கி.துளசி அய்யா: ஒரு முன்னுதாரணக் கல்வியாளர்

By செல்வ புவியரசன்

காவிரிப் படுகையின் மிகப் பெரிய துக்கம், பூண்டி துளசி அய்யாவின் (1929-2021) மறைவு. ‘கல்வி வள்ளல்’ என்ற அடைமொழி அவரைப் போன்ற ஒருசிலராலேயே உண்மையில் பொருள் துலங்குகிறது. அரை நூற்றாண்டு காலம் அவரது நிர்வாக வழிகாட்டலின் கீழ் இருந்த பூண்டி புட்பம் கல்லூரியில் இதுவரை எந்த மாணவரிடத்திலிருந்தும் நன்கொடைகள் பெறப்பட்டதில்லை. அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டுவருகிறது. தவிர, ஆண்டுக்கு நூறு மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிச் செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரிகளில் பலரும் அவரது கல்லூரியில் படித்தவர்கள்தான்.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் என்றாலும், கல்விக்கான தரத்தில் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. பெருநகரங்களின் பிரபலக் கல்வி நிறுவனங்களுக்கு இணையான நவீன உட்கட்டமைப்பு வசதிகளை வயல்வெளியின் நடுவே மரங்கள் அடர்ந்த ஒரு வளாகத்துக்குள் அவர்உருவாக்கினார். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்களை உருவாக்கிய முன்னோடிக்கல்வி நிறுவனங்களில் பூண்டி கல்லூரியும் ஒன்று.1990-களின் இறுதியில் கணினி அறிவியலுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புக் கவனம், தஞ்சைஇளைஞர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தந்தது. வணிகவியல், நிர்வாக மேலாண்மை படித்தவர்களும் இன்று அத்தகைய பரந்துபட்ட வாய்ப்புகளைப் பெற்றுவருகிறார்கள். மிகச் சிறந்த நூலகம் மட்டுமின்றி அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு மைதானத்தையும் அவர் உருவாக்கினார்.

அரசியல் பாரம்பரியம்

தஞ்சையின் சமூக, பொருளாதார வரலாற்றில் 20-ம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு பூண்டி புட்பம் கல்லூரியின் பங்களிப்பு முதன்மையானது. தஞ்சையின் செல்வாக்கு பெற்ற பெருநிலக்கிழார்களான பூண்டி வாண்டையார் சகோதரர்கள் அ.வீரையாவும் அ.கிருஷ்ணசாமியும் 1956-ல் ஒரு பெருங்கனவோடு தொடங்கிய பூண்டி கல்லூரி அதற்கான நோக்கத்தை எட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்குக் கல்வி வழங்குவதற்காகவே பூண்டி புட்பம் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டின் காரணமாகக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு கிடைக்காத முற்பட்ட வகுப்பினரின் புகலிடமாகவும் அந்தக் கல்லூரியே இருந்துவந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் உண்ணும் ஏற்பாட்டைச் செய்திருந்தார் அப்போதைய ஜில்லா போர்டு தலைவரான ஏ.டி.பன்னீர்செல்வம். மாணவர்கள் தனித்தனியாக உண்ணும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த நடவடிக்கையை அதன் பின்பு ஜில்லா போர்டு அங்கத்தினர்களாக வந்த பட்டுக்கோட்டை நாடிமுத்துவும் பூண்டி கிருஷ்ணசாமியும் தங்களால் இயன்ற அளவு தொடரச்செய்தனர். தனிப் பந்தி முறைக்கு எதிரானவரான கிருஷ்ணசாமி தொடங்கிய கல்லூரி, முற்பட்ட வகுப்பினரின் கல்வி வாய்ப்புகளையும் பாதுகாத்தது என்பது காலத்தின் விநோதம்.

கல்வி விற்பனைக்கல்ல

கிருஷ்ணசாமியின் மறைவுக்குப் பிறகு கி.துளசி அய்யா கல்லூரியின் பொறுப்பை 1970-களில் ஏற்றுக்கொண்டார். சென்னை லொயோலா கல்லூரியில் படித்தவரான துளசி அய்யாவின் பூண்டி கல்லூரி நிர்வாகம் பற்றிய கதைகள் தஞ்சை மண்ணெங்கும் உலா வந்துகொண்டிருக்கின்றன. அவர் தாளாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில், எந்த வகுப்புக்கு ஆசிரியர் வரவில்லை என்றாலும், அவரே பாடங்களை நடத்தத் தொடங்கிவிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அரசு உதவிபெறும் கல்லூரியை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக்குவதற்கான முயற்சிகளை அவர் கவனமாகத் தவிர்த்தே வந்தார். சுயநிதி முறையில் இயங்கும் படிப்புகளைத் தொடங்கினால் மாணவர்களிடம் அதிக அளவில் கல்விக் கட்டணங்களை வாங்க வேண்டியிருக்கும்; அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதே காரணம்.

கல்லூரித் தாளாளர் என்பதைப் போலவே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளராகவும் மக்களவை உறுப்பினராகவும் பதவிகளை வகித்திருக்கிறார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், தஞ்சையின் பெருநிலக்கிழார்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் இருந்த பலரின் பெயர்கள் இன்று காலவோட்டத்தில் நினைவழிந்துபோன நிலையில், அரசியலிலும் அவர் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் ஏற்றுக்கொண்ட விழுமியங்களை இறுக்கப் பிடித்திருந்தது மட்டுமே அதற்குக் காரணம்.

விட்டுக்கொடுக்காத விழுமியங்கள்

தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் தேசியத் தலைவர்களிடம் வலிந்து சென்று இணக்கத்தைப் பேணும் அணுகுமுறையைக் கொண்டவர் அல்லர் அவர். அவரது சமகாலத்தவர்களில் சிலர் இத்தகைய அணுகுமுறையால் டெல்லியின் செல்வாக்கு பெற்றவர்களாக உலாவந்துகொண்டிருந்தபோது ஒரு நிலக்கிழாருக்கான தோரணையைச் சற்றும் விட்டுக்கொடுக்காதவராக அவர் தனது எல்லையைத் தஞ்சைக்குள்ளேயே சுருக்கிக்கொண்டிருந்தார். அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் அந்த மிடுக்கு உண்டு. கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் மீதும் அத்தகைய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்தினார். ஆனால், வருடாந்திரக் கலை விழாக்களில் அவர்களது உற்சாகத்தை ரசிப்பவரும்கூட.

கல்வி, அரசியல் இரண்டு துறைகளிலும் நேரம் தவறாமையை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்தவர் அவர். எந்தவொரு நிகழ்ச்சிக்குத் தேதி ஒதுக்கினாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அவர் வருகைதந்துவிடுவார். அவரது கல்லூரிமாணவர்கள் பலரும் அவரது தலைமையில் திருமணம் செய்துகொள்வதை விரும்பினார்கள். சரியான நேரத்துக்கு வருகை தந்து, மணமக்களை வாழ்த்திவிட்டு, தனது கையெழுத்தாலான வாழ்த்து மடலையும் பரிசுப் பொருளையும் அளித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மாணவர்களின் அன்புக்கு எப்போதும் பாத்திரமானவராக அவர் இருந்தார்.

அரசியலைப் பொறுத்தவரை நடைமுறைவாத சமரசங்களிலிருந்து அவர் விலகியே இருந்தார். மக்களவை உறுப்பினராக துளசி அய்யாபதவி வகித்த நாட்களில் அவரை நாடிவரும் எந்தவொரு கோரிக்கைக்கும் உடனடியாகப் பதிலளித்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சாத்தியமான கோரிக்கை எனில், நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார். அதற்கு வாய்ப்பில்லை என்றால் அதையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிடுவார். பார்க்கலாம், முயன்றுபார்ப்போம் என்பதுபோல சமாதானங்களைச் சொல்லியனுப்பும் அணுகுமுறை அவருக்கு இல்லை.

தன்னைச் சந்திக்கக் காத்திருப்பவர்களில் எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கே அவர் முன்னுரிமை கொடுப்பார். அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார். தஞ்சை விவசாயிகள் போராட்ட வரலாற்றில் பெருநிலக்கிழார்களுக்கு எப்போதும் எதிர்நாயக அந்தஸ்துதான். அதிலிருந்து விடுபட்ட மிகச் சிலரில் கி.துளசி அய்யாவும் ஒருவர்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்