நம் நாட்டில்தான் ஆம்புலன்ஸ்களில் மட்டுமில்லாமல், பொதுப் பேருந்துகளிலும் ரயில்களிலும் ஆட்டோக்களிலும்கூட ஆக்ஸிஜன் உருளைகள் பொருத்தப்பட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது ஏன்?

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பயனாளியின் நுரையீரல்கள் தாக்கப்படும்போது அழற்சி வீக்கத்தாலும் நுண்ணிய ரத்த உறைவுகளாலும் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது. இதனால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த நிலைமையைச் சரிக்கட்ட மருத்துவச் சிகிச்சைகளுடன் ஆக்ஸிஜன் உருளைகள் கொண்டு ஆக்ஸிஜன் வழங்கப்படுவது நடைமுறை. இப்படி வழங்கப்படும் ஆக்ஸிஜன் அளவு பயனாளியின் தேவையைப் பொறுத்து அமையும்.

கரோனா முதல் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் குறைவாகவே இருந்தனர். இரண்டாம் அலையில் கரோனா பரவும் வேகமும் அதன் தீவிரமும் மிக அதிகம் என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கான சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்திருக்கிறது. அதனால், ஆக்ஸிஜன் உருளைகளும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. அவற்றைத் தேவைக்கு விநியோகிப்பது பெரும் சவாலாக இருப்பதாகப் பிரதமரே அறிவித்திருக்கிறார்.

ஒன்றிய அரசின் புள்ளிவிவரப்படி முதல் அலையில் நாடு முழுவதிலும் ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்கள் 41% என்றால், இரண்டாம் அலையில் அது 55% ஆக அதிகரித்திருக்கிறது. இந்தத் தேவையை நிவர்த்திக்கும் அளவுக்கு நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படவில்லை. கரோனா இரண்டாம் அலையை எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அரசுகள் எதிர்கொள்வதால், ஆக்ஸிஜன் உரிய நேரத்தில் கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலேயே உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

ஆக்ஸிஜன் செறிவூட்டி

இந்த ஆபத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்க, ஆக்ஸிஜன் உருளைகளுக்கு மாற்றாக ‘ஆக்ஸிஜன் செறிவூட்டி’களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைமைதான் இருக்கிறது. இன்றைய சூழலில், நாட்டில் கிடைக்கிற ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைத் தொற்றாளர் தேவைக்கு வாங்குவதற்கு மருத்துவமனைகள் முன்னெடுப்பது சரிதான். அதே நேரத்தில், வசதிபடைத்தவர்கள் தங்கள் சுயதேவைக்கு முன்னெச்சரிக்கையாகச் செறிவூட்டிகளை வாங்கிவைக்க முற்படுவது சரியா?

‘ஆக்ஸிஜன் செறிவூட்டி’ என்பது சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்துத் தேவைப்படுபவர்களுக்கு அளிக்க உதவும் ஒரு மருத்துவக் கருவி. வளிமண்டலக் காற்றில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், 1% பிற வாயுக்களும் கலந்துள்ளன. ஆக்ஸிஜன் செறிவூட்டியானது வளிமண்டலக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை ஒரு சல்லடை மூலம் வடிகட்டிச் சேமிக்கிறது. ‘ஸியோலைட்’ (Zeolite) எனும் வேதிப்பொருளானது நைட்ரஜனை உறிஞ்சி வெளியேற்றிவிடுகிறது. இப்படிச் செறிவூட்டிச் சேமிப்பதில் 90-95% வரை செறிவுற்ற ஆக்ஸிஜன் உள்ளது. இதைப் பயனாளிக்கு ஒரு குழாய் மூலம் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் மூக்கு வழியாகச் செலுத்துகின்றனர்.

ஆக்ஸிஜன் உருளைகளைத் தொடர்ந்து இயக்க முடியும். அதிக ஆக்ஸிஜனைத் தர முடியும். தீர்ந்த உருளைகளில் மறுபடியும் ஆக்ஸிஜனை நிரப்பிப் பயன்படுத்த முடியும். இவற்றை இயக்க மின்சாரம் தேவையில்லை. செலவு குறைவு. மாறாக, செறிவூட்டிகள் மின்சாரத்திலும் பேட்டரியிலும் இயங்கும் வகையில் உள்ளன. நிமிடத்துக்கு 5 லிட்டர் அல்லது 10 லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் உள்ளன. 8 மணி நேரம் பயன்படுத்திய பிறகு இவற்றுக்கு அரை மணி நேரம் ஓய்வு தர வேண்டும். செலவு அதிகம்தான். ஆனால், ஒருமுறை செய்யப்படும் முதலீடு மட்டுமே; மறுபடி செலவில்லை.

யாருக்குப் பயன்படும்?

பொதுவாக, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் செறிவு 94%-க்கும் குறைவாக இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட வேண்டும். 92% வரை ஆக்ஸிஜன் செறிவு உள்ள பயனாளிகள் குப்புறப்படுத்துச் சமாளிக்கலாம். அதற்கும் கீழ் என்றால், ஆக்ஸிஜன் அவசியப்படும். தற்போது பல மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் உருளைகள், படுக்கைகள் கிடைப்பது சிரமமாக இருப்பதால், ஓர் அவசரத்துக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வீட்டிலேயே பயன்படுத்திப் பலனடையலாம்; ஆனால், மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ள தொற்றாளர்களுக்குப் பயன்படுத்த முடியாது.

பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் செறிவு 88-92% வரை காண்பிக்கும் மிதமான தொற்றாளர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வரை செறிவூட்டிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவர்களுக்கு நிமிடத்துக்கு 5-10 லிட்டர் ஆக்ஸிஜன்தான் தேவைப்படும். ஆகவே, இந்த அளவில் உள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இவர்களுக்குப் பயன்படும். ஆனால், 88%-க்கும் கீழ் ஆக்ஸிஜன் செறிவுள்ள தீவிரத் தொற்றாளர்களுக்கு இவை பயன்படுவதில்லை. இவர்களுக்கு 100% செறிவுள்ள ஆக்ஸிஜன் தேவைப்படும். மேலும், நிமிடத்துக்கு 40-50 லிட்டர் வரை ஆக்ஸிஜன் செலுத்தப்பட வேண்டிய அவசியமும் ஏற்படலாம். ஆகவே, கரோனா பாதிப்பு மோசமாக இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மூலம் வீட்டிலேயே சிகிச்சை அளிப்பது பலன் தராது என்பது மட்டுமல்ல; ஆபத்தையும் அதிகரித்துவிடும். அதனால்தான், இவற்றை ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் பயன்படுத்த வேண்டும் என்கிறோம்.

சமூக அநீதி

நாட்டில் ஆக்ஸிஜன் உருளைகள் பற்றாக்குறை கடுமையாகிவரும் இந்தக் காலகட்டத்தில், மிதமான கரோனா தொற்றாளர்களுக்குத் தக்க நேரத்தில் கைகொடுப்பவை ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்; கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும் இந்த நேரத்தில், உடனடியாகத் தேவைப்படும் உயிர்காப்பான்கள். இவை அத்தியாவசியப்படுபவர்களுக்கே இன்னும் கிடைக்காதபோது, தங்களுக்குத் தேவைப்படலாம் என்ற ஊகத்தில், வசதி படைத்தோர் பலர் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது பதுக்கலுக்குச் சமமான ஒரு சமூக அநீதி. செறிவூட்டிகளின் விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும் சமூகக் குற்றமும்கூட.

இதை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேவையானவர்களுக்குக் கிடைப்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். அடுத்ததாக, செறிவூட்டிகள் பயன்பாட்டுக்கு வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அறிவித்து, ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும், அவை தாராளமாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியதும் அரசுகளின் கடமை.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்