உண்மையை மறைப்பதால் கரோனாவை வெல்ல முடியாது

By செய்திப்பிரிவு

தற்போது உலகிலேயே மிகத் தீவிரமாக கரோனா பரவிவரும் நாடு இந்தியா. மூன்று நாட்களுக்கு ஒரு முறை 10 லட்சம் புதிய தொற்றுகளும் 10 ஆயிரம் இறப்புகளும் ஏற்படுகின்றன. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவிக்கும் தரவுகளின் படி. இந்தியாவைத் தற்போது சூறையாடிக்கொண்டிருக்கும் இரண்டாவது அலையின் தீவிரமானது அதிகாரபூர்வ எண்ணிக்கைகள் உணர்த்து வதைவிட மிகவும் மோசமாக இருக்கும்.

காரணங்கள்

எல்லா கரோனா தொற்றுகளையும் கரோனா இறப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? அறிகுறியற்ற தொற்றுகள், பரிசோதிப்பதற்கான செலவு, போக்குவரத்து போன்ற தடைகள், சமூக விலக்கம் குறித்த தயக்கத்தால் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பது, பரிசோதனை வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாமை போன்ற பல காரணங்களால் எல்லாத் தொற்றுகளையும் கணக்குக்குள் கொண்டுவர முடிவதில்லை. மருத்துவமனைக்கு வெளியே நிகழும் கரோனா இறப்புகள், கரோனாவிலிருந்து குணமடைந்தாலும் முன்பே இருந்த இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற துணைநோய்களால் நிகழும் இறப்புகள் தவறவிடப்படுகின்றன. இறப்புகளைத் தெரிவித்தல், இறப்புக்கான காரணத்துக்குச் சான்று வழங்குதல் போன்றவற்றைப் பொறுத்தவரை இந்தியா மோசமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது; குறிப்பாக, கிராமப்புறங்களில். 2017-ல் செய்யப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, ஐந்தில் ஒரு இறப்புதான் மருத்துவரீதியில் கணக்கில் கொள்ளப்படுகிறது.

கணக்கில் வராத தொற்று எண்ணிக்கையை எப்படிச் சரிபார்ப்பது? தொற்றுகள் எந்த அளவில் குறைத்துக் காட்டப்படுகின்றன என்பதை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீரோசர்வேக்களுடன் (serosurveys) ஒப்பிட்டுச் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட மூன்றாவது சீரோசர்வேயானது (டிசம்பர் 17, 2020-லிருந்து ஜனவரி 8, 2021 வரை) 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 21.5% பேரின் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பணுக்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இவர்களுக்குக் கடந்த காலத்தில் தொற்று இருந்திருப்பதை இது உணர்த்துகிறது. இந்தியாவின் 136 கோடி மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏறத்தாழ 59%. இந்தக் கணக்கில் பார்த்தால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 17.3 கோடிப் பேருக்கு இதுவரை தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும். ஜனவரி 8 வரை அரசு தெரிவித்த தொற்றுகளின் எண்ணிக்கை 1.10 கோடி என்பதை வைத்துப் பார்த்தால், இந்தியாவின் கரோனா தொற்றுகளில் 6% மட்டுமே கணக்கில் வருகிறது.

இறப்புகள் குறித்த தரவுகள்

கணக்கில் வராத இறப்புகளின் எண்ணிக்கையை எப்படி அளவிடுவது: முதல் அலையின்போது செய்தித்தாள்களில் வெளிவந்த இரங்கல் குறிப்புகளைத் தன்னார்வலர் குழு ஒன்று சேகரித்தது. அரசு வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையுடன் அதை ஒப்பிட்டபோது இறப்பு எண்ணிக்கை இரு மடங்கு இருந்ததை அந்தக் குழு கண்டறிந்தது. ஏப்ரலின் நடுப்பகுதியில் குஜராத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொடர்பான இறப்புகள் 73-121 என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்ததையும், குஜராத்தின் முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘சந்தேஷ்’ அந்த மாநிலம் முழுவதிலும் உள்ள சுடுகாடுகளுக்கும் இடுகாடுகளுக்கும் செய்தியாளர்களை அனுப்பி விசாரித்ததில் ஒவ்வொரு நாளும் 600 இறப்புகள் நிகழ்ந்ததாகச் செய்தி வெளியிட்டிருந்ததையும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

கரோனா இறப்புகள் எந்த அளவுக்கு அதிகம் என்பதைக் கண்டறிய ஒரு வழி, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும், கடந்த காலத்தில் அதே பிரதேசத்தில் அதே காலகட்டத்தில் எவ்வளவு இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் ஒப்பிடுவதுதான். கூடுதல் இறப்புகளைக் கண்டறியும் இந்த உத்தியை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பின்பற்றியிருக்கின்றன (அமெரிக்காவில் 2020-ல் 22% கூடுதல் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன, இவற்றில் 72% இறப்புகள் கரோனா காரணமாக நிகழ்ந்தவை). இந்தியா இதுபோன்ற காலரீதியிலான ஒப்பீட்டை நிகழ்த்தவில்லை. 2020 தொடர்பாகப் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் தற்போதைய கணக்கீட்டுக்கு உதவுவது எந்த வகையிலும் சாத்தியமில்லை.

இந்தியாவில் பரிசோதனைகள்

இந்தியாவில் எந்த அளவுக்குப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அமெரிக்காவை, அதாவது கரோனா தொற்றுகள் அங்கே உச்சத்தை எட்டிய ஜனவரி காலகட்டத்தை (நவம்பர் 1 – பிப்ரவரி 15), இந்தியாவின் தற்போதைய தொற்று அதிகரிப்புக் காலகட்டத்துடன் (மார்ச் 28 – ஏப்ரல் 27) ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவின் தினசரி தொற்று கண்டறிதல் விகிதம் (test positivity rate) 25% ஆகவும், அமெரிக்காவில் இது 15% ஆகவும் இருக்கிறது. அமெரிக்காவில் பரிசோதனைகளும் தொற்றுகளும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கிறது என்றால், இந்தியாவில் பரிசோதனைகள் அதிகரிக்கும் விகிதத்தைவிட தொற்றுகள் அதிகரிக்கும் விகிதம் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் போதுமான அளவு பரிசோதனைகள் நடத்தப்படவில்லை.

தொற்றுகள், இறப்புகள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதால் என்ன பிரச்சினை? தற்போது, உச்சத்தைத் தொடும் தொற்றாலும் இறப்பு எண்ணிக்கைகளாலும் நாடு அதிர்ந்துபோயிருக்கிறது. கரோனா இந்த அளவுக்கு அதிகரித்துக்கொண்டே வருவது நம் மருத்துவக் கட்டமைப்பைத் தள்ளாட வைத்திருக்கிறது. முக்கியமான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை, நோயாளிகளைத் திருப்பியனுப்பும் நிலைக்கு மருத்துவமனைகள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆக்ஸிஜன், மருத்துவமனைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்றவை எந்த அளவுக்குத் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பயனுள்ள தரவுகள் இல்லாமல் துல்லியமான கணிப்புகளைச் செய்வது கடினம். உண்மை நிலை என்ன என்பதை அறிவது மக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பெருந்தொற்றின் உண்மையான நிலையை அறிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவும்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்